செங்கல்பட்டைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி பேசுகிறார்... “சென்னை அஸ்தினாபுரத்தில் ஒரு அழகான குடும்பம் வாழ்ந்து வருகிறது. அந்தக் குடும்பத்தின் அப்பாவுக்கு சிறுநீரகப் பிரச்சினை வந்தது. சிறுநீரகத்தை மாற்ற வேண்டும் என்றால் பல லட்சம் செலவாகும் என்றார்கள் மருத்துவர்கள். அப்போது அந்தக் குடும்பத்துக்கு வெளிச்சமாக இருந்தது தான் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்.
அந்த திட்டத்தின் மூலம் அந்த அப்பாவுக்கு சிறுநீரகம் மாற்றப்பட்டது. நான் கூறிய கதை யாருடைய கதையும் அல்ல, அது என் குடும்பத்தின் கதை. இரண்டு பெண் குழந்தைகளில் மூத்தவள் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். என் அப்பா அங்கே நின்று கொண்டிருக்கிறார், இப்படி ஏதோ ஒரு திட்டத்தில் கலைஞர் வாழ்கிறார்” என்று கீர்த்தனா சொன்னதுதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் நேரடியான பலனும் பயனும் ஆகும்!
நாமக்கல்லைச் சேர்ந்த சுதர்சனா என்ற மாணவி வித்தியாசமாக சிந்தித்துள்ளார். நாம் அனைவரும் கலைஞரால் தலை நிமிர்ந்த தமிழகம் என்று பேசுகிறோம். கலைஞரால் தலைகுனிந்தது தமிழகம் என்று சிலர் விமர்சிப்பதையும் ஒப்புக் கொள்கிறேன் என்று பேசி இருக்கிறார் சுதர்சனா.
"ஆமாம் எங்களை தலைகுனிய வைத்தார் கலைஞர்! 'ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில்... அவன் உயர் சாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளை செய்து தலைக்குள் வைத்தானா?
மற்ற சாதிக்கெல்லாம் மண்டைக்குள்
இருப்பதென்ன களிமண்ணா சுண்ணாம்பா?' என ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த கலைஞர்... அவர்கள் கையில் புத்தகத்தைக் கொடுத்து தலை குனிய வைத்தார்... அவர்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்" என்று சுதர்சனா பேசி இருக்கிறார்.
இதுதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சாதனை மகுடம் ஆகும். "இதுதான் கலைஞர் ஸ்டைல் பதிலடியாகும்" என்று 'திராவிட மாடல்' நாயகர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். இத்தகைய பேச்சுப் போராளிகளாக 182 பேரை உருவாக்கிக் கொடுத்துள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தி.மு.க.வுக்கு, திராவிட இயக்கத்துக்கு, எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்துக்கு உதயநிதி அளித்துள்ள மாபெரும் கொடையாகும். 'இனி ஆண்டுதோறும் இத்தகைய பேச்சாளர்களை உருவாக்கித் தருவோம்' என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழகத்தின் பல்வேறு அணிகளுக்கும் பல்வேறு பணிகளை முதலமைச்சர் கழகத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்கள். கழகத்துக்காக 100 பேச்சாளர்களைத் தேர்வு செய்து தர வேண்டும் என்ற பணியை இளைஞரணிக்கு வழங்கி இருந்தார்.
உடனடியாக களத்தில் இறங்கி இதற்கான அறிவிப்பைச் செய்தார் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அவர்கள். இதற்கான அறிவிப்பு வெளியானதும் விண்ணப்பம் செய்தவர்கள் எண்ணிக்கை என்ன தெரியுமா? 17 ஆயிரம் பேர்!
இவர்களில் இருந்து 900 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதில் இருந்து 182 பேச்சுப் போராளிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். தலைவர் உத்தரவிட்டதோ 100 பேரை தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் இளைஞரணிச் செயலாளர் தேர்வு செய்ததோ 182 பேர். ஏறத்தாழ இரு மடங்கு. எட்டடி தாண்டச் சொன்னால், 16 அடி தாண்டி இருக்கிறார் இளைஞரணிச் செயலாளர்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் - என்ற வள்ளுவரின் வாக்கை மெய்ப்பித்திருக்கிறார் உதயநிதி என்று கழகத் தலைவர் சொல்லி இருப்பது சுத்தமான உண்மையாகும்! இவர்கள் எல்லாம் கொள்கைக்காகப் பேசுபவர்கள். கொள்கையோடு பேசுபவர்கள் என்பதை இவர்கள் தேர்ந்தெடுத்த தலைப்புகளே சொல்லும்.
பேசி வென்ற இயக்கம், தமிழ்நாட்டுக் குடும்பங்களில் தி.மு.க., இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர், திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்றென்றும் பெரியார், ஏன்?, சமூகநீதிக் காவலர் கலைஞர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி, அண்ணா கண்ட மாநில சுயாட்சி, கலைஞரின் தொலைநோக்குப் பார்வை ஆகிய தலைப்புகளில் பேசத் தெரிந்தவர்கள் இவர்கள்.
கைதட்டல்களுக்கான, நகைச்சுவைக்கான, பொழுதுபோக்குக்கான தலைப்புகள் இல்லை இவை. நூற்றாண்டு கால தமிழ்நாட்டைச் சீர்படுத்திய தலைப்புகள் இவை. எதிர்காலத்தை ஏற்றம் பெற வைப்பதற்குத் தேவையான தலைப்புகள் இவை. வரலாற்றை மாற்றிய வரலாற்றுத் தலைப்புகள் இவை.
இந்த தலைப்புகளில் கூர் தீட்டப்பட்ட பேச்சுப் போராளிகள்தான் இப்போது புறப்பட்டு இருக்கிறார்கள். இனி ஆண்டுதோறும் வரப் போகிறார்கள்.
பேசிப்பேசி வளர்ந்த இயக்கம் இது. அந்தப் பேச்சுதான் தமிழ்நாட்டு மக்களிடம் விழிப்பை உருவாக்கியது. எழுதி எழுதி வளர்ந்த இயக்கம் இது. அந்த எழுத்துகள்தான் அறியாமை இருளை விரட்டியது. இன்னமும் இவை தேவைப்படுகின்றன. எந்நாளும் இவை தேவைப்படும்.
பேச்சுப் போராளிகளே வருக! உங்களது சிந்தனைகளின் மூலமாக தமிழ்நாட்டின் காவல் அரண்களாகத் திகழ்க!