முரசொலி தலையங்கம்

”அப்பட்டமான ஒன்றிய பாஜக அரசின் வரி பயங்கரவாதம்” : முரசொலி கடும் தாக்கு!

பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலம் ஆகி வருகிறது.

”அப்பட்டமான ஒன்றிய பாஜக அரசின் வரி பயங்கரவாதம்” : முரசொலி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (01-04-2024)

வரி பயங்கரவாதம்

பா.ஜ.க. தலைமையும், பிரதமர் நரேந்திர மோடியும் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம், தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டு இருக்கிறார்கள். வருமான வரி கணக்கில் முரண்பாடு இருப்பதாகச் சொல்லி காங்கிரசு கட்சிக்கு 1,823 கோடி ரூபாயை அபராதம் விதித்துள்ளார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அபராதம் விதித்துள்ளார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் நிம்மதியாக பங்கெடுக்கக் கூடாது என்பது தான் இதன் நோக்கம், வேறு எதுவுமில்லை!

ஐ.நா.சபையே இதனைக் கண்டித்து விட்டது. “ஒரு நாட்டில் மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று ஐக்கியநாடுகள் அவை சார்பிலான அறிக்கை, மோடிக்கு எதிரான கண்டன அறிக்கையாகவே வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கியதையும், அபராதம் விதித்ததையும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததையும் சுட்டிக் காட்டி ஐ.நா. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உலகநாடுகளால் பாராட்டப்படும் பிரதமர் என்று மோடியைச் சொல்லிக் கொள்கிறார்களே, அவர் ஐ.நா.அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டாமா? உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மானம் காற்றில் பறக்கிறதே? இதற்கு யார் காரணம்? மோடி தானே!

காங்கிரஸ் கட்சி 2018–19 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை 44 நாட்கள் தாமதமாகத் தாக்கல் செய்து விட்டதாம். அதனால் அந்தக் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை முடக்கி இருக்கிறார்கள். அதற்கு 210 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள்.

2017- 18

2018 – 19

2019- 20

2020 – 21 – ஆகிய நான்கு நிதியாண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கிலும் முரண்பாடுகளாம். இதை வைத்து 1,823 கோடி ரூபாயை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்கிறார்கள். இதில் 1,076 கோடியே 35 லட்சம் ரூபாய் அபராதம்.மீதி உள்ள தொகை அதற்கான வட்டித் தொகையாம். இவை ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் ஆகும். டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தடை வாங்க காங்கிரஸ் கட்சிக்கு உரிமை இருக்கிறது. அதற்கான நேரத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காமல் அபராதம் போட்டுள்ளது பச்சை அரசியல் பழிவாங்குதல் அல்லவா? தேர்தலில் காங்கிரஸ் கட்சியை பங்கெடுக்க விடாமல் தடுக்கும் சூழ்ச்சி இது.

காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாக மக்கள் மன்றத்தில் எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், இப்படி கொல்லைப்புறம் வழியாக காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தப் பார்க்கிறது பா.ஜ.க. ‘வரி பயங்கரவாதம்’ என்று குற்றம் சாட்டி இருக்கிறார் ராகுல் காந்தி.

”அப்பட்டமான ஒன்றிய பாஜக அரசின் வரி பயங்கரவாதம்” : முரசொலி கடும் தாக்கு!

தேர்தல் பத்திர ஊழல் வழக்கில் சிக்கியது முதல் விழிபிதுங்கிக் கிடக்கிறது பா.ஜ.க. 8 ஆயிரம் கோடி பணத்தை தேர்தல் பத்திரங்களின் மூலமாக சுருட்டி இருக்கிறார்கள்.

“தேர்தல் பத்திரங்கள் வழியாக நன்கொடை வழங்கியதன் மூலம் 38 கார்ப்பரேட் நிறுவனங்கள், 179 முக்கியமான ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களை மத்திய மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளிடம் இருந்து பெற்றுள்ளது. இந்த நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.2,004 கோடி நன்கொடை வழங்கியதன் மூலமாக மொத்தம் ரூ.3.8 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன.41 கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக 56 முறை, அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை சோதனைகளுக்கு ஆளாகியுள்ளன. இந்நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு ரூ.2,592 கோடி கொடுத்துள்ளன. இதில் ரூ.1,853 கோடி விசாரணை அமைப்புகளின் சோதனைக்குப் பின்னர் கொடுக்கப்பட்டுள்ளது” என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருக்கிறார். இவை எல்லாம் வெளியில் பரவி வருகிறது. பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலம் ஆகி வருகிறது. அதில் இருந்து திசை திருப்பவும் இது போன்ற நடவடிக்கையைச் செய்கிறார்கள்.

“மதுபான முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட அரவிந்தோ ஃபார்மா இயக்குனரிடம் பா.ஜ.க. ரூ.55 கோடி தேர்தல் நன்கொடை பத்திரத்தை பெற்றுள்ளது. ரூ.55 கோடிக்கு பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரம் வழங்கிய பின்னர் அரவிந்தோ ஃபார்மா இயக்குனர் ஜாமீனில் விடுவிடுக்கப் பட்டிருக்கிறார் . மதுபான வழக்கு குற்றவாளியிடம் இருந்து ரூ.55 கோடி நன்கொடை பெற்றது குறித்து பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் நட்டாவும் விளக்கம் அளிக்க வேண்டும். இது குறித்து அமலாக்கத்துறையும் விளக்கம் அளிக்க வேண்டும்” – என்று - ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை வைத்துள்ளது. பா.ஜ.க.வின் யோக்கியதை இதுதான்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள மதுபான கொள்கை வழக்கில் மிக முக்கியக் குற்றவாளி ஒருவரின் பெயர் ரகாவா மாகுண்டா. இவர் அப்ரூவராக மாறிவிட்டார். இவரது தந்தை ஸ்ரீநிவாசலு, தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக ஆந்திராவில் போட்டியிடுகிறார். அவரை ஆதரிக்கிறது பா.ஜ.க. கட்சி. இவர்களது யோக்கியதை இதுதான்.

ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அமலாக்கத்துறை விசாரணையில் இருப்பவர் பிரபுல் படேல். இவர் இப்போது பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறார். இந்த வழக்கை முடித்துக் கொள்கிறோம் என்று டில்லி ரோ அவென்யூ நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு போட்டுள்ளது. அவ்வளவு தான் பா.ஜ.க. வாஷிங் மிஷினில் பிரபுல் படேல் வெளுக்கப்பட்டு விட்டார். வெளியே வந்துவிடுவார். இவர்களது யோக்கியதை இதுதான்.

இதையெல்லாம் மறைக்கவே காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகிறது. முடக்குவோர், விரைவில் முடக்கப்படுவார்கள்.

banner

Related Stories

Related Stories