முரசொலி தலையங்கம் (19-03-2025)
நீதியரசர்களின் எதிர்ப்பு!
‘ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற முறையை முன்னாள் நீதியரசர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். இந்த எதிர்ப்பானது நாளுக்குநாள் அதிகம் ஆகி வருகிறது.
பா.ஜ.க. எம்.பி.யான பி. பி. சவுத்ரி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17, 2024 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு (129 ஆவது திருத்தம்) மசோதாவை மதிப்பாய்வு செய்து வருகிறது. இந்த மசோதா மக்களவைக்கும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்க முயல்கிறது. இதற்கு முன்னாள் நீதியரசர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது, அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கு எதிரானது” என்று - - ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.பி.ஷா நேற்றைய தினம் கூறி உள்ளார்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா. "ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள் சட்ட சிக்கல்களைக் கொண்டதாக உள்ளன. மாநில சட்டப்பேரவைகளின் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்ற அதிகாரத்தை தேர்தல் ஆணைத்திற்கு வழங்குவது சரியானதல்ல. ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் செலவு குறையும் என்ற வாதமும் சரியானது அல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு. லலித், ரஞ்சன் கோகோய் ஆகியோர் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களுக்கு எதிராக கருத்தினை பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் இந்திய தலைமை நீதிபதியும் மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகோய், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவில் உள்ள ஓட்டைகளை சுட்டிக்காட்டி இருக்கிறார். ‘தேர்தல் ஆணையத்திற்கு (EC) அட்டவணையை முடிவு செய்ய கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்குவது நல்லதல்ல' என்றும் அவர் எச்சரித்து உள்ளார். “ஒரு மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலத்தை நீட்டிக்க அல்லது குறைக்க தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்படுத்தப்படாத அதி- காரங்களை வழங்க முடியாது” என்று அவர் கூறினார்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் யு.யு.லலித், “ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது, செயல்படுத்துவது கடுமையான சட்ட சவால்களை எதிர்கொள்ளும். அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை திருத்தங்கள் மூலம் மாற்ற முடியாது. கேசவானந்த பாரதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலத்தைக் குறைப்பது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறும். ஒரு மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலத்தில் 30--40 சதவீ- தம் இன்னும் நிறைவடையவில்லை என்றால், அதன் பதவிக் காலத்தைக் குறைப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது. அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி, மாநில சட்டமன்றங்களின் சுயாதீன அந்தஸ்தையும் அவற்றின் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தையும் பாதுகாக்கும் பல சட்ட முன்மாதிரிகள் உள்ளன.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா அவசரமாக செயல்படுத்தப்பட்டால், மசோதா ரத்து செய்யப்படலாம், இது சட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும்” என்று யு.யு. லலித் கூறி இருக்கிறார்.
நீதியரசர்களுக்கு முன்பாகவே முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தனது எதிர்ப்பை பதிவு செய்துவிட்டார். “ஒரே நாடு - ஒரே தேர்தல் என்று இப்போது சொல்பவர்கள் ‘ஒரே நாடு - ஒரே கட்சி என்று ஏன் கூடாது?' என்று நாளை கேட்கலாம். பிறகு, 'ஒரே நாடு - ஒரே தலைவர் ஏன் கூடாது?' என்றும் சொல்லலாம். அவ்வாறு கிளம்பினால் அதற்கு முடிவே இல்லை. பா.ஜ.க. வின் தேசியவாதம் எங்கே போய் முடியும்? ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால்தான் அதிகமான செலவு ஆகும். தேர்தலுக்கான மிஷின்களும், கருவிகளும், ஆட்களும், பாதுகாப்பும் ஒரே நேரத்தில் தேவைப்படுவதால் செலவு அதிகமாகத் தான் ஆகும்” என்று கருத்துச் சொல்லி இருந்தார்.
இந்தியாவின் ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் இந்த சட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்து போராடி வருகிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.க.
இந்தச் சட்டம் குறித்து "கூட்டாட்சிக்கு எதிரான, நடைமுறைக்கு மாறான ஒரே நாடு ஒரே தேர்தலை இந்தியா கூட்டணி எதிர்க்கும். ஏனெனில், அது நாட்டின் ஒற்றை ஆட்சி வடிவத்தை அபாயத்தில் தள்ளும். பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் செயல்பாட்டை கொன்றுவிடும். குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் வகையில் உள்நோக்கத்துடன் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. இது நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் - நாடாளுமன்றத் தொகுதி வரையறை நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேர்தல் - ஆணையர்களின் நியமனங்கள் - தேர்தல் ஆணையர் தேர்வு சட்டத்தில் மாற்றம் என பா.ஜ.க. தலைமை செய்வது அனைத்தும் மர்மமாகவே இருக்கிறது. இது ஏதோ அரசியல் ரீதியான விமர்சனம் அல்ல. உண்மையான விமர்சனங்கள் தான் என்பதை முன்னாள் நீதியரசர்களும் உறுதி செய்கிறார்கள்.