முரசொலி தலையங்கம்

ராகுல் காந்தி உரையாற்றிய நாளன்று இந்தியா உணர்ந்தது இதைதான் : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?

மிகப்பலவீனமான ஒன்றிய அரசாங்கத்தை நகர்த்திச் செல்லும் பிரதமர்தான் நான் என்பதை அன்றைய தினம் மோடி உணர்ந்திருக்கக் கூடும்.

ராகுல் காந்தி உரையாற்றிய நாளன்று இந்தியா உணர்ந்தது இதைதான் : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (04-07-2024)

ராகுல் பேசியதில் என்ன தவறு?

இந்தியா கூட்டணியின் அரசியல் வெற்றியானது தினந்தோறும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பத்தாண்டு கால பா.ஜ.க. வரலாற்றில் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பேச்சை பிரதமர் உட்கார்ந்து பொறுமையாகக் கேட்டுள்ளார். அமைச்சர்கள் அனைவரும் வரிசையாக எழுந்து பதில் சொல்லி இருக்கிறார்கள். பிரதமர் பேசுவதைக் கேட்கும் அதே உன்னிப்பு உணர்வுடன் பா.ஜ.க. எம்.பி.க் களும் ராகுல் உரையைக் கேட்டார்கள். வரலாற்றில் இல்லாத வகையில் இன்னொருவர் பேச்சை மணிக்கணக்கில் உட்கார்ந்து பிரதமர் மோடி கேட்கும் காட்சியைப் பார்த்தோம். இன்னொருவருக்கு மோடி பதில் சொன்னதையும் பார்த்தோம்.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சுக்கு பிரதமர்கள் பதில் அளிப்பதைப் பார்த்துள்ளோம். ஆனால் பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் அவை அனைத்தும் பழங்கனவாக மாற்றப்பட்டு விட்டன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ஜனநாயகப் பூங்காற்று மெல்ல வீசியதை ராகுல் உரையாற்றிய நாளன்று இந்தியா உணர்ந்தது. அதனை உணர்த்தியதுதான் இந்தியா கூட்டணியின் அரசியல் வெற்றியாகும்.

மிகப்பலவீனமான ஒன்றிய அரசாங்கத்தை நகர்த்திச் செல்லும் பிரதமர்தான் நான் என்பதை அன்றைய தினம் மோடி உணர்ந்திருக்கக் கூடும். சிலரின் தயவால்தான் நாம் பிரதமராக உட்கார்ந்திருக்கிறோம் என்பதையும் அவர் உணர்ந்திருக்கக் கூடும். ஆளும் கட்சியும் - எதிர்க்கட்சியும் ஏறத்தாழ சம பலத்துடன் உட்கார்ந்திருந்த நாடாளுமன்றத்தை அன்றைய தினம் பார்த்தோம். இதுதான் இந்தியா கூட்டணியின் அரசியல் வெற்றியாகும்.

ஏன் தோற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்? என்று பிரதமர் மோடி முன்பு கேட்டார். ‘உங்களால் நினைத்ததைச் செய்ய முடியாது அல்லவா, அதனால்தான் என்பதை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மூலமாக அன்றைய தினம் உணர்ந்திருப்பார் பிரதமர். உணர்ந்திருக்க வேண்டும் பிரதமர்.

அனைத்து மதக் கடவுள்களின் படங்களையும் ராகுல் எடுத்து வந்திருந்து நாடாளுமன்றத்தில் காட்டினார். அனைத்து மதங்களும் அன்பைத் தான் போதிக்கின்றன. குறிப்பாக இந்துக் கடவுள்களும் அன்பைத் தான் அதிகம் போதிக்கின்றன. ‘ஆனால் தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள் எந்த நேரமும் வன்முறையையும் வெறுப்புணர்வையும் விதைப்பது ஏன்? என்று நேருக்கு நேராகக் கேட்டார் ராகுல் காந்தி.

இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லி பழக்கமில்லை பா.ஜ.க.வுக்கு. அதனால் வழக்கம் போல திசை திருப்பல் பாணியைக் கையில் எடுத்தார்கள். பா.ஜ.க.வைப் பார்த்து கேள்வி கேட்டால், ‘இந்துவைக் கொச்சைப்படுத்தி விட்டார்கள்’, ‘இந்திய நாட்டைக் கொச்சைப்படுத்தி விட்டார்கள்’ என்று திசை திருப்புவது பா.ஜ.க.வின் வாட்ஸ் அப் யுனிவர்சிட்டியின் வேலை ஆகும். இதன் வைஸ் சான்சிலரே மோடிதான் என்பது அன்றைய தினம் அவர் சொன்ன பதில் மூலமாகத் தெரிந்தது.

ராகுல் காந்தி, சுற்றி வளைத்துச் சொல்லவில்லை. நேரடியாகத் தான் சொன்னார். ‘இந்து மதம் அன்பைத் தான் போதிக்கிறது, இந்துக்களுக்காக நிற்பதாகச் சொல்பவர்கள் எதற்காக வன்முறையை விதைக்கிறீர்கள் என்றுதான் கேட்டார். உடனே பிரதமர், ‘ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் வன்முறையாளர்கள் என்கிறார் என்றார். இப்படி மோடி திசை திருப்பியது கூட நல்லதாக அமைந்தது. அதனால்தான் விரிவான பதிலை ராகுல் சொன்னார்.

“நான் பா.ஜ.க. குறித்து தான் பேசினேன். பா.ஜ.க.வோ ஆர்.எஸ்.எஸ். அமைப்போ அல்லது மோடியோ ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதிகள் அல்ல என்றார் ராகுல். இதற்கு பதில் இல்லை. “நாங்கள் எங்கே வன்முறையை விதைத்தோம்? என்று பா.ஜ.க.வினர் கேட்டிருக்க வேண்டும். கேட்டிருந்தால், குஜராத் விவகாரத்தை ராகுல் விளக்கி இருக்கக் கூடும்.

ராகுல் காந்தி உரையாற்றிய நாளன்று இந்தியா உணர்ந்தது இதைதான் : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?

“நாங்கள் எங்கே வெறுப்புணர்வை விதைத்தோம்? என்று பா.ஜ.க.வினர் கேட்டிருக்க வேண்டும். கேட்டிருந்தால், ‘அதிகப் பிள்ளை பெற்றுக் கொள்பவர்கள் முதல் வெறுப்பு வார்த்தைகளின் பட்டியலை ராகுல் சொல்லி இருப்பார்.

“நாங்கள்தான் இந்துக்களின் பிரதிநிதிகள் என்று பா.ஜ.க. சொல்லி இருக்க வேண்டும். சொல்லி இருந்தால், ‘இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தவர்களும் இந்துக்கள் தானே என்று ராகுல் பதில் சொல்லி இருப்பார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த ஆண்டு என்ன சொன்னார்கள்?

“வெறுப்புப் பேச்சுகள் பேசாமல் ஒவ்வொருவரும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் அரசியலை மதத்துடன் கலக்கும் போது பெரிய பிரச்சினை எழுகிறது. அரசியலையும் மதத்தையும் பிரிக்கும் தருணத்தில் இது முடிவுக்கு வரும். அரசியல்வாதிகள் மதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தினால் இதெல்லாம் நின்றுவிடும். மதத்துடன் அரசியலை கலப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று சமீபத்தில் தீர்ப்பில் கூறியுள்ளோம். டி.வி. மற்றும் பொது இடங்களில் கூட வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து விட்டன. நாம் எங்கு செல்கிறோம் என்று பார்க்க வேண்டும்? பேச்சுக்களில் கொஞ்சம் கட்டுப்பாடு இருக்க வேண்டாமா? இல்லையெனில் நாம் விரும்பும் இந்தியாவாக உருவாக்க முடியாது. இந்த பேச்சுகளால் நாம் என்ன வகையான இன்பங்களைப் பெறுகிறோம்?

தொடர்ந்து மற்றவர்களை இழிவுபடுத்தும் வகையில் ‘பாகிஸ்தானுக்கு போ என்று பேசி வருகின்றனர். ஆனால் பிற சமூகத்தினரும் இந்த நாட்டைத் தேர்வு செய்துள்ளனர். அவர்களும் உங்கள் சகோதர சகோதரிகள் போன்றவர்கள். அவர்களை அவமதித்து நாட்டின் சட்டத்தை மீற உங்களுக்கு உரிமை இருக்கிறதா? நாட்டின் சட்டத்தை மீறினால், அது செங்கற்கள் போல உங்கள் தலையில் விழும். உண்மையான வளர்ச்சி என்பது நமது நாட்டை வல்லரசாக மாற்ற வேண்டும். அதற்கு நாம் சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும். அப்போதுதான் நம் நாட்டை சிறந்த வாழும் இடமாக மாற்ற முடியும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொன்னார்கள். அதைத்தான் ராகுல் சொல்லி இருக்கிறார் நாடாளுமன்றத்தில். ராகுல் பேசியதில் என்ன தவறு?

banner

Related Stories

Related Stories