முரசொலி தலையங்கம்

”மூடநம்பிக்கைகளின் முடைநாற்றத்தை அறிவியல் வெல்லும்” : மாபெரும் சாதனை இது - முரசொலி!

சுனிதாவும், வில்மோரும் சென்றது சாதனை. அவர்கள் திரும்பி வந்ததுதான் அதைவிடப் பெரிய சாதனை. இன்னொரு குழுவினர் போய் அழைத்துவந்தது மாபெரும் சாதனையாகும்.

”மூடநம்பிக்கைகளின் முடைநாற்றத்தை அறிவியல் வெல்லும்” : மாபெரும் சாதனை இது - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (22-03-2025)

அறிவியல் வெல்லும்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், போயிங் நிறுவனமும் இணைந்து தயாரித்த ‘ஸ்டார்லைனர்' என்ற புதிய விண்கலத்தின் மூலம் அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸும் அமெரிக்கக் கடற்படை விமானி புட்ச் வில்மோரும் விண்வெளியில் 286 நாட்கள் இருந்துவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள். உலகம் இதுவரை பார்க்காத சாதனையாக இது போற்றப்படுகிறது.

இவரது பூர்விகப் பிறப்பிடம் இந்தியா என்பதும் பெருமைக்குரியது ஆகும். கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து நாசாவில் பணிபுரியும் இரண்டாவது இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனையாக சுனிதா இருக்கிறார்.

சர்வதேச விண்வெளி நிலையமானது பூமியில் இருந்து 498 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு (2824) ஜூன் மாதம் 5 ஆம் தேதியன்று இவர்கள் 8 நாள் பயணமாகத்தான் இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டார்கள். ஸ்டார் லைனரில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அந்த விண்கலம் மட்டும் செப்டம்பர் 7 ஆம் தேதி (2024) திரும்பி விட்டது. சுனிதாவும் வில்மோரும் பல மாதங்கள் விண்வெளியில் தங்க வேண்டியதாயிற்று. டிராகன் விண்கலம் கடந்த 16 ஆம் தேதி 4 வீரர்களுடன் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 17 மணி நேரப் பயணத்தில் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு இவர்கள் அனைவரும் பாதுகாப்பாகத் திரும்பி விட்டார்கள். விண்கலத்தைக் கடலில் இறக்கி, தரைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

புவியின் வளிமண்டலத்தில் நுழைகிற மறுநுழைவு தான் மிகவும் ஆபத்தானது. விண்வெளியில் இருந்து பூமிக்குள் விண்கலம் நுழையும் போது ஏற்படும் உராய்வின் காரணமாக 1690 டிகிரி வெப்பம் ஏற்படும். இதனால் தீப்பிழம்பு போல விண்கலம் காட்சி அளிக்கும். அப்போது வெப்பமானது விண்கலத்துக்குள் பரவும் ஆபத்தும் உண்டு. கடந்த 2003 ஆம் ஆண்டு கல்பனா சாவ்லா விண்வெளியில் இருந்து திரும்பிய போது அவரது விண்கலம் தரை இறங்கியதும் வெடித்துச் சிதறியது. அதில் அவர் பலியானார். அப்படி மாபெரும் ஆபத்தும் உண்டு. இப்போது அனைவரையும் அமைதியாக தரையிறக்கி அழைத்து வந்து விட்டார்கள் அறிவியலாளர்கள்.

சுனிதாவும், வில்மோரும் சென்றது சாதனை. அவர்கள் திரும்பி வந்ததுதான் அதைவிடப் பெரிய சாதனை. இன்னொரு குழுவினர் போய் அழைத்துவந்தது மாபெரும் சாதனையாகும்.

ஐக்கிய அமெரிக்க கடற்படையில் இளநிலை அதிகாரியாகச் சேர்ந்து, கடற்படை விமானியாக உயர்ந்து, 1993 ஆம் ஆண்டு வளைகுடாப் போரில் பங்கெடுத்தவர் சுனிதா. 1998 ஆம் ஆண்டு நாசாவால் விண்வெளி வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். 2006ஆம் ஆண்டு முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 195 நாட்கள் தங்கி இருந்தார். 2012 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்டார். நான்கு மாதங்கள் இருந்தார். மூன்றாவது முறையாக இப்போது சென்று ஒன்பது மாதங்கள் தங்கிவிட்டுத் திரும்பி இருக்கிறார்.

விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்ணாக சுனிதா உயர்கிறார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே அதிக நேரம் இருந்த பெண் என்ற பெருமையையும் அவர் அடைகிறார். இது சுனிதாவின் மூன்றாவது விண்வெளிப் பயணம் ஆகும்.

”மூடநம்பிக்கைகளின் முடைநாற்றத்தை அறிவியல் வெல்லும்” : மாபெரும் சாதனை இது - முரசொலி!

இந்த மூன்று பயணங்களிலும் மொத்தமாகச் சேர்த்து 9 முறை அவர் விண்வெளியில் நடந்துள்ளார். மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் அவர் நடந்துள்ளார். இதன் மூலம் அதிக நேரம் விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனையையும் அவர் செய்துவிட்டார்.

சர்வதேச விண்வெளி நிலையமானது ஒரு நாளில் 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது. விண்வெளியில் சுனிதா தங்கி இருந்த 286 நாட்களில் 4, 576 முறை பூமியைச் சுற்றி வந்துள்ளார். ஒவ்வொரு ஒன்றரை மணி நேரத்துக்கும் ஒரு முறை சூரிய உதயத்தையும், சூரிய நிறைவையும் பார்த்துள்ளார்கள்.

‘பெண்ணால் அனைத்தும் முடியும்' என்பதை சுனிதா மெய்ப்பித்து விட்டார். ஆணாதிக்கச் சமூகத்தால் பெண்ணின் வளர்ச்சியானது வார்த்தைகளால், சிந்தனையால், செயல்பாட்டால், அடக்குமுறையால் கட்டுப்படுத்தப் படுகிறது. ‘இதற்குள் வரலாம், இதற்கு வரக்கூடாது, இந்த எல்லைக்குள் போகலாம், இந்த எல்லைக்குள் போகக்கூடாது, இந்த வேலையை மட்டும் செய்யலாம், இந்த வேலையைச் செய்யக் கூடாது, இந்த நாளில் செய்யலாம், இந்த நாளில் செய்யக் கூடாது' என்ற கட்டுப்பாடுகளை ஆணாதிக்கச் சமூகம் வைத்திருக்கிறது. பெண்ணின் உடல் இயல்புகளை, தீட்டுகளாக ஒதுக்கி வைக்கிறது. அதாவது, புறக்கணிப்புக்கு ஒரு புனிதம் சேர்க்கும் செயல்கள் இவை. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் புறந்தள்ளி விட்டார் சுனிதா.

ஈர்ப்பு விசையே இல்லாத விண்வெளியில் மிக நீண்ட காலம் தங்கும் அளவுக்கு உடலைப் பக்குவப்படுத்தி வைத்திருந்தார் சுனிதா.

விண்வெளியை வெல்லலாம், ஆனால் சமூகத்தின் புண்வெளியை வெல்லுதல் பலருக்கும் சிரமம். அதைத் தாண்டியதுதான் சுனிதாவின் மாபெரும் சாதனையாகும். ஏராளமான சுனிதாக்கள் உருவாகலாம். எல்லோரும் விண்வெளிக்குச் சென்றால் மட்டும்தான் சாதனை அல்ல. சமூகவெளியை வெல்வதும் சாதனைதான். சமூகத் தடைகளை உடைத்து வெல்வதும் சாதனைதான்.

மூடநம்பிக்கைகளின் முடைநாற்றத்தை அறிவியல் வெல்லும். அறிவியலால் அடைந்த வெற்றியே நிலையானது.

banner

Related Stories

Related Stories