முரசொலி தலையங்கம்

’கடல் அலை நடுவே இருக்கும் தமிழ்மலை’ : விழாக் கோலம் காண்கிறது குமரி முனை - முரசொலி!

தலைநகர் சென்னைக் கடற்கரையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது சிலை வைத்தவர் பேரறிஞர் அண்ணா.

’கடல் அலை நடுவே இருக்கும் தமிழ்மலை’ : விழாக் கோலம் காண்கிறது குமரி முனை - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வான்புகழ் வள்ளுவருக்கு வானுயர் சிலை அமைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர். கலைஞர் அமைத்த சிலைக்கு வெள்ளிவிழா காண்கிறார் திராவிடவியல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மூன்று நாட்கள் விழாக் கோலம் காண்கிறது குமரி முனை.

"மற்ற அனைத்தையும் ஒரு தட்டிலிட்டு, திருக்குறள் எனும் செந்தமிழ் நூலை ஒரு தட்டில் வைத்தால், குறளே வலிமையாய் இருக்கும்" என்றார் யாழ் நூல் யாத்த விபுலானந்தர்.

அத்தகைய வான்புகழ் வள்ளுவருக்கு குமரி முனையில் 133 அடிக்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிறது. 'கடல் அலை நடுவே இருக்கும் தமிழ்மலை' என்று அந்தச் சிலைக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார் முதலமைச்சர். "முத்தமிழறிஞர் கலைஞர் எதைச் செய்தாலும் கலை நுணுக்கத்தோடு பார் போற்றும் வகையில் செய்வார் என்பதற்கு விண்ணைத் தொடும்வண்ணம் உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலையும் ஒரு சான்றாகும். இத்தகைய பெருமை மிகு சிலை வெள்ளி விழா காண்கிறது." என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர்.

2000 ஆம் ஆண்டின் தொடக்க நாளில் குமரி முனையில் சிலை எழுந்தது. அந்தக் காட்சி எப்படி இருந்தது என்பதை தலைவர் கலைஞரே விவரித்துள்ளார்கள்.

"கண்ணொளி கொண்ட தமிழரெல்லாம் கண்டுகளித்த காட்சி! செவிப்பறை சிறிதும் பழுதுபடாத தமிழனெல்லாம் கேட்டு இன்புற்ற நிகழ்ச்சி! இதயமுள்ள தமிழனெல்லாம் உணர்ச்சியால் உந்தியெழுந்து குதித்திட்ட காட்சி" என்று இதைப் பற்றி தலைவர் கலைஞர் எழுதி இருக்கிறார்கள்.

"அந்தச் சிலை திறப்பதற்கான பொத்தானை அழுத்தியபோது என் விரல் என்னை அறியாமல் அசைவற்றுப் போனது மட்டுமல்ல – என்னையே நான் மறந்துவிட்டேன். நாதஸ்வர இசைவாணர்களும், தவில் வித்வான்களும் அவர் தம் பக்க வாத்தியக்காரர்களுமாக சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டோர், அய்யனின் சிலை திறக்கப்பட்டபோது இசை முழக்கம் திக்கெட்டும் எட்டிடச் செய்தார்களாம். மறுநாள் காலையில் மற்றவர்கள் சொல்லக் கேட்டுத்தான் 133 நாயன இசை ஒலித்த செய்தியே எனக்குத் தெரியும். அந்த அளவுக்கு மெய்மறந்து போயிருந்திருக்கிறேன். சுமார் முக்கால் மணி நேரம் பேசியிருக்கிறேன்" என்று கலைஞர்.

இந்த உணர்ச்சிக்கு என்ன காரணம்? தனது வாழ்நாளில் எத்தனையோ பேருக்கு நினைவு மண்டபங்கள், சிலைகள் அமைத்தவர் தலைவர் கலைஞர். ஆனால் திருக்குறள் – திருவள்ளுவர் என்றதும் உணர்ச்சியின் உச்சிக்கு கலைஞர் செல்ல என்ன காரணம்?

’கடல் அலை நடுவே இருக்கும் தமிழ்மலை’ : விழாக் கோலம் காண்கிறது குமரி முனை - முரசொலி!

திருவள்ளுவர் என்பவர் திருக்குறள் என்ற இலக்கியம் படைத்தவர் என்பது அல்ல. உலகுக்கே அறத்தைச் சொன்னவர் என்பது மட்டுமல்ல. உலகில் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது என்பது அல்ல. திருவள்ளுவர்தான் தமிழினத்தின் காப்பரண் என்பதால்தான் தமிழினத் தலைவர் உணர்ச்சி வசப்படுகிறார்.

இது தந்தை பெரியார் மூலமாக விதைக்கப்பட்ட விதை ஆகும். திராவிடர் கழகத்தை திருக்குறளைப் பின்பற்றும் கழகமாகச் சொன்னார் பெரியார். மனுதர்மத்தை நீக்கிவிட்டு அந்த இடத்தில் திருக்குறளை வைக்க வேண்டும் என்றார். மனிதத்தன்மை உருவாக குறள்தான் வழிகாட்டி என்றும் சொன்னார். ஆரியத்தை மறுக்க எழுதப்பட்ட நூல் திருக்குறள் என்றும், புத்தர் செய்த வேலையைத்தான் வள்ளுவர் செய்தார் என்றும், நமது நெறி குறள்நெறி என்றும், நமது மதம் குறள் மதம் என்றும் சொன்னார்.

'நான் திராவிடனே – திருக்குறளானே' என்று அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டார். 'வள்ளுவரை மறைத்த இனமே புத்தரை ஒழித்தது, காந்தியையும் கொன்றது' என்றவர் பெரியார். திருக்குறள் மாநாடுகளை நடத்தினார். குறைந்த விலையில் திருக்குறளை அச்சிட்டு வழங்கினார். ஏப்ரல் 12 ஆம் நாளை திருக்குறள் நாளாக அறிவித்துக் கொண்டாடச் சொன்னார் பெரியார்.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக இவ்வுலகியற்றி யான்.

குடிசெய் வார்க்கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்.

தெய்வத்தாற் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

- ஆகிய குறள்களை அடிக்கடி மேற்கோள் காட்டினார் பெரியார்.

"திருக்குறளைக் கற்றுக் கொள்வதால் நீங்கள் செம்மையடையலாம். நீங்கள் செம்மை அடைவதால், நாடு செம்மைப்படும். நாடு செம்மைப்படுவதால் உலகு செம்மைப்படும்" என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா. தலைநகர் சென்னைக் கடற்கரையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது சிலை வைத்தவர் பேரறிஞர் அண்ணா. அந்த வழித்தடத்தில் வந்த முத்தமிழறிஞர் கலைஞர், குமரி முனையில் அய்யன் வள்ளுவருக்கு வானுயரச் சிலை வைத்தார். சிலை மட்டுமா அது? கலைஞர் உருவாக்கிய கலைச் சின்னம் அல்லவா அது?

- தொடரும்

banner

Related Stories

Related Stories