முரசொலி தலையங்கம்

யார் ஒட்டுண்ணி? : பிரதமர் மோடிக்கு தெளிவான விளக்கம் கொடுத்த முரசொலி!

இந்தியாவுக்கு சோறு வைக்கத் தான் அவருக்குத் தெரியாதே தவிர, பேரு வைப்பார்!

யார் ஒட்டுண்ணி? : பிரதமர் மோடிக்கு தெளிவான விளக்கம் கொடுத்த முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (05-07-2024)

யார் ஒட்டுண்ணி?

எதிர்க்கட்சிகள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பிரதமர் மோடியால் பதில் சொல்ல முடியவில்லை. அவரிடம் பதில் இல்லை. அதனால் என்ன செய்தார்? எதிர்க்கட்சிகளைப் பற்றி, இரண்டு மாத காலமாக தேர்தல் பரப்புரைகளில் என்ன சொன்னாரோ அதையே நாடாளுமன்றத்திலும் சொல்லி இருக்கிறார்.

“50 தொகுதிகளுக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி போரிடுகிறது. அதற்கு மேல் ஒரு தொகுதியைக் கூட காங்கிரஸால் பிடிக்க முடியாது” என்று சொல்லி தன்னைத் தானே தேற்றிக் கொண்டு இருந்தார் மோடி. ஆனால் காங்கிரஸ் கட்சி 99 இடங்களைக் கைப்பற்றியது. ஒரு உறுப்பினர் அந்தக் கட்சியில் சேர்ந்ததால் 100 என்ற எண்ணிக்கையை அடைந்துவிட்டது காங்கிரஸ். அதனை மோடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த வேதனையை வெளிப்படுத்தும் உரையாகத்தான் அவரது பதிலுரை அமைந்திருக்கிறது.

“காங்கிரஸ் கட்சியை ஒட்டுண்ணி கட்சி” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். நாடாளுமன்றத்தில் ஒரு பிரதமர் பேசும் பேச்சா இது? ஒட்டுண்ணி கட்சியாக காங்கிரஸ் மாறி கூட்டணிக் கட்சிகளை உறிஞ்சி அந்தக் கட்சி வென்று விட்டதாம். பிரதமர் சொல்கிறார். கூட்டணி அரசியலை இதை விட யாரும் கொச்சைப்படுத்த முடியாது.

ஆட்சி அமைக்க பெரும்பான்மை என்பது 272 ஆகும். ஆனால் பா.ஜ.க.விடம் இப்போது இருப்பது 240 பேர்தான். மீதமுள்ளவர்களை இணைத்துக் கொண்டு பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பதற்கு பெயர் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையா? ஒட்டுண்ணி அமைச்சரவையா?

சந்திரபாபு நாயுடுவை பா.ஜ.க. உறிஞ்சியதா? அல்லது அவர் பா.ஜ.க.வை உறிஞ்சினாரா? நிதிஷ்குமாரை பா.ஜ.க. உறிஞ்சியதா? அல்லது அவர் பா.ஜ.க.வை உறிஞ்சி வென்றாரா?

இந்தியாவின் சில மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி எத்தகைய ஒட்டுண்ணி ஆட்சி நடத்தி வருகிறது தெரியுமா?

பா.ஜ.க. ஒட்டுண்ணி அரசு நடத்தும் மாநிலங்கள்

1.ஆந்திரா - தெலுங்கு தேசம் ஆட்சி நடத்தி வருகிறது. இதற்கு பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி என்று பெயர். தெலுங்கு தேசம் - 135 பா.ஜ.க.வுக்கு – 8 எம்.எல்.ஏ.கள் தான் இருக்கிறார்கள்.

2.பீகார் - ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடத்துகிறது.ஐக்கிய ஜனதா தளம் - 47 பா.ஜ.க - 82. டெல்லியில் அவரது தயவு வேண்டும் என்பதற்காக பீகாரில் விட்டுக் கொடுத்துள்ளார்கள்.இல்லாவிட்டால் எப்போதோ கவிழ்த்திருப்பார்கள்.

3.மகாராஷ்டிரா - –சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி. சிவசேனா - 38. பா.ஜ.க – 103. சிவசேனா தயவு டெல்லியில் தேவை என்பதற்காக அவர்களை டம்மி ஆட்சி நடத்த வைத்துள்ளார்கள்.

4.மேகாலயா - தேசிய மக்கள் கட்சி தேசிய மக்கள் கட்சி - 28.

பா.ஜ.க - 2 .

5.நாகலாந்து – நாகலாந்து ஜனநாயக முற்போக்கு கட்சி நாகலாந்து ஜனநாயக முற்போக்கு கட்சி – 25 பா.ஜ.க - 12

6.புதுச்சேரி – என் ஆர் காங்கிரஸ் என் ஆர் காங்கிரஸ் – 10

பா.ஜ.க - 9

7.சிக்கிம் – சிக்கிம் க்ராட்டிகரி மோர்ச்சா சிக்கிம் க்ராட்டிகரி மோர்ச்சா - 31 பா.ஜ.க - 0

ஆனாலும் இங்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடப்பதாகத்தான் சொல்லப்படுகிறது. பா.ஜ.க. ஒட்டுண்ணியாக – இல்லை இல்லை மன்னிக்கவும் ‘கூட்டணியாக’ ஆளும் மாநிலங்கள் இவை.

யார் ஒட்டுண்ணி? : பிரதமர் மோடிக்கு தெளிவான விளக்கம் கொடுத்த முரசொலி!

ஒரே ஒரு மாநிலத்தில் என்னவெல்லாம் செய்தார்கள்?

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி ஆட்சியில் இருந்து வந்தது. அதில் குழப்பத்தை ஏற்படுத்தியது பா.ஜ.க கணிசமான எம்.எல்.ஏ.க்கள் விலகினார்கள்.

சிவசேனா கட்சியில் இருந்த ஏக்நாத் ஷிண்டே தனக்கு ஆதரவாக உள்ள 40 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு தனது தலைமையில் தனி அணியை உருவாக்கினார்.

இதனால், மகாவிகாஸ் அகாதி கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, பா.ஜ.க. துணையுடன், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு பதவியேற்றது. இதையடுத்து சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்தார்கள். ‘நாங்கள் தான் உண்மையான சிவசேனா’ என முதல்வர் ஷிண்டே உரிமை கோரினார்.

முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ஷிண்டே ஆகிய இரு தரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரேயைவிட ஏக்நாத் ஷிண்டேவுக்கு அதிகமான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவு உள்ளதைக் காரணமாகக் காட்டி, சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கே போய்ச் சேரும் என்று தீர்ப்பும் அளித்துவிட்டது.

ஷிண்டேவை தங்களது தொங்கு சதையாக மாற்றி ‘ஒட்டுண்ணி’ அரசாங்கத்தை மராட்டியத்தில் நடத்தி வருகிறார்கள். இத்தகைய வரலாற்றை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து பிரதமர் பேசிக் கொண்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஒரே ஒரு இடமாவது கிடைத்துவிடாதா என்ற நப்பாசையில் பா.ம.க.வை, பன்னீர்செல்வத்தை, தினகரனை, ஏ.சி.சண்முகத்தை, ஜான்பாண்டியனை உறிஞ்சிக் கொழுக்கப் பார்த்தார்களே? என்ன நடந்தது?

பா.ஜ.க. நிறுத்திய வேட்பாளர்களில் 116 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள். அதாவது நான்கில் ஒருவர் வேறு கட்சியில் இருந்து வந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த 37 பேருக்கு இடம் கொடுத்துள்ளார்கள். இவர்களில் எத்தனை பேர் வென்றார்கள் என்பது இருக்கட்டும். இவர்களை பா.ஜ.க.வுக்குள் இணைத்து உறிஞ்சப் பார்த்தது யார்?

பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை, தலைவர்களை வருமான வரித்துறை மூலமாகவும், அமலாக்கத்துறை மூலமாகவும் மிரட்டியதற்கு என்ன பெயர் வைக்கலாம்? அதனையும் பிரதமரே சொல்லட்டும். அவருக்கு தான் நன்றாக பெயர் வைக்கத் தெரிகிறது. இந்தியாவுக்கு சோறு வைக்கத் தான் அவருக்குத் தெரியாதே தவிர, பேரு வைப்பார்!

banner

Related Stories

Related Stories