முரசொலி தலையங்கம்

”பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டு வைக்க கூடாது” : அதிமுக, பாஜக-வுக்கு பாடம் எடுத்த முரசொலி!

கடன் தொகை அதிகமாகி விட்டது என்று சொல்வது அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும்தான்.

”பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டு வைக்க கூடாது” :  அதிமுக, பாஜக-வுக்கு பாடம் எடுத்த முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (21-03-2025)

கடனா? வளர்ச்சியா?

ஆட்சியின் மீதோ - நிதிநிலை அறிக்கையின் மீதோ குறைசொல்ல முடியாதவர்கள், ‘அரசு அதிகப்படியாகக் கடன் வாங்குகிறது' என்று சொல்லி வருகிறார்கள்.

கடன் வாங்கத் தகுதியுள்ள அளவுக்கும் குறைவாகத் தான் வாங்கப்பட்டுள்ளது என்பதும் - வாங்கும் கடன் ஆக்கபூர்வமானவைகளுக்கே செலவு செய்யப்படுகிறது என்பதும் - தான் இதற்கானச் சரியான பதில் ஆகும்.

ஒரு மாநிலம் அதன் மொத்த வருவாயில் (ஜி.எஸ்.டி.பி.) 29.1 விழுக்காடு கடன் வாங்கலாம் என்பது 15 ஆவது நிதிக்குழு விதித்துள்ள கட்டுப்பாடு ஆகும். அந்த வகையில் பார்த்தால் தமிழ்நாட்டின் கடன் என்பது அதன் மொத்த வருவாயில் 25.63 விழுக்காடு மட்டுமே!

பிரதமராக நரேந்திர மோடி ஆட்சிக்கு வரும் போது 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் கடன் தொகை 55 லட்சம் கோடியாகும். இன்று அவரது பத்தாண்டு கால ஆட்சிக்குப் பிறகு 181.74 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. மூன்று மடங்கை விடவும் அதிகமாகி விட்டது. இத்தகைய பா.ஜ.க.தான் தி.மு.க. ஆட்சியைக் குற்றம் சொல்கிறது.

கடன் தொகை அதிகமாகி விட்டது என்று சொல்வது அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும்தான். இந்த இரண்டு கட்சிகளுக்கும் மிகச் சரியான பதிலை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்லி விட்டார். குற்றச்சாட்டு வைத்தவர்களால் எதிர் கேள்வி கேட்க முடியவில்லை.

“ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை, அதாவது தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய பங்களிப்பு தொகை என 2.63 லட்சம் கோடி வராமல் உள்ளது. இது தமிழகம் வாங்கும் கடனில் 32 சதவீதம் ஆகும். இதனைக் கொடுங்கள்” என்று கேட்டு இருக்கிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

“ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்காக நிலுவையில் உள்ள ரூ. 2, 200 கோடி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தரவேண்டிய 3, 000 கோடி என பல்வேறு திட்டத்திற்கு ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவை தொகை தந்தால், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை மக்களின் வளர்ச்சிக்காக செய்ய தயாராக உள்ளோம். ஒன்றிய அரசு உத்தரப் பிரதேசத்திற்கு கருணை காட்டுவது போல, மத்திய பிரதேசத்திற்கும், பீகாருக்கும் கருணை காட்டுவது போல தமிழகத்திற்கும் நிலுவை தொகையை கொடுத்து கருணை காட்டினால் நிதி நெருக்கடி தமிழக அரசுக்கு இருக்காது. ஒன்றிய அரசு மாநில அரசுக்குத் தொடர்ந்து கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் மாநில அரசு அந்த திட்டங்களை சொந்த நிதியிலிருந்து செலவு செய்து வருகிறது.”என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்லி இருக்கிறார்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசானது, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை விதித்து, அத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிரமங்களை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், அத்திட்டங்கள் முடங்கும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கொள்கைத் திட்டத்துக்கு பணம் கொடுப்பதையும் மும்மொழித் திட்டத்தை ஏற்றுக் கொள்வதையும் இணைத்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. மும்மொழித் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் தான் பணம் என்று பிளாக்மெயில் செய்தது ஒன்றிய அரசு . ‘உன் பணமே வேண்டாம்' என்று சொல்லி பிளாக்மெயில் அரசாங்கத்தை பீதி அடைய வைத்தார் முதலமைச்சர் அவர்கள்.

மூன்று இயற்கை பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது. மாநில அரசு கோரிய 37,986 கோடி ரூபாயில் ஒரு சதவீதம்கூட இதுவரை தரப்படவில்லை. குடிநீர் திட்டமாக இருந்தாலும் வீடு கட்டும் திட்டமாக இருந்தாலும் நிதி தருவது இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டவில்லை. இவ்வளவையும் மீறி போராடிக் கொண்டே ஆட்சி நடத்தி வருகிறார் முதலமைச்சர் அவர்கள். கடன் வாங்கி ஆட்சி நடத்தும் நிலைமையை உருவாக்கியதே ஒன்றிய பா.ஜ.க. அரசு தான்.

”பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டு வைக்க கூடாது” :  அதிமுக, பாஜக-வுக்கு பாடம் எடுத்த முரசொலி!

கடன் வாங்குவதைப் பற்றி பழனிசாமி பேசுவதுதான் நகைப்புக்குரியது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் கடன் வளர்ச்சி 128 விழுக்காடாக ஆகியது. ஜெயலலிதா 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும் போது தமிழ்நாட்டின் கடன் 1,01,349 கோடி ஆகும். அவர் ஆட்சியில் இருந்த 2016 ஆம் ஆண்டு வரையிலான கடன் என்பது 2,11,066 கோடி ஆகும்.

2017 ஆம் ஆண்டு முதல் 2021 வரையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தார். அவர் ஆட்சியை விட்டு இறங்கும் போது விட்டுச் சென்ற கடன் தொகை 4,80,300 கோடி ஆகும். இதனை வைத்துத்தான், ‘பழனிசாமி ஆட்சியின் கடனின் வளர்ச்சி 128 விழுக்காடு' என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்கிறார்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கடன் வளர்ச்சியானது 198 விழுக்காடு இருந்தது. பழனிசாமி ஆட்சியில் கடன் வளர்ச்சியானது 128 விழுக்காடு ஆனது. இதனை 93 விழுக்காடாகக் குறைத்துள்ளது தி.மு.க. அரசு.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழ்நாடு எதிலாவது வளர்ந்துள்ளதா என்றால் இல்லை. ஆனால் 2021 முதல் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. 2021 ஆம் ஆண்டிலிருந்தே 8 அல்லது அதற்கும் மேலான பொருளாதார வளர்ச்சி விகிதத்தைத் தமிழ்நாடு கொண்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 9.21 பங்களிப்பை தமிழ்நாடு கொண்டுள்ளது. தனிநபர் வருமானம் தேசிய சராசரியாக 1.69 லட்சமாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 2.78 லட்சமாக இருக்கிறது. இது தேசிய சராசரியை விட 1.64 மடங்கு அதிகம். இவை எல்லாம் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சிகள் ஆகும்.

இதை வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டின் நிதியானது, அனைத்து வளர்ச்சிக்குமான முதலீடாகத் தான் பயன்படுத்தப் பட்டுள்ளதே தவிர, கடன் வாங்கி விரயம் செய்யப்பட வில்லை. பலவேறு நலத் திட்டங்களுக்குத் தான் செலவு செய்யப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகைக்காக இன்று தரப்படும் தொகையானது, மகளிரின் சமூக பொருளாதார பங்களிப்பை அதிகரிக்கவே செய்கிறது. இவையும் ஒருவகையில் வளர்ச்சித் திட்டமே ஆகும்.

எனவே பொத்தாம் பொதுவாக கடன் வாங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை விட்டுவிட்டு, ‘எதற்காகச் செலவு செய்யப்பட்டுள்ளது' என்பதைப் பார்க்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories