முரசொலி தலையங்கம்

“பிரதான் மந்திரி புஸ்வானத் திட்டம் : பெண்ணின் அடையாளம் சமையலறை சிலிண்டர்தானா?” - முரசொலி விமர்சனம் !

மக்களவைத் தேர்தல் தேதி அட்டவணை விரைவில் வெளியாக உள்ள நிலையில், தோல்வி பயத்தில் உள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளது.

“பிரதான் மந்திரி புஸ்வானத் திட்டம் : பெண்ணின் அடையாளம் சமையலறை சிலிண்டர்தானா?” - முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தேர்தல் நேரத்தில் மட்டும் விலை குறையும்!

வீட்டுப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை தேர்தல் நேரத்தில் மட்டும் குறையும் வகையில் 'செட்' செய்து வைத்துள்ளார் பிரதமர் நரேந்திரமோடி. அவர் பிரதமராக வந்தது முதல் சிலிண்டர் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. தேர்தல் நேரம் வந்து விட்டால் மட்டும் 'அதுவாகவே' குறைந்து விடும்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அட்டவணை விரைவில் வெளியாக உள்ள நிலையில், தோல்வி பயத்தில் உள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளது.

சர்வதேச மகளிர் தினத்துக்காக என்றால் 2023 இல், 2022 இல், 2021 இல், 2020 இல் சர்வதேச மகளிர் தினம் வரவில்லையா? அல்லது பெண்கள் சிலிண்டர் வாங்கவில்லையா?

மகளிர் தினத்துக்காக சிலிண்டர் விலையைக் குறைக்கிறேன் என்பதே பிற்போக்குத்தனம் இல்லையா? பெண்ணின் அடையாளம் சமையலறை சிலிண்டர்தானா?

* 2013 ஆம் ஆண்டு சிலிண்டர் விலை 410 ரூபாய்!

* 2014 ஆம் ஆண்டு மோடி, பிரதமராக வருகிறார்!

* 2014 ஆம் ஆண்டு சிலிண்டர் விலை 414 ரூபாய்!

* 2015 ஆம் ஆண்டு சிலிண்டர் விலை 452 ரூபாய்!

* 2016 ஆம் ஆண்டு சிலிண்டர் விலை 432 ரூபாய்!

* 2017 ஆம் ஆண்டு சிலிண்டர் விலை 495 ரூபாய்!

* 2018 ஆம் ஆண்டு சிலிண்டர் விலை 500 ரூபாய்!

* 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடக்கப் போகிறது. சிலிண்டர் விலையைக் குறைத்துவிட்டதாகக் காட்ட பிரதமர் கண்துடைப்பு நாடகம் ஆடினார். 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக 495 ரூபாய் என 5 ரூபாய் விலை குறைக்கப்பட்டது.

இதே ஆண்டில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தார். ஓட்டுப் போட்ட மக்களை அவரே பழிவாங்கத் தொடங்கினார்.

* 2020 ஆம் ஆண்டு சிலிண்டர் விலை 694 ரூபாய் ஆக ஆனது!

* 2021 ஆம் ஆண்டு சிலிண்டர் விலை 889 ரூபாய் ஆனது!

* 2022 ஆம் ஆண்டு சிலிண்டர் விலை 1053 ரூபாய் ஆனது!

* 2023 ஆம் ஆண்டு சிலிண்டர் விலை 1103 ரூபாய் ஆனது.

ஐந்து மாநிலத் தேர்தல் வந்ததும் சிலிண்டர் விலையைக் குறைத்தார் பிரதமர். சிலிண்டர் விலை 918 ரூபாய் ஆனது!

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. சிலிண்டர் விலையை 818 ரூபாய் ஆக்கிவிட்டார் பிரதமர். தேர்தல் முடிந்துதான் ஆட்சிக்கு வந்தால் 1500 ரூபாய் ஆக்கிவிடுவார் மோடி.

“பிரதான் மந்திரி புஸ்வானத் திட்டம் : பெண்ணின் அடையாளம் சமையலறை சிலிண்டர்தானா?” - முரசொலி விமர்சனம் !

இப்படி ஒரு கபட நாடகத்தை எந்தக் கூச்சமும் இல்லாமல் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். 410 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையை 1103 ரூபாய்க்கு மூன்று மடங்கு உயர்த்தியதுதான் பிரதமர் மோடி அரசின் சாதனையாகும். இதை விட மத்தியதர மக்களை பழிவாங்க முடியாது. பத்தாண்டு காலமாக இதை இரக்கமற்றுச் செய்து விட்டு, தேர்தலுக்காக 100 ரூபாய் குறைக்கிறேன் என்பது அரசியல் நாடகம் இல்லாமல் வேறென்ன? குறைப்பதாக இருந்தால் பாதி விலைக்கு குறைக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்?

2021 ஆம் ஆண்டு சூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் என மாதம்தோறும் உயர்த்தப்பட்டது.

2022 மே மாதம் மட்டும் 2 முறை வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில் சூன் மாதமும் உயர்த்தப்பட்டது. சூலையிலும் உயர்த்தப்பட்டது.

சிலிண்டர் விலையைக் குறை என்றால் அது எங்கள் கையில் இல்லை, பொதுத்துறை நிறுவனங்கள்தான் குறைக்க வேண்டும் என்பார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் இந்த நிறுவனங்கள் வாயைப் பொத்திக் கொண்டு இருந்துவிடும். விலைகளை இவர்கள் விருப்பத்துக்கு குறைத்துக்கொள்வார்கள். சந்தையின் நிலைமைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே அதன் விலையைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று சொன்னது யார்? பா.ஜ.க. ஆட்சிதான்.

2014–ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றபோது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 106 டாலராக இருந்தது. அப்போது சமையல் சிலிண்டர் விலை 410 ரூபாய் மட்டுமே. ஆனால், தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலை 86 டாலராக குறைந்துள்ள நிலையில், சிலிண்டர் விலையை ஆயிரம் ரூபாய்க்கு உயர்த்தி மக்கள் தலையில் சுமையைக் கட்டியது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு.

சிலிண்டர் விலை உயரும் போது காங்கிரசு ஆட்சி காலத்தில் மானியம் இருந்தது. அதனை நாங்கள் பணமாகத் தரப்போகிறோம் என்று முதலில் சொன்னது பா.ஜ.க. அரசு. 563 ரூபாயாக இருந்த மானியம், இன்று 25 ரூபாயாக தேய்ந்துவிட்டது.

கேட்டால் கோடிக்கணக்கான மக்களுக்கு புதிய கேஸ் இணைப்பு தந்துவிட்டதை சாதனையாக பா.ஜ.க. சொல்கிறது. சமீபத்திய ஆய்வின்படி இந்த திட்டத்தில் இணைப்பு பெற்ற 92 சதவிகித மக்கள் காஸ் சிலிண்டரை ரீஃபில் செய்வதே கிடையாது. எட்டு சதவிகித மக்கள்தான் ரீஃபில் செய்கிறார்கள். எனவே, 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை' பிரதான் மந்திரி புஸ்வானத் திட்டம் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும்!

- முரசொலி தலையங்கம்

13.03.2024

banner

Related Stories

Related Stories