முரசொலி தலையங்கம்

“பா.ஜ.க.வின் ஒன்றரை அணா வாக்கு வங்கியை ஒழிக்க இவர்களே போதும் !” - முரசொலி விமர்சனம் !

சுயமாய் நிதி உருவாக்கத் தெரியாததால் மாநிலங்களின் நிதியை GST-யாகச் சுரண்டிக் கொழுக்கும் ஒன்றிய அரசின் நிதித் துறை அமைச்சராக இருப்பவரால், மாநில வரிகள் இல்லாமல் அரசை நடத்த முடியுமா? நடத்தத் தெரியுமா?

“பா.ஜ.க.வின் ஒன்றரை அணா வாக்கு வங்கியை ஒழிக்க இவர்களே போதும் !” - முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சதிகளை வெல்லும் சாதுர்யங்கள் - 1

சில நாட்களுக்கு முன்னால் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 'தினமலர்' நாளிதழுக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். வேறு யாருக்கு கொடுப்பார்? அந்த நாளிதழ் அதற்கு இட்டிருந்த தலைப்பு, 'சாதுர்யம் இருந்தால் தமிழகம் சாதித்து கொள்ளலாமே!' என்பது ஆகும். ‘தமிழ்நாட்டில் இருந்து வரி வாங்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசும் சாதுர்யம் இருந்தால் சாதித்துக் கொள்ளலாமே' என்று நமக்கும் கேட்கத் தெரியும்.

சுயமாய் நிதி உருவாக்கத் தெரியாததால் மாநிலங்களின் நிதியை ஜி.எஸ்.டி.யாகச் சுரண்டிக் கொழுக்கும் ஒன்றிய அரசின் நிதித் துறை அமைச்சராக இருப்பவரால், மாநில வரிகள் இல்லாமல் அரசை நடத்த முடியுமா? நடத்தத் தெரியுமா? பூண்டு சாப்பிடாத புத்திசாலியால், வெங்காயம் சாப்பிடாத அறிவாளியால் இது முடியுமா?

நிதி அமைச்சகப் பணியே நிதிப் பகிர்வுதான். இந்த அடிப்படையே தெரியாதவர் ஒன்றிய நிதி அமைச்சராக இருக்கிறார். அண்ணாமலைகள், ஆர்.என்.ரவிகள், நிர்மலா சீதாராமன்கள் போதாதா பா.ஜ.க.வின் ஒன்றரை அணா வாக்கு வங்கியை ஒழிக்க! அதற்குத்தான் உதவும் இந்தப் பேட்டிகள்!

தேர்தல் என்பதால் இவர்களை பேச வைக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இவர்களை பேச வைக்காமல் இருப்பதுதான் அந்தக் கட்சிக்கு நல்லது என்ற அடிப்படையில் இருக்கிறது அந்தப் பேட்டி. தூத்துக்குடி நிகழ்ச்சியில் இந்தப் பேட்டிக்கு மிகச் சரியான பதிலடி கொடுத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். "உங்களிடம் சாதுர்யம் இருந்தால் நீங்கள் சாதித்துக் கொள்ளலாமே என்று மிக ஆணவமாக அவர் பேட்டி அளித்துள்ளார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. எங்களிடம் சாதுர்யம் இருப்பதால் தான் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்கிக் காட்டி இருக்கிறோம்.

தொழில் தொடங்குவதற்கு தமிழ்நாட்டை நோக்கி உலகப் புகழ் பெற்ற நிறுவனங்கள் வர என்ன காரணம்? எங்களது வளர்ச்சியைப் பார்த்துதானே வருகிறார்கள். அனைத்துத் துறையிலும் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறது தமிழ்நாடு. இவரைப் போன்ற இடைக்காலத் தடைகளையும் தாண்டித்தான் இந்த வெற்றியை பெற்று வருகிறோம்.” என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

“பா.ஜ.க.வின் ஒன்றரை அணா வாக்கு வங்கியை ஒழிக்க இவர்களே போதும் !” - முரசொலி விமர்சனம் !

சட்டமன்றத்தில் உரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசின் சாதனைகளை முழுமையாகப் பட்டியலிட்டாரே! இவை அனைத்தும் பா.ஜ.க.வின் சதிகளை வென்ற சாதுர்யங்கள்தானே!

* இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருவது தமிழ்நாட்டின் பொருளாதார வளமாக இருக்கிறது.

* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24 விழுக்காடாக இருக்கும் போது தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19 விழுக்காடாக இருக்கிறது.

* இந்திய அளவில் பணவீக்கமானது 6.65 விழுக்காடாக இருக்கும் போது - தமிழ்நாட்டில் அது 5.97 விழுக்காடாக இருக்கிறது. தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது.

* ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.

* தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14 ஆவது இடத்தில் இருந்து 3 ஆவது இடத்துக்கு தமிழ்நாடு உயர்ந்து வந்துவிட்டது.

* கல்வியில் இரண்டாவது இடத்துக்கு தமிழ்நாடு வந்துவிட்டது.

* புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்துவிட்டது.

- இவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் சாதுர்யத்தால் அடைந்த சாதனைகள்தான். பா.ஜ.க. அரசின் சதிகளை வென்று அடைந்த சாதுர்ய சாதனைகள்தான்.

நிதிப்பற்றாக்குறை என்பது 3.5 விழுக்காட்டுக்குள் இருக்க வேண்டும். அந்த வரம்புக்குள்தான் தமிழ்நாடு அரசு இருக்கிறது. உள் கட்டமைப்புக்காக ஒரு மாநில அரசு எவ்வளவு செலவு செய்கிறது என்பது அந்த மாநிலத்தின் வளத்தைக் காட்டும். அந்த வகையில் கட்டமைப்புக்காக 47 ஆயிரம் கோடியைச் செலவு செய்யும் அளவுக்கு நிதி வளம் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது.

அதேபோல் மாநிலத்தின் வரி வருவாய் எப்படி இருக்கிறது என்பதும் அந்த மாநிலத்தின் நிதி வளத்தின் அடையாளம் ஆகும். நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் அவர்கள் அளித்துள்ள பேட்டியில் இதனை விளக்கிச் சொல்லி இருக்கிறார். "நம்முடைய சொந்த வரி வருவாயில் 15 விழுக்காடு வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். பத்திரப் பதிவுத் துறையில் அதிக வளர்ச்சி இருக்கும். மற்ற வரி வருவாயில் அதிகளவு நிதி வரும் என எதிர்பார்க்கிறோம். வணிக வரி, பத்திரப் பதிவுத் துறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை வரும் நிதி ஆண்டில் நல்ல பலனைத் தரும்” என்று சொல்லி இருக்கிறார்.

ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வானது 6.66 விழுக்காடாக இருந்து இப்போது 4.08 ஆக குறைந்து விட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன் பதில் சொல்ல வேண்டும். இரண்டு பெரும் வெள்ளம் காரணமாக நாம் கேட்ட 37 ஆயிரம் கோடியில் ஒரு பைசா கூட வரவில்லை. அதற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சொல்லி இருந்தால் பாராட்டலாம். ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய மானியங்கள், நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கின்றன. அதற்கு அவர் நியாயமான காரணங்கள் சொல்லி இருக்க வேண்டும்.

- தொடரும் -

banner

Related Stories

Related Stories