முரசொலி தலையங்கம்

‘தொழில் அரசு மட்டுமல்ல, தொழிலாளர் அரசும் இது’ : முரசொலி தலையங்கம்!

சுமூகமான பேச்சுவார்த்தைக்கு தொழில் நிறுவனத் தரப்பையும், தொழிலாளர் தரப்பையும் உட்கார வைத்ததில்தான் முதலமைச்சரின் வெற்றி அடங்கி இருக்கிறது.

‘தொழில் அரசு மட்டுமல்ல, தொழிலாளர் அரசும் இது’ : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சாம்சங் தொழிலாளர் பிரச்சினையைத் தீர்த்து வைத்துள்ளது தி.மு.கழக அரசு. தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வழிவகை அமைத்துத் தந்துள்ளது அரசு. ‘தொழில் அரசு மட்டுமல்ல, தொழிலாளர் அரசும் இது’ என்பதை மெய்ப்பித்துக் காட்டி விட்டார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

சாம்சங் நிறுவனத்துக்கும் அதில் பணியாற்றும் தொழிலாளர்க்கும் பிரச்சினை ஏற்பட்ட போது, வழக்கமாக தி.மு.க. என்றால் கசக்கும் பிறவிகள், இதனை வைத்து ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தப் பார்த்தார்கள். சமூக வலைத்தளங்களில் சில பூர்ஜுவாக்களும், பெட்டி பூர்ஜுவாக்களும் எழுதிய எழுத்துக்கள் எல்லாம் பாட்டாளிகள் மீதான பாசம் அல்ல, தி.மு.க. மீதான வெறுப்பு ஆகும்.

ஏராளமான தொழில்களைக் கொண்டு வந்து, அபரிதமான முதலீடுகளை ஈர்த்து, தாராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறாரே மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதை நினைத்து நினைத்து வெம்பி வெம்பி இத்தகைய அவதூறுகளைக் கிளப்பினார்கள். வலதுசாரிகளும் இடதுசாரி வேடமிட்டு குத்தாட்டம் போட்டார்கள். சுமூகமான பேச்சுவார்த்தைக்கு தொழில் நிறுவனத் தரப்பையும், தொழிலாளர் தரப்பையும் உட்கார வைத்ததில்தான் முதலமைச்சரின் வெற்றி அடங்கி இருக்கிறது.

தொழிலாளர் கோரிக்கை என்னவாக இருந்தாலும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோரைக் கேட்டுக் கொண்டார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இரு தரப்பும் மனமொப்பி ஒப்பந்தம் கையெழுத்தாகி, சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தொழிலாளர் தரப்பில் வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், பணிக்குத் திரும்புவதாக முடிவெடுத்து பணிக்குத் திரும்பிவிட்டார்கள்.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட பேட்டியில், “ஆரம்பத்தில் இருந்து பேச்சுவார்த்தை சுமூகமாகச் சென்றது. இதில் சில நல்ல ஆலோசனைகளும் முடிவுகளும் எட்டப்பட்டன. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. எந்தக் குழப்பமும் இல்லை. வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைத்தும் சிறப்பாகவே நடைபெற்றது. சங்கத்தைப் பதிவு செய்யும் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அந்தத் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டோம். இதையே இப்போதும் சொல்கிறோம். நிர்வாகத்துக்கும் எங்கள் சங்கத்துக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. அதைத்தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாநில அரசின் முயற்சியின் காரணமாக எங்கள் கோரிக்கைக்கு நிர்வாகம் செவி சாய்த்திருக்கிறது. இதில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனவே முதலமைச்சர் எடுத்த முயற்சிக்கு பாராட்டுத் தெரிவிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளதில் அனைத்தும் அடங்கி இருக்கிறது.

‘தொழில் அரசு மட்டுமல்ல, தொழிலாளர் அரசும் இது’ : முரசொலி தலையங்கம்!

போராடிய தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது என்ற உறுதிமொழியை அரசு பெற்றுத் தந்துள்ளது. “வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பும் தொழிலாளர்கள் மீது எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையையும் நிறுவனம் எடுக்கக் கூடாது” என்று சொல்லப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொதுக் கோரிக்கையின் மீது எழுத்துப்பூர்வமான பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கைதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் இலக்கணம் ஆகும். அது மட்டுமல்ல, மக்களாட்சியின் இலக்கணம் ஆகும்.

“தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலனிலும் அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதிலும் அக்கறையுடன் செயல்படுகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளம் பெருக வேண்டும். அதன் மூலமாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக வேண்டும். தொழில் வளத்தை உருவாக்குவதில் முதுகெலும்பாக விளங்கும் தொழிலாளர்களது உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதில் பின் வாங்க மாட்டோம். தொழில் அமைதிக்கு உகந்த மாநிலமாகச் செயல்படுவோம்” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

“தொழிலாளர் நலன் காக்க வேண்டும். தொழில் வளம் பெருக வேண்டும்” - – என்பதையே இரு கண்களாக பாவித்து தமிழ்நாடு அரசு செயல்படுவதாக முதலமைச்சர் அவர்கள் சொல்லிய சொல், மிகமிக முக்கியமானது.

தொழில் நிறுவனங்கள் இல்லாமல் புதிய வேலை வாய்ப்புகள் இல்லை. தொழிலாளர்கள் இல்லாமல், தொழில் நிறுவனங்கள் செயல்பட முடியாது. இரண்டு தரப்பும் ஒன்றையொன்று சார்ந்தவை. ஒன்றின் மூலமாகத்தான் பிறிதொன்று வளர வேண்டும். இதனை இரண்டு தரப்புக்கும் உணர்த்தி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

இந்தப் பிரச்சினை சுமூகமாக முடிந்துவிடக் கூடாது என்பதற்காக சிலர் கூலிப்படைகளைப் போல இணையத் தளங்களில் செயல்பட்டார்கள். கோரிக்கை வைக்கும் தொழிலாளர்களும், அவர்கள் பணியாற்றும் நிறுவனமும் பேச்சுவார்த்தைகளில் இருக்கும் போது அதனைக் குலைக்கும் வகையில் இத்தகைய சக்திகள் செயல்பட்டார்கள். தொழிலாளர்களுக்கு நல்லது செய்வது போல நடித்து, நிறுவனமே வெளியே போகப் போகிறது என்று வதந்தி கிளப்பினார்கள்.

‘தொழிலுக்கு உகந்த மாநிலம் அல்ல’ என்று ஒரு புறமும், ‘தொழிலாளர் விரோத அரசு’ என்று மறுபுறமும் கிளப்பினார்கள். உணர்ச்சிவசப்படாமல், நடுநிலைத் தன்மையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்புக்கும் நன்மை செய்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர். இதனை இரு தரப்பும் உணர்ந்து எதிர்காலத்தில் ஒருவருக்கொருவர் நட்பு சக்தியாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

banner

Related Stories

Related Stories