முரசொலி தலையங்கம்

”புதிய குற்றவியல் சட்டங்களே குற்றமாக உள்ளது” : காரணத்தை சொல்லும் முரசொலி தலையங்கம்!

சட்டத்தின் பெயர் இந்தியில் உள்ளது. உள்ளடக்கம் ஆங்கிலத்தில் உள்ளது. சட்டப் பிரிவுகள் குழப்பமாக உள்ளன

”புதிய குற்றவியல் சட்டங்களே குற்றமாக உள்ளது” : காரணத்தை சொல்லும் முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (06-07-2024)

சட்டமே, குற்றமானது!

பா.ஜ.க. அரசால் நிறைவேற்றப்பட்டிருப்பது புதிய குற்றவியல் சட்டங்கள் அல்ல. அந்தச் சட்டங்களே, குற்றமானவைதான்!

«இந்திய தண்டனைச் சட்டம்

«குற்றவியல் நடைமுறைச் சட்டம்

«இந்திய சாட்சியச் சட்டம் – ஆகிய மூன்று சட்டங்களின் பெயரை

«பாரதிய நியாய சம்ஹிதா

«பாரதிய நாகரிக் சுரக்ஷ சம்ஹிதா

«பாரதிய சாக்ஷிய ஆதிநியாம் – என்று பெயர் மாற்றி இருக்கிறது பா.ஜ.க. அரசு. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அனைத்து சுபிட்சங்களையும் வழங்கி முடித்து விட்டார்கள். களைத்துப் போய் உட்கார்ந்திருக்கும் இவர்கள், சட்டங்களை சம்ஹிதாக்களாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்போது நடைமுறைக்கு வந்திருப்பது குற்றவியல் சட்டங்களல்ல, குழப்பச் சட்டங்கள். புதிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு, தண்டனைகள் மாற்றப்பட்டு இருந்தால் எந்தக் குழப்பமும் வராது. ‘பிரிட்டிஷ் ஆட்சிக் காலச் சட்டங்களை மாற்றப் போகிறோம்’ என்ற துடுக்குத்தனத்தில், சட்டப்பிரிவுகள் அனைத்தையும் மாற்றிவிட்டார்கள். காவல்துறையும் நீதிமன்றமும் குழம்பிப் போகப் போகின்றன. நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டங்கள் தொடங்கி இருப்பதற்கு இதுதான் காரணம்.

ஜூலை 1 ஆம் தேதிக்கு முன் பதியப்பட்ட வழக்குகளை எந்தச் சட்டத்தின் படி விசாரணை நடத்த வேண்டும்? தண்டனை தர வேண்டும்? - இந்த அடிப்படை பதில் கூட இந்தச் சட்டத்தில் இல்லை. சட்டப்பிரிவுகளையும் வரிசை எண்களையும் மாற்றுவதன் மூலமாக இதுவரை பதிவான அனைத்துப் புகார்களையும் மாற்ற வேண்டும். நீதிமன்றத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் வழக்குகளின் குற்றப்பிரிவுகளையும் மாற்ற வேண்டும். அதாவது இந்திய தண்டனைச் சட்டத்தின்படியும், பாரதிய நியாய சன்ஹிதா படியும் இனி வழக்கை நடத்த வேண்டும். இவை அனைத்தும் எத்தனை குழப்பங்களை ஏற்படுத்தும் என்பது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும், அனைத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும்தான் தெரியும்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 90 விழுக்காடு பிரிவு எண்களை மாற்றிவிட்டார்கள். மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவு 304(ஏ). இதை 150 என மாற்றி இருக்கிறார்கள். இதனால் என்ன பயன்? இப்போது என்ன தேவை வந்தது? மரணம் விளைவிக்கும் குற்றப்பிரிவின் தண்டனையைக் குறைத்தல், தண்டனையை அதிகப்படுத்துதல் ஆகியவற்றைச் செய்திருந்தால் அது பற்றி விவாதிக்கலாம். நம்பர் மாற்றுவதால் என்ன சாதனையைச் செய்து விட்டார்கள். காலம் காலமாக மக்கள் மனதில் பதிந்த குற்றப்பிரிவு எண்களை மாற்றுவதற்கு என்ன அவசியம் வந்தது?

நாளை முதல் ரயில்கள் அனைத்தையும் ‘பஸ்’ என்றுதான் சொல்ல வேண்டும் என்று சொல்லி ‘பாரதிய பஸ்வே’ என்று மாற்றிவிட்டால் தலையை ஆட்டி ஏற்றுக் கொள்ள முடியுமா? மைனாரிட்டி பா.ஜ.க. அரசுக்கு இந்த உரிமை இருக்கிறதா? ஆட்சி என்ற பெயரால் அவர்கள் காமெடி செய்து கொள்ளட்டும். சட்டத்தின் பேரால் செய்யக் கூடாது. சட்டப் புத்தகங்கள் 200 ஆண்டுகளாக இருப்பவை. 200 ஆண்டுகள் இருக்கப் போகிறவை.

‘காலனிய’ காலத்தைவிட மோசமானதாக இருக்கிறதே ‘பாரதிய’ காலம். பிரிவினைச் செயல்கள், ஆயுதமேந்திய கிளர்ச்சிகள், நாசகார நடவடிக்கைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிப்பது போன்ற புதிய குற்றப்பிரிவுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

பா.ஜ.க.வுக்கு எதிரானவர்களைப் பழிவாங்கவே இவை சேர்க்கப்பட்டுள்ளன என்பதைச் சொல்லத் தேவையில்லை. கருத்துரிமைக் காவலர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் கடந்த பத்தாண்டு காலத்தில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார்கள். சிறையிலும் இருக்கிறார்கள்.

”புதிய குற்றவியல் சட்டங்களே குற்றமாக உள்ளது” : காரணத்தை சொல்லும் முரசொலி தலையங்கம்!

இதை எல்லாம் நியாயப்படுத்தவும், இவர்கள் போன்றவர்களை மிரட்டவும் இந்தப் பிரிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தேசத்துரோகக் குற்றங்கள் என்று சொல்லித் தண்டிக்கும் 124 ஏ -உச்சநீதிமன்றத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்ட பழைய சட்டப் பிரிவு ஆகும். அதனையே புதிய சட்டத்தில் 154 ஆவது பிரிவாகக் கொண்டுவந்து விட்டார்கள்.

இறையாண்மை, ஒருமைப்பாடு என்ற பெயரால் யாரையும் எளிதில் தேசவிரோதிகள் ஆக்கும் குறுக்கு வழி இதில் இருக்கிறது. சாதாரணமாக ஆர்ப்பாட்டம் செய்தாலே தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தலாம், அரசின் அனுமதியை வாங்காமல் காவல் அதிகாரியே இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்ற அளவுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

இந்தியத் தண்டனைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 80 விழுக்காடு குற்றத் தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒருவரைக் கைது செய்தால் 15 நாட்களுக்குள் காவல்துறை எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற இன்றைய நடைமுறையை 40 முதல் 60 நாட்களாக நீட்டித்திருப்பதன் மூலமாக ஒருவரை விசாரிக்காமல் இரண்டு மாதங்கள் வரைக்கும் காவலில் வைக்கவும், அவர்களுக்கு இடைக்காலப் பிணை கிடைக்காமல் தடுக்கவும் முடியும். காவல்துறையின் கைகளில் முழுமையான அதிகாரங்களைத் தருவதாக இவை அமைந்துள்ளன.

எதற்காக இதனை இப்போது செய்கிறார்கள்? நாட்டில் இப்போது இருக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் மறைப்பதற்காக - அமுக்குவதற்காக இதை அவசர அவசரமாகச் செய்திருக்கிறார்கள்.

தங்களது ஆட்சியின் பலவீனங்களை மறைக்க இந்தக் காய்களை உருட்டி விட்டுள்ளார்கள். எதிர்க் கட்சிகளுக்கு விவாதிக்க வாய்ப்பே வழங்காமல் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். ‘மாநிலங்களுக்குத் தங்கள் கருத்தைத் தெரிவிக்க அவகாசம் வழங்கப்படவில்லை’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள்.

இச்சட்டங்களை நிறுத்திவைக்குமாறு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஒன்றிய சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வாலிடம், ‘விரிவான ஆலோசனை தேவை’ என்று தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சட்டத்தின் பெயர் இந்தியில் உள்ளது. உள்ளடக்கம் ஆங்கிலத்தில் உள்ளது. சட்டப் பிரிவுகள் குழப்பமாக உள்ளன. சட்டங்களின் உள்ளடக்கம் மோசமாக உள்ளது. மொத்தத்தில் குற்றவியல் சட்டங்களே குற்றமாக உள்ளன.

banner

Related Stories

Related Stories