முரசொலி தலையங்கம் (08.01.2025)
சிறுபிள்ளைத்தனமானது சண்டித்தனமானது!
"போ.. போ... நான் சாப்பிட மாட்டேன்" என்று குழந்தைகள் அடம் பிடிப்பதை போன்ற செயலைத்தான் தமிழ்நாடு ஆளுநர் செய்திருக்கிறார். நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் இப்படி ஒரு சண்டித்தனம் இதுவரை எந்த ஆளுநரும் செய்ததில்லை என்பது மாதிரியான செயலைச் செய்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியையும் மக்களையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். தி.மு.க. ஆட்சியை அவமானப்படுத்துவதாக நினைத்து தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்ற வேண்டும் என்பது ஒரு மரபு. அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை, அப்படியே வாசிக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் தான் தோன்றித்தனமாக அதை மீறி வருகிறார் ஆர்.என்.ரவி.
2021 ஆம் ஆண்டு ஆர்.என்.ரவி ஆளுநராக வந்தார். 2022 ஆம் ஆண்டு தனது முதல் உரையை முழுமையாக வாசித்தார். எதையும் மாற்றவில்லை.
2023 ஆம் ஆண்டு உரையில் இருந்த பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய சில பெயர்களை விட்டுவிட்டு வாசித்தார். சுயமரியாதை, மதச்சார்பின்மை, மகளிர் முன்னேற்றம் ஆகிய சொற்களையும் விட்டுவிட்டு வாசித்தார். அரசு கொடுத்த உரையில் இருப்பது முழுமையாக அவைக் குறிப்பில் ஏறும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீர்மானம் கொண்டு வந்ததும், தேசிய கீதம் பாடப்பட்டது. தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்.
2024 ஆம் ஆண்டு தனது உரையை வாசிக்காமல் அமர்ந்து இருந்தார். பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள், ஆளுநர் உரையின் தமிழ் வடிவத்தை வாசித்தார்கள். 'தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடுகிறீர்கள், தேசிய கீதம் பாடவில்லை' என்று சாக்குப் போக்குச் சொன்னார் ஆளுநர் ரவி.
2025 ஆம் ஆண்டிலும் இதே சாக்குப் போக்கைச் சொன்னார் ரவி. பேரவை வளாகத்துக்கு வந்தார். போய்விட்டார். தனது உரையை வாசிக்கவில்லை. வாசிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தவர் எதற்காக வந்து 'சீன்' போட வேண்டும்? கான்வாய் போட்டு, டிராபிக்கை நிறுத்தி எதற்காக அலைய வேண்டும்? கிண்டியிலேயே குந்தி இருக்க வேண்டியது தானே?!
தமிழ்நாடு பிடிக்காவிட்டால் போக வேண்டியதுதானே? தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு எதற்காக படையெடுக்க வேண்டும்? பீகாருக்குப் போங்கள்! இல்லாவிட்டால் 'கமலாலயம்' போக வேண்டியதுதானே? அங்கும் ஒரு பதவி காலியாகப் போகிறதே? சட்டையைக் கழற்றி சாட்டை அடித்துக் கொண்டு பொழுதைப் போக்கலாமாம்.
தினந்தோறும் டிவியில் வரலாம். யூடியூப் பார்க்கலாம். கமெண்டுகள் படித்து காலத்தைக் கழிக்கலாமே? கவர்னராக இருந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களை எதற்காகக் காவு வாங்க வேண்டும்?
மொத்தமே 3 நிமிடங்கள் அவையில் இருந்துள்ளார் ஆளுநர். அவருக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே வேலை, ஆண்டுக்கு ஒரு நாள் அவைக்கு வந்து, எழுதிக் கொடுத்த உரையை வாசிப்பது மட்டும்தான். அதைக் கூடச் செய்ய மாட்டேன் என்பவருக்கு தரப்படும் சம்பளம், தெண்டம் அல்லவா? பேரவை கூடும் போது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும். பேரவை முடியும் போது தேசியகீதம் ஒலிக்கும். இதுதான் காலம் காலமாக இருக்கும் நடைமுறை. அதை மாற்றி, தொடக்கத்தில் தேசியகீதம் பாட வேண்டும் என்று அடம்பிடிப்பது வேண்டுமென்றே செய்யும் காரியம் அல்லவா?
தேசிய கீதத்துக்காக நெஞ்சை வெடைக்கும் திருவாளர் தேசியம், கடந்த ஆண்டு தேசிய கீதம் பாடப்பட்ட போது எதற்காக மரியாதை செலுத்தாமல் ஓடினார்? தேசிய கீதத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது சட்டப்படி குற்றம் அல்லவா?
தமிழ்நாடு அரசாங்கத்தால் எழுதி அனுப்பிய உரையைப் பார்த்து, 'ஐயோ தமிழ்நாடு இவ்வளவு முன்னேறிவிட்டதே' என்று நினைத்து தொண்டை அடைக்கிறது ஆளுநர் ரவிக்கு. வயிறு எரிகிறது ஆளுநர் ரவிக்கு. நெஞ்சு அடைக்கிறது ஆளுநர் ரவிக்கு. அதனால்தான் வாசிக்க மறுக்கிறார். 'தேசிய கீதம் பாடவில்லை' என்று இட்டுக்கட்டி பழிபோடு கிறார். தமிழ்நாட்டின் வளத்தையும் நலத்தையும் காணப் பொறுக்காத அவர் எதற்காக தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்?
“தனது அரசியல் சட்டக் கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அனைவர் மனதிலும் எழும் கேள்வி" என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருப்பதுதான் உண்மை. 'பிடிக்காவிட்டால் போக வேண்டியது தானே' என்றுதான் பொதுமக்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆளுநர் மாளிகையைக் காலி செய்து விட்டு சனாதன ஆராய்ச்சி செய்யலாம். வர்ணாசிரம வகுப்பு எடுக்கலாம். இங்கிலாந்து மீது படையெடுப்பு நடத்தலாம். கால்டுவெல் சமாதியைத் தோண்டலாம். திருக்குறளை தீட்டுப்படுத்தலாம். வள்ளலாரை வறுத்தெடுக்கலாம். அம்பேத்கரை அசிங்கப்படுத்தலாம். அவரை யார் கேட்கப் போகிறார்கள்? நாமும் ஏன் தலையங்கம் எழுதப் போகிறோம்? இந்த மாதிரியான ஆட்களை எல்லாம் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளுக்காக சகித்துத் தொலைக்க வேண்டியுள்ளது.