முரசொலி தலையங்கம்

”தினந்தோறும் விதவிதமாகப் படம் காட்டும் மோடி” : வெளுத்து வாங்கிய முரசொலி!

பொய்யை தினந்தோறும் மோடி சொல்லி வருகிறார்.

”தினந்தோறும் விதவிதமாகப் படம் காட்டும் மோடி” : வெளுத்து வாங்கிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (18-05-2024)

தினந்தோறும் ஒரு நாடகம்

தினந்தோறும் விதவிதமாகப் படம் காட்டிக் கொண்டிருக்கிறார் மோடி. ஒரு நாள் அழுகிறார். இன்னொரு நாள் கர்ஜிக்கிறார். மற்றொரு நாள் பதுங்குகிறார். பிறிதொரு நாள் பம்மாத்து காட்டுகிறார். விதவிதமான உடையைப் போல விதவிதமான வாக்குமூல நாடகங்களை அரங்கேற்றுகிறார். இவை அனைத்தும் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன பழைய நாடகங்கள்தான்.

“மோடி உங்கள் வேலைக்காரன். சாதாரண வேலைக்காரன் மட்டுமல்ல, 24 மணி நேரமும் இருப்பவன். உங்கள் கனவுகள், என் தீர்மானம். இதற்காக, 2047 க்கு 24/7 மணி நேரமும் உழைப்பேன். நீங்கள் எனக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்தீர்கள், அந்தப் பொறுப்பை நான் மிகவும் நேர்மையாக நிறைவேற்றுகிறேன். அதே நேர்மையுடன், எனது அறிக்கையை மக்களுக்கு வழங்குகிறேன். 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை விட எனது 10 ஆண்டுகளில் செய்த வளர்ச்சியை இன்று உலகமே உற்று நோக்குகிறது” என்று மோடி சொல்லி இருக்கிறார்.

அவருக்கு 2014 ஆம் ஆண்டு ஒரு வாய்ப்பு தரப்பட்டது. அதை வைத்துக் கொண்டு இந்தியாவை என்னவாக வளர்த்தெடுத்தார் என்று அவரால் சொல்ல முடியவில்லை. 2019 ஆம் ஆண்டு ஒரு வாய்ப்பு தரப்பட்டது. அதை வைத்துக் கொண்டு இந்தியாவை என்னவாக வளர்த்தார் என்று சொல்ல அவரால் முடியவில்லை.

இப்போதும் 2024ஆம் ஆண்டைப் பற்றி பேசாமல், 2047 ஆம் ஆண்டைப் பற்றி பேசுகிறார். இதில் இருந்து அவர் எத்தகைய கனவுலகத்தில் வாழ்கிறார் என்பது தெரிகிறது.

இந்தத் தேர்தலில் ‘இந்தியா கூட்டணி என்ற சமூகநீதிக் கூட்டணி உதயமானதும், இடஒதுக்கீடைப் பற்றி மோடி அதிகமாக பேசுகிறார். ‘நான்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலன் என்று பேசி இருக்கிறார் மோடி. இதை விட மோசடித்தனமான பொய் வாக்குமூலம் இருக்க முடியாது.

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைப் புகுத்தி சமூகநீதியைச் சிதைத்தவர்தான் மோடி. ‘பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களது இடஒதுக்கீட்டைக் காங்கிரசு கட்சியானது இசுலாமியருக்குக் கொடுத்துவிடும்’ என்று, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருப்பதாக அவரே ஒரு பொய்யைச் சொன்னார். அப்படி எந்த இடத்திலும் இல்லை என்று சொன்னபிறகும் அதே பொய்யை தினந்தோறும் மோடி சொல்லி வருகிறார்.

மதரீதியான இடஒதுக்கீடு வழங்குவதை அம்பேத்கர் ஏற்கவில்லை’ என்று சொல்லி இருக்கிறார் மோடி. அம்பேத்கரைப் பற்றிப் பேசுவதற்கான தகுதியோ, உரிமையோ அவருக்கு இருக்கிறதா? கடந்த பத்தாண்டு காலத்தில் அவரால் நிறைவேற்றப்பட்ட அம்பேத்கரின் எண்ணம் ஏதாவது உண்டா? பட்டியலின மக்களுக்கு உள்ளார்ந்த ஈடுபாடுடன் ஒரே ஒரு திட்டத்தை கொண்டு வந்ததாக அவரால் சொல்ல முடியுமா?.

”தினந்தோறும் விதவிதமாகப் படம் காட்டும் மோடி” : வெளுத்து வாங்கிய முரசொலி!

இந்தத் தேர்தலில்தான் மோடியின், உத்தமர் வேடம் கலைந்து விட்டதாகவும், அதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளது. “கடந்த 25 வருடங்களில் முதலமைச்சராகவும், பிரதமராகவும் இருந்த என் மீது எந்த ஊழலும் இல்லை. எனக்குச் சொந்தமாக வீடு இல்லை, சைக்கிள் கூட இல்லை; ஊழல் செய்த ஜே.எம்.எம்., காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துக்களைக் குவித்தனர். நான் நேர்மையற்றவன் என்று நிரூபித்துக்காட்டி விட்டால் என்னைத் தூக்கிலிடுங்கள் என்று மோடி சொல்லி இருப்பதுதான், அவரது நாடகத்தின் ‘க்ளைமாக்ஸ்’ ஆகும்.

இது மோடி அரசு அல்ல, அதானி அரசு என்றுதான் ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார். ‘அதானி உள்ளிட்ட 25 தொழில் அதிபர்களுக்காக மோடி நடத்தும் ஆட்சி இது’ என்பதுதான் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு. இதற்கு மோடி பதில் சொல்லியாக வேண்டும். பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களில் அதானி உடன் சென்றதும், பிரதமர் சென்ற நாடுகளில் எல்லாம் அதானி தொழில் தொடங்குவதும் பற்றி நாடாளுமன்றத்திலேயே ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதற்கு பிரதமர் இதுவரை பதில் சொல்லவில்லை. இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டது பற்றி ராகுல் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

‘பி.எம். கேர்’ நிதியைப் பற்றி தனது தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு இது வரை மோடி பதில் அளிக்கவில்லை. பா.ஜ.க.வில் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் வாங்கப்படுவதைப் பற்றியும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கும் இதுவரை பதில் இல்லை.

டெல்லி சட்டமன்றத்தில் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வைத்த குற்றச்சாட்டும் இதுவரை மோடியால் மறுக்கப்பட வில்லை. ‘அதானியின் நிறுவனங்கள், மோடியின் நிறுவனங்கள்தான்” என்று சொன்னார் டெல்லி முதலமைச்சர். அதற்காகத்தான் அவர் கைது செய்யப்பட்டார்.

‘என் மீது எந்த ஊழலும் இல்லை என்று மோடி அவராகச் சொல்லிக் கொள்கிறார். அவர் மீது ஊழல் மட்டும் தான் இருக்கிறது. அதை மறைக்க மதத்தைப் பயன்படுத்துகிறார் என்பது மட்டும் தான் உண்மை.

‘என்னைத் தூக்கிலிடுங்கள்’ என்று எல்லா பாசிஸ்ட்டுகளும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் போல மக்கள் இரக்கமற்றவர்கள் அல்ல என்று, மோடியை இந்திய நாட்டு மக்கள் தோற்கடிப்பார்கள்.

banner

Related Stories

Related Stories