முரசொலி தலையங்கம்

முதலமைச்சரின் சாதனைப் பயணம் : தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசு!

சாதனையை எட்டுவதற்கான சாதனைப் பயணமாக ஸ்பெயின் பயணத்தை நிகழ்த்திக் காட்டி விட்டு வந்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சரை வாழ்த்துவோம்.

முதலமைச்சரின் சாதனைப் பயணம் : தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (09-02-2024)

சாதனைப் பயணம்!

தமிழ்நாட்டின் வளத்துக்கும் நலத்துக்கும் மிகமிக முக்கியமான சாதனைப் பயணத்தை முடித்துவிட்டு வந்திருக்கிறார் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். அவருக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகளை முதலில் சொல்வோம்!

எட்டுநாட்கள் அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் சென்றார் முதலமைச்சர் அவர்கள். இதன் நோக்கம், தமிழ்நாட்டை நோக்கி தொழில்களை ஈர்ப்பது ஆகும். அந்த நோக்கத்துக்கு மாபெரும் பலன் கிடைத்துள்ளது. முதலமைச்சரின் பயணத்தின் பயனாக, 3,440 கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹபக் லாய்டு நிறுவனம் – 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. எடிபான் நிறுவனம் – 540 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ரோக்கா நிறுவனமும் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளது.

இதனை மகிழ்ச்சியோடு அறிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், “தமிழ்நாடு குறித்தும், கழக அரசு குறித்தும் உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது” என்று சொல்லி இருக்கிறார்.

இந்தியாவில் எத்தனையோ மாநில அரசுகள் உள்ளன. அனைத்து மாநில அரசுகளும், அந்த மாநிலத்து முதலமைச்சர்களும் இதுபோன்று தொழில் முதலீடுகளைக் ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வது இல்லை. சென்றாலும் இது போன்ற முதலீடுகள் குவிவது இல்லை. தமிழ்நாட்டுக்கு மட்டும் இப்படி வருகிறது என்றால் அதுதான் உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கது. அதனைத்தான் ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழ் எழுதி இருக்கிறது.

“இந்தியாவுக்கு மிகவும் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வகையான வேலைகள் தேவைப்படுகின்றன. தொழிற்சாலை வேலை தவிர வேறு வேலைகள் எதுவும் அங்கு இல்லை. கடந்த ஆண்டு, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை இந்தியா முந்தியது. இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால் அந்த மக்கள் தொகை வீக்கத்தை நன்மையாக மாற்றுவது, இந்தியாவின் தொழிலாளர்களை அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்களாக மாற்றுவதாகும். இந்தியர்களில் பாதிப் பேர் சிறு விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

இந்தியாவில் முன்னோக்கிச் செல்லும் பாதையாக தமிழ்நாட்டின் பாதையைச் சுட்டிக்காட்டலாம். 7 கோடி மக்கள் வாழும் தமிழ்நாடு தற்போது தொழில் துறையில் வெற்றி பெற்று வருகிறது. இந்திய அரசாங்கம்

2021-–ஆ-ம் ஆண்டில் டெல்லி, நொய்டா போன்ற மாநிலங்களில் மின்னணு உற்பத்திக்கு மானியம் வழங்கத் தொடங்கியது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அந்த ஊக்கத்தொகை அவசியமாகக் கருதப்படவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவும் பயணிக்கும் பாதையைத் தவிர்த்து வேறு வழிகளில் தமிழ்நாடு பயணித்து வெற்றி பெற்று வருகிறது.” -– என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ எழுதி இருக்கிறது.

தொலைநோக்குப் பார்வையுடன் முதலமைச்சர் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள்தான் இதற்கு முக்கியமான காரணம்.

பேராசிரியர் ஜெயரஞ்சனைத் துணைத் தலைவராகக் கொண்ட மாநிலத் திட்டக்குழுவை மாற்றி அமைத்தார். தமிழ்நாட்டுக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவையும் அமைத்தார். அது உலகம் பாராட்டும் குழுவாக அமைந்திருந்தது.

முதலமைச்சரின் சாதனைப் பயணம் : தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசு!

பேராசிரியர் ரகுராம் ராஜன் அவர்கள் – இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர். எஸ்தர் டஃப்லோ அவர்கள் - உலகத்தின் உயரிய நோபல் பரிசு பெற்றவர். அரவிந்த் சுப்பிரமணியம் அவர்கள் - ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர். ஜான் ட்ரீஸ் அவர்கள் - பொருளாதார நிபுணர், அமர்த்தியா சென்னுடன் இணைந்து புத்தகம் எழுதியவர். எஸ்.நாராயணன் அவர்கள் - ஒன்றிய அரசின் நிதிச் செயலாளராக இருந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு துறைகளைத் திறம்பட வழிநடத்தியவர். இக்குழுவே உலகளாவிய பாராட்டைப் பெற்றது.

மாநிலங்களிடம் வரியை வசூல் செய்து மாநிலங்களுக்கு எதுவும் தராத ஒரு ஒன்றிய அரசின் கீழ் மாநிலமாக இருப்பதில் உள்ள நெருக்கடியை உணர்ந்து தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர். ஒன்றிய அரசு நிதியும் தரப்போவது இல்லை. புதிய திட்டங்களையும் வழங்கப் போவது இல்லை என்பதை உணர்ந்தே முதலமைச்சர் இயங்கி வருகிறார்.

அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையைக்கூட கட்டாமல் வைத்துள்ளது பா.ஜ.க. அரசு. கடன் வாங்கக் கூட அனுமதிப்பது இல்லை. 37 ஆயிரம் கோடி ரூபாயை இரண்டு மாபெரும் இயற்கைப் பேரிடருக்காக தமிழ்நாடு கேட்டது. அதில் ஒரு பைசாகூட வரவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டை மேன்மைப்படுத்த வேண்டுமானால் என்ன செய்வது? உலகளாவிய பயணங்களின் மூலமாக முதலீடுகளை ஈர்ப்பதுதான் முக்கியமான வழியாகும்.

முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறார் முதலமைச்சர் அவர்கள். வணிகம் புரிதலை எளிதாக்கி வருகிறது அரசு. திறன்மிகு பணியாளர்களை உருவாக்குதல், தொழிலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கிடையே இணைப்பினை ஏற்படுத்துதல், தொழிற்சாலைகளுக்கு ஏற்ற தொழிலாளர்களைத் தயார்படுத்துதல், இளைஞர்களின் திறனுக்கு ஏற்ற வேலைகளை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனமாக இருக்கிறது தமிழ்நாடு அரசு.

ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன்,

1) முதலாவதாக, தெற்காசியாவிலேயே, முதலீடுகளுக்குச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். முதலீடுகள் மாநிலம் முழுவதும் பரவலாகவும் சீராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2) இரண்டாவதாக, 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும்.

3) மூன்றாவதாக, உலகளாவிய முன்னணி தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டினை நோக்கி வர வைத்திட வேண்டும்.

4)நான்காவதாக, உலகத்தின் மூலை முடுக்கிற்கெல்லாம், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் (Made in Tamil Nadu) சென்றடைய வேண்டும். – என்ற இலக்கினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். ‘தமிழ்நாடு தனிப்பாதையில் பயணிக்கிறது’ என்று நியூயார்க் டைம்ஸ் சொல்வது இதைத்தான்.

இத்தகைய சாதனையை எட்டுவதற்கான சாதனைப் பயணமாக ஸ்பெயின் பயணத்தை நிகழ்த்திக் காட்டி விட்டு வந்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சரை வாழ்த்துவோம்.

banner

Related Stories

Related Stories