முரசொலி தலையங்கம்

ஆளுநர் ரவியின் உச்சந்தலையில் ஓங்கிக் கொட்டிய மோடி : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?

உண்மையான காரணம் தேசிய கீதம் அல்ல. திராவிட மாடல் என்பதுதான் ஆளுநரை தூங்கவிடாமல் செய்கிறது.

ஆளுநர் ரவியின் உச்சந்தலையில் ஓங்கிக் கொட்டிய மோடி : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (07-02-2025)

ஆளுநருக்கு பிரதமர் புத்திமதி!

யார் பேச்சையும் கேட்காமல் ஆடிக் கொண்டிருக்கும் ஆளுநர் ரவியை, உச்சந்தலையில் ஓங்கிக் கொட்டி புத்திமதி சொல்லி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

மாநில அரசு தயாரித்துத் தரும் உரையை வாசிக்காமல் முரண்டு பிடித்துக் கொண்டிருப்பவர் ஆளுநர் ரவி என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு நாடாளுமன்றத்தில் அறிவுரை – கண்டிப்பு – உத்தரவு – கட்டளை போடும் வகையில் சில சொற்களை உதிர்த்துள்ளார் மாண்புமிகு பிரதமர் அவர்கள்.“மாநில சட்டமன்றத்தில் அரசு கொடுக்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பது, நமது நாட்டின் மிகப்பெரிய பாரம்பரியம்”என்று பிரதமர் மோடி அவர்களே சொல்லி விட்டார்கள்.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி,“ஒன்றிய அரசு தயாரித்து வழங்கிய உரையை மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் இந்த அவையில் வாசித்தார்கள். மாநில சட்டமன்றங்களில் அந்தந்த மாநில அரசுகள் வழங்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பதும் நாட்டின் மிகப்பெரிய பாரம்பரியம் ஆகும். குஜராத்தில் நான் முதலமைச்சராக இருந்த போது எங்கள் அரசு தயாரித்து அளித்த உரையை காங்கிரஸ் ஆளுநர்கள் வாசித்தார்கள்”என்று மாண்புமிகு பிரதமர் அவர்கள் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்கள். இதை விட வெளிப்படையான புத்திமதியை பிரதமரால் சொல்ல முடியாது.

மாநில அரசுக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற உண்மையை பிரதமர் மோடியே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர் ரவி?

“இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளைப் பார்த்திருக்கிறது’ – என்று ‘பராசக்தி’ படத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு வசனத்தை எழுதி இருப்பார்கள். இந்தச் சட்டமன்றமும் கடந்த சில ஆண்டுகளாக விசித்திரமான காட்சிகளைக் கண்டு வருகிறது. உரையாற்ற வருகிறார் மாண்புமிகு ஆளுநர். ஆனால் உரையாற்றாமல் போய்விடுகிறார். அதனால்தான் ஆளுநரின் செயல்பாடுகளை நான் சிறுபிள்ளைத்தனமானது என்று சொன்னேன்”என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேசியதைச் சுட்டிக் காட்டி, ‘ஆணவம்’ என்று விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார் ஆளுநர் ரவி. இன்றைக்கு அவரது நடத்தையை பிரதமர் அவர்களே விமர்சித்து விட்டார்கள். பிரதமரையும் ஆணவக்காரர் என்பாரா ரவி?

ஆளுநர்களாக வருபவர்களுக்கு இருக்கும் ஒரே வேலை, ‘அரசு தயாரித்துத் தரும் உரையை ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வாசிப்பது’ ஆகும். அதைக் கூட ரவி செய்யாமல் அடம்பிடித்தார்.

2021 ஆம் ஆண்டு ஆர்.என்.ரவி ஆளுநராக வந்தார். 2022 ஆம் ஆண்டு தனது முதல் உரையை முழுமையாக வாசித்தார். எதையும் மாற்றவில்லை.

2023 ஆம் ஆண்டு உரையில் இருந்த பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய பெயர்களை விட்டுவிட்டு வாசித்தார். சுயமரியாதை, மதச்சார்பின்மை, மகளிர் முன்னேற்றம் ஆகிய சொற்களையும் விட்டுவிட்டு வாசித்தார். அரசு கொடுத்த உரையில் இருப்பது முழுமையாக அவைக் குறிப்பில் ஏறும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேறியதும், தேசிய கீதம் பாடப்பட்டது.

தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர். இதுவரை எந்த மாநில ஆளுநரும் இந்த மாதிரி தேசிய கீதத்தை அவமானப்படுத்தியது இல்லை. என்ன கோபம் இருந்தாலும் தேசியகீதத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் எழுந்து நின்று மரியாதை செலுத்தி விட்டுச் செல்ல வேண்டும் என்ற அடிப்படை நெறிகூடத் தெரியாத ஆளாக ரவி நடந்து கொண்டார்.

ஆளுநர் ரவியின் உச்சந்தலையில் ஓங்கிக் கொட்டிய மோடி : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?

2023 ஆம் ஆண்டு தேசிய கீதத்தை அவமதித்த அதே ஆளுநர், 2024 ஆம் ஆண்டு, ‘தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடுகிறீர்கள், தேசிய கீதம் பாடவில்லை’ என்று ஒரு காரணம் சொன்னார். ஆளுநர் உரையின் தமிழ் வடிவத்தை அவைத்தலைவர் வாசித்தார். ஆளுநர் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தார்.

2025 ஆம் ஆண்டின் தொடக்கமான கடந்த மாதம், வந்தார் ஆளுநர். பேரவையின் காவல் அணிவகுப்பு மரியாதையை வாங்கினார். உள்ளே வந்து உட்கார்ந்தார். எல்லார் முகத்தையும் பார்த்துவிட்டு, அவராகவே போய்விட்டார். இந்த காமெடி வேறு எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாதது ஆகும்.

பேரவை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதும் – அவை நடவடிக்கைகள் முடியும் போது தேசிய கீதம் ஒலிப்பதும்தான் நடைமுறை மரபு என்பதை எத்தனை தடவைகள் சொன்னாலும் அதனைப் புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவராக ஆளுநர் இல்லை.

உண்மையான காரணம் தேசிய கீதம் அல்ல. திராவிட மாடல் என்பதுதான் ஆளுநரை தூங்கவிடாமல் செய்கிறது. அதனை வாசிப்பதுதான் அவருக்கு வலிக்கிறது. பெரியார், அம்பேத்கர், கலைஞர், சுயமரியாதை, மதச்சார்பின்மை, மகளிர் முன்னேற்றம் ஆகிய சொற்களைச் சொல்லவே அவருக்கு வாய் வலிக்கிறது. தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது என்பதைச் சொல்லும் போது அவருக்கு நெஞ்சு அடைக்கிறது.

அந்த நெஞ்சு அடைப்பை சரி செய்வதாக பிரதமர் மோடியின் புத்திமதி அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories