முரசொலி தலையங்கம் (20-03-2025)
நீதி நெஞ்சம் நிதி நிர்வாகம்!
‘தமிழர் நிதி நிர்வாகம் - தொன்மையும் தொடர்ச்சியும்' என்ற மாபெரும் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். நிதிக் குவியலைக் கருவூலம் என்பார்கள். இந்த ஆவணம் என்பது, நிதி தொடர்பான கருத்துக் கருவூலமாக அமைந்திருக்கிறது. நூறாண்டு வரலாற்றைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின் நிதி நிர்வாக நிழற்படம் இது.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு - என்றார் வான்புகழ் வள்ளுவர்.
அத்தகைய வல்ல அரசுகளாக தமிழ்நாட்டு அரசுகள் அமைந்திருந்ததைச் சொல்லும் ஆவணம் இது.
நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும், நிதித் துறைச் செயலாளர் உதயச்சந்திரன் அவர்களும் நிதித் துறைப் பொறுப்புடன் இணைந்து தொல்லியல் துறையையும் கவனிப்பவர்கள் என்பதால், நிதியிலும் தொல்லியல் ஆய்- வைத் தொடர்ந்துள்ளார்கள் என்பதற்கான சாட்சியம் இது.
வரவு - செலவு என்பது எண்களின் சேர்க்கையாக இருந்தால், 'உனக்கு ஏன் நான் தரணும்?' என்ற நிர்மலா சீதாராமன்கள் பாணியாகத் தான் இருக்கும். அது எண்ணங்களின் சேர்க்கையாக இருந்தால், 'எப்படி பகுத்துண்ணலாம்' என்- பது தமிழர் நீதியாக அமையும். இத்தகைய தமிழர் நீதியை இந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் உணர்த்துகிறது.
நீதிக்கட்சியில் தொடங்கியது சென்னை மாகாணத்தின் இரட்டையாட்சி என்பதால் நீதி நெஞ்சம் கொண்ட நிதி நிர்வாகமாக இது அமைந்திருப்பதை இதனுடைய பக்கங்களைத் திருப்பத் திருப்பத் தெரிந்து கொள்ளலாம். திகைக்கத் திகைக்க தித்திக்கும் செய்திகளாக இவை அமைந்துள்ளன. இந்தியாவில் எந்த மாநில அரசும் செம்மாந்த எண்ணத்துடன் இத்தகைய ஒரு தொகுப்பை இதுவரை வெளியிட்டிருக்காது என்று சொல்லத்தக்க வகையில் இது அமைந்துள்ளது. சங்க காலம் முதல் சமூகநீதிக் காலம் வரையிலான தமிழர்களின் நிதி நிர்வாகச் சிறப்புகளின் வரலாற்றுப் பெருந்தொகுப்பாக இது அமைந்துள்ளது.
பண்டைய வணிகம், வரிவிதிப்பு முறைகள், காலனிய கால நிதிநிர்வாக நடைமுறைகள், தமிழ்நாட்டில் இதுவரை வெளியான நிதிநிலை அறிக்கைகள் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளின் மூலமாக பல்வேறு நூற்றாண்டு களாகத் தமிழர் நிதி நிர்வாகம் உருவாகி வந்த வரலாற்றையும், தமிழ்நிலத்தின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் குறித்த ஆழமான கண்ணோட்டம் இந்த நூலின் மூலமாகக் கிடைக்கிறது.
‘காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே' என்ற பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடல் இதில் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. பிசிராந்தையார் சொல்லும் நீதி இலக்கணம் கொண்டதாக தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் செயல்பட்டி- ருப்பதை மனக் கண் நம்முன்னே வந்து காட்டுகிறது. ஒரு மாவுக்குக் குறைந்த நிலமாக இருந்தாலும் அதில் விளைந்த நெல்லை கவளம் கவளமாக யானைக்கு ஊட்டினால் அது பல நாளுக்கு வரும், அப்படி இல்லாமல் நூறு வயல்களுக்குள் யானை தன் போக்கில் புகுந்தால் அழிவே அதிகமாக இருக்கும். அப்படி இல்லாமல் பிரித்து, பகுத்து, தேவைக்கு வழங்குபவனே அறிவுடை வேந்தன் என்கிறார் பிசிராந்தையார். அத்தகைய அறிவுடைத் திறமானது சங்க கால மன்னர் காலம் முதல் இன்று வரை நம் தமிழ்ச் சமூகத்தில் இருந்திருக்கிறது. 'எல்லார்க்கும் எல்லாம்' என்று இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லும் இலக்கணம், புறநானூற்றுப் பாடலின் தொடர்ச்சி தானே!
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு- என்றார் வள்ளுவர்.
வறுமை ஒழிக்கப்பட்டது தமிழ்நாட்டில். பட்டினிச் சாவு இல்லை. பணவீக்கம் இல்லை. நலிந்த பிரிவினர் பொருளாதாரத் தன்னிறைவை அடைந்து வருகிறார்கள். மத்திய தர வர்க்கத்தினர் மனநிறைவை அடைந்துள்ளார்கள். தொழில் துறையானது உயர்வை நோக்கியதாக அமைந்துள்ளது. தொழில் வளர்ச்சி என்பது தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியாக மட்டுமல்ல, அந்த வட்டாரத்தின் வளர்ச்சியாக, அந்த வட்டாரத்து மக்களின் வளர்ச்சியாக அமைந்துள்ளது. அனைத்துத் துறை வளர்ச்சி என்ற இலக்கணமானது மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை வளர்த்து வருகிறது.
‘குறிக்கோளை அடைவதற்கான கருவிதான் நிதிநிலை அறிக்கை' என்கிறார் பேரறிஞர் அண்ணா அவர்கள். குறிக்கோள் அடையப்பட்டுள்ளதா என்பதையும் அறியும் கருவியாகவும் நிதிநிலை அறிக்கைகள் அமைந்துள்ளன. யார் மீது எவ்- வளவு வரிப் போட்டு நிதியைப் பெருக்கலாம் என்பதாக இல்லாமல், நிதி மூலமாக எத்தனை லட்சம் பேரை மேம்படுத்தலாம் என்பதாக தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கைகள் இருந்துள்ளதை இந்த ஆவணத்தின் முலமாக அறியலாம்.
இந்த அரிய ஆவணத்தை தமிழ் இணையக் கல்விக் கழகத்தினர் தொகுத்துள்ளனர். இந்நூலுக்காக சேகரிக்கப்பட்ட நூற்றாண்டு கால நிதிநிலை அறிக்கைகள், விரிவான திட்டமதிப்பீடுகள், ஒன்றிய - மாநிலத் திட்டக்குழுவின் ஆய்வறிக்- கைகள், நிதி நிலை அறிக்கை தொடர்பான செய்திக் கட்டுரைகள், இதழ்கள், நூல்கள், ஒளிப்படங்கள் ஆகிய அனைத்தும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின் நூலக சிறப்பு இணையப் பக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக நிதி என்பது சொல்ல எளிமையானதோ, படிக்க சுவையானதாகவோ அமைவது இல்லை. அத்தகைய நிதித்துறை பற்றியும் சுவையாய் எளிமையாய் - புனைவின் நடையுடன் -சொல்ல முடியும் என்பதையும் காட்டி விட்டது இந்நூல். ‘நிதி நிலை அறிக்கைக்கு பட்ஜெட் என்பது பெயரில்லை. நிதிநிலை அறிக்கையைக் கொண்டு செல்லும் தோல் பெட்டிக்குத் தான் பட்ஜெட் என்று பெயர்’என்பதைப் போன்ற ஏராளமான தகவல்கள் இதில் இருக்கிறது.
நிதிநிலை அறிக்கையைவறட்டுத் தனமாகப் பார்க்காமல் வாழ்வியலாகப் பார்க்கும் பார்வையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 'தொன்மையும் தொடர்ச்சியும்' என்ற ஆவணம் உருவாக்குகிறது.
பள்ளிக் குழந்தைகளின்காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்த அன்று, ‘நான் ஆட்சி அமைத்ததன் பலனை இன்று அடைந்துவிட்டேன்' என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். 'இந்த ஆட்சியின் இதயம் என்- பது இதில் தான் இருக்கிறது' என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டார்கள்.
நிதியின் இதயம் நீதியாக இருக்கிறது. என்பதற்குச் சாட்சியாய் இருக்கிறது இந்த ஆவணம்.