அரசியல்

இந்தியாவின் ஒரே மொழி இந்திதான் என்று சொல்லி அரசியல் செய்தவர்தான் அமித்ஷா - முரசொலி விமர்சனம் !

மொழியை வைத்து அரசியல் செய்யாதீர்கள்” என்கிறார் அமித்ஷா. மொழியை வைத்து அரசியல் செய்பவர் அவர்தான்!

இந்தியாவின் ஒரே மொழி இந்திதான் என்று சொல்லி அரசியல் செய்தவர்தான் அமித்ஷா - முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (25-03-2025)

ஹிந்தி ஷா இப்படிச் சொல்லலாமா ?

ஹிந்திஷாவான அமித்ஷா அவர்கள், மொழியை வைத்து ஒரு பாடம் எடுத்துள்ளார். முதலில் அப்படி ஒரு பாடம் எடுக்க அவருக்குத் தகுதி இருக்கிறதா? ஒன்றிய அமைச்சரான அவர் இந்தியஷாவாக இருக்க வேண்டும். மாறாக ஹிந்திஷாவாக எப்போதும் இருப்பவர் அவர்தான்.

கடந்த 21 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஒன்றியஉள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சு அவருக்குதான் மிகமிகப் பொருத்தமானது ஆகும். “மொழியை வைத்து அரசியல் செய்யாதீர்கள்” என்கிறார் அவர். மொழியை வைத்து அரசியல் செய்பவர் அவர்தான்!

“மொழியின் பெயரில் நாட்டில் ஏற்கனவே ஏராளமான பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இது மேலும் அதிகரிக்கக் கூடாது” என்று சொல்லி இருக்கிறார் அமித்ஷா. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதைத் தான் சொல்கிறார் என்று நினைக்கிறோம். மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்டதால் தான் இந்தியா அமைதியாக இருக்கிறது என்பதை உள்துறை அமைச்சர் அவர்கள், கடந்த கால வரலாறுகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் ஒரே மொழி இந்திதான் என்று சொல்லி அரசியல் செய்தவர்தான் அமித்ஷா - முரசொலி விமர்சனம் !

1900 – 1956 வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மொழி வழிப் போராட்டங்கள் நடந்துள்ளன. இந்த வரலாற்றை அவர் முதலில் படிக்க வேண்டும். இதனடிப்படையில் தான் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இந்தியா அமைதியாக ஆனது. ஆனால் அதனை பிளவுகள் என்கிறார் அமித்ஷா.

மொழியை வைத்து பிளவுபடுத்தக் கூடாது என்று சொல்லி விட்டு, அடுத்த வரியே பிளவுபடுத்தும் சொற்களை அமித்ஷாவே உதிர்த்துள்ளார். “பிறமொழிகளுக்கு இந்தி போட்டியான மொழியல்ல, நட்பான மொழி” என்கிறார் அமைச்சர். எதற்காக இந்திக்கு மட்டும் வால் பிடிக்க வேண்டும்? அதற்கு மட்டும் ஏன் பி.ஆர்.ஓ. வாக உள்துறை அமைச்சர் மாறுகிறார்? ஏனென்றால் இந்தியைப் புகுத்தி இந்தியாவை பிளவுபடுத்த நினைப்பதே அவரது உண்மையான எண்ணம் ஆகும்?

கடந்த ஐந்தாண்டு காலமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னதை நினைவுபடுத்திப் பாருங்கள்.

*2019 ஆம் ஆண்டு, 'இந்தியாவின் ஒரே மொழி இந்தி தான்' என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். உடனே, ‘இக்கருத்தை திரும்பப் பெற வேண்டும், இல்லாவிட்டால் மீண்டும் 1965 வெடிக்கும்' என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். இதைத் தொடர்ந்து அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தி.மு.க. தலைவரை அழைத்துப் பேசினார். 'உள்துறை அமைச்சர் அந்தப் பொருளில் பேசவில்லை என்கிறார்' என்று ஆளுநர் விளக்கம் அளித்தார். மிகப்பெரிய போராட்டம் நடக்க இருப்பதை அறிந்து, 'அப்படிப் பேசவில்லை' என்று மழுப்பினாரே தவிர, அவர் பேசியது உண்மைதான். 'இந்தியாவின் ஒரே மொழி இந்திதான்' என்று சொன்ன ஹிந்திஷா, 'மொழியை வைத்து அரசியல் செய்யாதீர்கள்' என்கிறார்.

*நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல,ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவல்மொழியான இந்தியை, நாட்டு ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று சொல்லி இருந்தார். இப்படிப்பட்ட ஹிந்திஷா, இப்போது இப்படி பேசலாமா?

*“மத்திய அமைச்சரவையின் நிகழ்ச்சி நிரல்களில் 70 சதவிகிதம் இந்தி மொழியிலேயே தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் முக்கியப் பகுதியாக இந்தியை அலுவல் மொழியாக மாற்றவேண்டிய நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் போது பேசும் மொழி இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும். உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு நெகிழ்வுத்தன்மையாக மாறாத வரையில் இந்தியைப் பரப்ப முடியாது” என்று சொன்னவர் அமைச்சர் அமித்ஷா. அத்தகைய ஹிந்திஷா இப்படிப் பேசலாமா?

இந்தியாவின் ஒரே மொழி இந்திதான் என்று சொல்லி அரசியல் செய்தவர்தான் அமித்ஷா - முரசொலி விமர்சனம் !

*ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம்112 பரிந்துரைகள் கொண்ட 11ஆவது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி நிச்சயம் இடம் பெற வேண்டும், கல்லூரிகளில் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைக் கொண்டு வரவேண்டும், போட்டித் தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் நிறுத்தப்பட வேண்டும், இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும், ஒன்றிய அரசின் பணியாளர்தேர்வில் தேர்வாளர்களின் இந்தி மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும் - இப்படி இந்தி மயமாகவே இருக்கிறது அந்த அறிக்கை. இத்தகைய ஹிந்திஷா, மொழியைப் பற்றி பேசலாமா?

*"அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒற்றுமை என்னும் கயிற்றில் இணைக்கிறது. அனைத்து இந்திய மொழிகளுக்கும் தோழன் இந்திதான். மோடி அரசாங்கம் இந்தி உட்பட அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறது. இந்தியை பாதுகாக்கவும், பிரபலப்படுத்தவும் பங்காற்றியவர்களுக்கு வணக்கம்.” என்று இந்திக்கு மட்டும் சிறப்பு வணக்கம் செய்தவருக்கு இப்படிப் பேச உரிமை இருக்கிறதா?

“இந்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்டஇந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்,” என்று இந்தியை வளர்ப்பதில் மட்டும் கவனமாக இருப்பவர் யார்?

'மொழியை வைத்து அரசியல் நடத்தாதீர்கள்' என்று சொல்லும் அதே அமித்ஷாதான். இந்தியை வைத்து இந்தியாவைப் பிளவுபடுத்துவது யார்? பல்லாயிரம் கோடி பணத்தை சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கி, தமிழுக்கு சில கோடிகளை மட்டும் தூக்கிப் போட்டு ' தேவ பாஷை - நீஷ பாஷை' பாணியைக் கடைப்பிடிப்பது யார்? அதே ஹிந்திஷாக்கள் தான்.

banner

Related Stories

Related Stories