முரசொலி தலையங்கம்

கார்பரேட் நிறுவனங்களை மிரட்டி நன்கொடை வாங்கவே தேர்தல் பத்திர திட்டம்- பாஜக ஊழலை அம்பலப்படுத்திய முரசொலி!

கார்பரேட் நிறுவனங்களை மிரட்டி நன்கொடை வாங்கவே தேர்தல் பத்திர திட்டம்- பாஜக ஊழலை அம்பலப்படுத்திய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (18.3.2024)

மிரட்டுதல் – பறித்தல் – பத்திரப்படுத்துதல் !

பா.ஜ.க. அமலாக்கத்துறையை எதற்காகப் பயன்படுத்தி இருக்கிறது என்பது அம்பலம் ஆகி இருக்கிறது. அமலாக்கத் துறையால் மிரட்டப்பட்ட நிறுவனங்கள்தான் பா.ஜ.க.வுக்கு அதிகப்படியான நன்கொடைகள் கொடுத்துள்ளன என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. “இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்காத கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் ஏவப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதன்பிறகு அந்த நிறுவனங்கள், பா.ஜ.க.வுக்கு நன்கொடை அளித்துவிட்டால் வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படுகின்றன.

இந்த நிதியை வைத்துத்தான் கட்சிகளைப் பிரிக்கவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைச் சீர்குலைக்கவும் பா.ஜ.க. அரசு பயன்படுத்தி வருகிறது. இதைவிட தேசத் துரோக நடவடிக்கை வேறு ஏதுமில்லை. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸின் நிறுவனங்களைப் போல சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. பா.ஜ.க. அரசு அகற்றப்பட்டு இதுவரை நிகழ்த்தப்பட்ட தவறுகளுக்கு தண்டனை தரப்படும். இதுவரை நடைபெற்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதே என்னுடைய உத்தரவாதம் ஆகும்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொல்லி இருக்கிறார். “அமலாக்கத்துறையால் சோதனைக்குள்ளான நிறுவனங்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க.வுக்கு தேர்தல் நன்கொடை அளித்ததாகச் சொல்வது கற்பனை” என்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கார்பரேட் நிறுவனங்களை மிரட்டி நன்கொடை வாங்கவே தேர்தல் பத்திர திட்டம்- பாஜக ஊழலை அம்பலப்படுத்திய முரசொலி!

எந்தெந்த நிறுவனங்கள் ரெய்டுக்கு உள்ளானது, அதில் எவை எல்லாம் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கி உள்ளது என்ற தரவுகள் அனைத்தும் ஊடகங்களில் துல்லியமாக வெளியாகி வருகிறது. இதில் எதைக் கற்பனை என்கிறார் நிதி அமைச்சர்? ‘அதிக நன்கொடை அளித்த 30 நிறுவங்களில் 14 நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் சொல்லி இருக்கிறார். ‘நன்கொடை கொடுத்த ஒரு நிறுவனத்துக்கு, அவர்கள் நன்கொடை கொடுத்த சில மாதங்களில் பல்லாயிரம் கோடிக்கான ரெண்டர் வழங்கப்பட்டது’ என்பதையும் அவர் அம்பலப்படுத்தி இருக்கிறார். தொழில் நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை (ஈ.டி.), வருமான வரித்துறை (ஐ.டி.), சி.பி.ஐ.யை ஏவி அந்த நிறுவனங்களிடம் இருந்து பா.ஜ.வு.க்கு தேர்தல் நிதி பெறப்பட்டதாக பிரபல ஆங்கில செய்தி இணையதளங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன. 2018--–19 முதல் 2022-–23 நிதியாண்டு வரையிலான தேர்தல் ஆணைய ஆவணங்கள், வழக்கு விவரங்கள், நிதி அறிக்கைளை ஆய்வு செய்து இந்தத் தரவுகளை திரட்டிய அந்த இணையதளங்கள் அதனை அம்பலப்படுத்தி உள்ளன.

“கடந்த 2018-–19 முதல் 2022-–23 நிதியாண்டு வரை பா.ஜ.வு.க்கு நிதியளித்த நிறுவனங்கள் பட்டியலை பரிசீலித்ததில் அதில் 30 நிறுவனங்கள் மீது அதே காலகட்டத்தில் ஒன்றிய அரசின் ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ. ரெய்டு நடத்தியுள்ளது. இந்த 30 நிறுவனங்களும் மொத்தம் ரூ.335 கோடியை பா.ஜ.வு.க்கு தேர்தல் நிதியாக தந்துள்ளன. இதில் 23 நிறுவனங்கள் ரெய்டு நடத்தப்படும் வரை பா.ஜ.வுக்கு ஒரு பைசா கூட தேர்தல் நிதி தந்தது இல்லை. ரெய்டு நடத்தப்பட்டதும் அந்த 23 நிறுவனங்களும் பா.ஜ.வுக்கு நிதி தர ஆரம்பித்துள்ளன. மொத்தம் ரூ.187.58 கோடி நிதியை அந்த நிறுவனங்கள் பா.ஜ.வுக்கு வாரி வழங்கி உள்ளன. 4 கம்பெனிகளில் ரெய்டு நடத்தப்பட்ட 4 மாதத்துக்குள் பா.ஜ.வுக்கு நிதி தந்துள்ளன. பா.ஜ.வுக்கு ஏற்கனவே குறைவாக நிதி தந்த 6 நிறுவனங்கள் மீது ரெய்டு நடத்தப் பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களிலேயே அந்த நிறுவனங்கள் பல மடங்கு அதிக நிதியை பா.ஜ.வுக்கு கொடுத்துள்ளன. தொடர்ந்து பல ஆண்டுகளாக பா.ஜ.வுக்கு நிதி தந்த நிறுவனங்கள் திடீரென நிதி தருவதை நிறுத்திவிட்டால் கூட ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இப்படி 6 நிறுவனங்களை ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போதே சில நிறுவனங்கள் பா.ஜ.வுக்கு நிதி தந்ததும் தெரியவந்துள்ளது. நன்கொடை தந்த 3 நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து லைசென்ஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைத்துள்ளது” -– என்று அந்த ஆங்கில இணையத் தளங்கள் கடந்த பிப்ரவரி மாதமே விரிவாக எழுதி இருந்தன. எனவே தேர்தல் பத்திரங்கள் மூலமாகத் தான் உண்மை வெளியானது என்பது இல்லை. ஊரறிந்த ரகசியம்தான் இது.

“கட்சியில் இணைந்தால் சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குகளை முடித்து வைத்து விடுகிறோம் என பா.ஜ.க. பேரம் பேசியது. அவர்களிடம் தலைகுனிய மறுத்துவிட்டேன்’’ என்று ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா எப்போதோ சொல்லிவிட்டார். “நீங்கள் ஏன் பா.ஜ.க.வில் சேரக் கூடாது? என்று செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கேட்டனர்’’ என செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் கபில்சிபல் நீதிமன்றத்தில் சொன்னார். இதுதான் ஊழல் ஒழிப்பு லட்சணம் ஆகும். மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸில் எம்.பி., அமைச்சர் எனப் பொறுப்புகளை வகித்து, முதல்வர் மம்தாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த சுவேந்து அதிகாரி, அஸ்ஸாம் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரான ஹிமந்தா பிஸ்வா சர்மா, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ரானே, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், சிவசேனா கட்சியின் எம்.பி. பாவனா கவாலி, சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப்சர்நாயக், சிவசேனா பிரமுகர் யஷ்வந்த் ஜாதவ் ஆகியோர் மீதான வழக்குகள் பா.ஜ.க-.வில் சேர்ந்த பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டன. இதுதான் பா.ஜ.க.வின் ஊழல் ஒழிப்பு பாணி ஆகும். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜ.க.வின் முகத்திரை கிழிந்து கொண்டே இருக்கிறது.

banner

Related Stories

Related Stories