முரசொலி தலையங்கம்

ஒன்றிய அரசின் தொடர் தோல்வி: இன்று ‘NET’ - நாளை ‘NEET’ ; ஒன்றிய அமைச்சருக்கு கூச்சமில்லையா? - முரசொலி!

‘நீட்’ தேர்வை ரத்து செய்வதற்கும், நிரந்தரமாக விலக்கிக் கொள்வதற்கும் ஆதரவாக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஒன்றிய அரசின் தொடர் தோல்வி: இன்று ‘NET’ - நாளை ‘NEET’ ; ஒன்றிய அமைச்சருக்கு கூச்சமில்லையா? - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இன்று ‘நெட்’ –- நாளை ‘நீட்’

ஒன்பது இலட்சம் மாணவர்கள் எழுதிய ‘நெட்’ தேர்வை ரத்து செய்துள்ளது ஒன்றிய அரசு. ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்தத் துப்பு இல்லை என்பது இதன்மூலம் மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.

பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்குத் தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய தேர்வு முகமையால் ‘நெட்’ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான இந்தத் தேர்வு கடந்த 18 ஆம் தேதி இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. 317 நகரங்களில் 1,205 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 9 இலட்சத்து 8 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினார்கள். இந்தத் தேர்வை ரத்து செய்துள்ளது ஒன்றிய அரசு.

“தேசிய இணைய குற்ற அச்சுறுத்தல் ஆய்வுப் பிரிவு அளித்த தகவல்களின் அடிப்படையில், ‘நெட்’ தேர்வில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, ஜூன் 18ஆம் தேதி நடத்தப்பட்ட ‘நெட்’ தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இத்தேர்வு புதிதாக மீண்டும் நடத்தப்படும்” என்று யு.ஜி.சி. அறிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் தொடர் தோல்வி: இன்று ‘NET’ - நாளை ‘NEET’ ; ஒன்றிய அமைச்சருக்கு கூச்சமில்லையா? - முரசொலி!

“நெட் தேர்வுக்கான வினாத்தாள் ‘டெலிகிராம்’ சமூக ஊடகத்தில் கசிந்துள்ளது. இதனால்தான் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூச்சமில்லாமல் சொல்லி இருக்கிறார். ‘நெட்’ தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் அவர்தான். ‘டெலிகிராமில் கசிந்துவிட்டது’ என்று கூச்சமில்லாமல் சொல்கிறார். ஒருமுறை கசிவதற்கு வாய்ப்பு கிடைத்தால், அடுத்த முறையும் கசியும். அப்போதும் தேர்வுகளை ரத்து செய்துகொண்டே இருப்பாரா? முறைகேடு குற்றச்சாட்டுகள் இல்லாத தேர்வுகளையே இவர்களால் ஏன் நடத்த முடியவில்லை?

“தேசியத் தேர்வுகள் நடத்துவதில், தேசியத் தேர்வு முகமை மற்றும் ஒன்றியக் கல்வித் துறை அமைச்சகத்தின் அலட்சியம் கடும் கண்டனத்துக்குரியது. இதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்” என்று இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதுபோன்ற தார்மிகப் பொறுப்பு நடவடிக்கைகளை பா.ஜ.க. ஆட்களிடம் எதிர்பார்க்க முடியாது.

இதைவிடக் கேவலமான முறைகேடுகள் நடந்த தேர்வு, ‘நீட்’ தேர்வு ஆகும். “கடந்த மே 4 ஆம் தேதி இரவு அமித் ஆனந்த் மற்றும் நிதிஷ்குமார் என்பவர்களிடம் இருந்து எனது மாமா நீட் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வாங்கிக் கொடுத்தார். அன்று இரவே வினாத்தாள்களில் உள்ள கேள்விகளைப் படித்து மனப்பாடம் செய்து தேர்வு எழுதினேன்” என்று ஒரு மாணவர் பீகார் மாநில காவல் துறையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். வாக்குமூலம் அல்ல இது, ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இந்த மாணவர் பெயர் அனுராக்.

ஒன்றிய அரசின் தொடர் தோல்வி: இன்று ‘NET’ - நாளை ‘NEET’ ; ஒன்றிய அமைச்சருக்கு கூச்சமில்லையா? - முரசொலி!

பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்தவர். தேர்வுத் தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக பீகார் மாநில காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. அதில் வெளியான ரகசியம் இது. இப்படி அனுராக் போல எத்தனை பேருக்கு அந்த வினாத்தாள் முன்கூட்டியே கிடைத்ததோ தெரியவில்லை.

நாடு முழுவதும் 24 இலட்சம் மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதி இருக்கிறார்கள். குஜராத், பீகார், இராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களில்தான் வினாத்தாள் கசிவுச் செய்தி வெளியாகி இருக்கிறது. ஆள் மாறாட்டம் புகார்கள் வந்துள்ளன. முறைகேடு செய்பவர்கள் இந்த மாநிலங்களையே தேர்வு செய்கிறார்கள். வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

குஜராத் மாநிலத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தேர்வு அறையில் இருக்கும் மாணவர்களுக்கு விடை சொல்லித் தரும் வேலையை தேர்வுக் கண்காணிப்பில் இருக்கும் ஆசிரியர்களே பார்த்துள்ளார்கள். 27 மாணவர்களிடம் இருந்து இந்த ஆசிரியர்கள் முன்கூட்டியே பணம் வாங்கி இருக்கிறார்கள். 2.3 கோடி ரூபாய் இந்த ஆசிரியர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் தொடர் தோல்வி: இன்று ‘NET’ - நாளை ‘NEET’ ; ஒன்றிய அமைச்சருக்கு கூச்சமில்லையா? - முரசொலி!

அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் அடுத்தடுத்த வரிசை எண்ணில் அமர்ந்து தேர்வு எழுதிய ஆறு மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுத்தார்கள். வினாத்தாள் கசிந்ததாகப் புகார் வந்த ராஜஸ்தான் தேர்வு மையத்தில் 11 மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளார்கள். நெகட்டிவ் மார்க் என்ற அடிப்படையில் சாத்தியமில்லாத மதிப்பெண்கள், விருப்பத்துக்கு ஏற்ப இவர்களுக்குப் போடப்பட்டுள்ளது.

தேர்வுக்குத் தாமதமாக வந்ததாக போனஸ் மதிப்பெண் என்ற பெயரால் 80 முதல் 90 மதிப்பெண் வரை பலருக்கும் போடப்பட்டுள்ளது. 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மோசடியின் புதிய வடிவம் இது. மாட்டிக் கொண்டதும், ‘கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து விட்டோம்’ என்று பல்டி அடித்துவிட்டது பா.ஜ.க. அரசு.

ஒன்றிய அரசின் தொடர் தோல்வி: இன்று ‘NET’ - நாளை ‘NEET’ ; ஒன்றிய அமைச்சருக்கு கூச்சமில்லையா? - முரசொலி!

இதற்கு என்ன காரணம்? ராகுல் காந்தி மிகச் சரியான காரணம் ஒன்றைச் சொல்லி இருக்கிறார். “நீட் தேர்விலும், நெட் தேர்விலும் முறைகேடு நடப்பதற்கு முதன்மைக் காரணம், கல்வி நிலையங்கள் கையகப்படுத்தப்பட்டதே ஆகும். பல்கலைக் கழகங்களில் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது இல்லை. குறிப்பிட்ட (ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.) அமைப்பைச் சேர்ந்தவர்களா என்று பார்த்துத் தான் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதனால் கல்வி அமைப்பே சீர்கெட்டுள்ளது” என்று சொல்லி இருக்கிறார் ராகுல் காந்தி.

‘நெட்’ தேர்வு ரத்து செய்யப்பட்டதைப் போல, ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதற்கும் ஆயிரம் காரணங்கள் அதிகமாக இருக்கின்றன. ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதற்கும், நிரந்தரமாக விலக்கிக் கொள்வதற்கும் ஆதரவாக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசியல் கட்சிகளைத் தாண்டி மாணவர்கள் கையில் இப்போராட்டம் போய்ச் சேர்ந்துள்ளது.

banner

Related Stories

Related Stories