முரசொலி தலையங்கம்

“பா.ஜ.க.வை தமிழர்கள் புறக்கணிக்க இந்த ஒன்றே போதும்...” - CAA பிரச்னையை சுட்டிக்காட்டி முரசொலி விமர்சனம்!

'இந்து'க்களாகவே இருந்தாலும் 'தமிழர்களாக' இருந்தால் வேண்டாம் என்பதுதான் பா.ஜ.க.வின் வகுப்புவாத, இனவெறுப்பு வாதக் கொள்கை ஆகும். பா.ஜ.க.வை தமிழர்கள் புறக்கணிக்க இந்த ஒன்றே போதும்!

“பா.ஜ.க.வை தமிழர்கள் புறக்கணிக்க இந்த ஒன்றே போதும்...” - CAA பிரச்னையை சுட்டிக்காட்டி முரசொலி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மதவாத இனவெறுப்புவாதச் சட்டம் அது!

பா.ஜ.க. என்ற வகுப்புவாதக் கட்சிக்கு மூன்றே மூன்று தான் கொள்கைகள். ஒன்று, பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவிலைக் கட்டுவது. கட்டித் திறந்துவிட்டார்கள். இரண்டு, காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை ரத்து செய்வது. ரத்து செய்துவிட்டு, ஐந்து ஆண்டுகளாக அங்கு தேர்தலே இல்லாமல் பார்த்துவிட்டார்கள். மூன்றாவது, சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவது. அதனைக் கொண்டு வரத் துடிக்கிறார்கள். இதையும் செய்து விட்டால் அவர்களது அஜெண்டா ஓவர்!

கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் நான்கு ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கிறது குடியுரிமைத் திருத்தச் சட்டம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரப்போகிறது என்பதால் இதனைக் கையில் எடுத்துள்ளார்கள்.

‘குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப் போகிறோம்' என்று ஒன்றிய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் சொல்லி இருக்கிறார். இவர் என்ன பிரதமரா? அல்லது உள்துறை அமைச்சரா? இல்லை. குட்டியை விட்டு ஆழம் பார்ப்பதைப் போல இவரை இறக்கி விட்டுள்ளார்கள். சி.ஏ.ஏ. என்பது பா.ஜ.க. விழுந்தால் எழ முடியாத குழியாகும். தீராப்பழியாகும். "மேற்கு வங்க மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்” என்று மேற்கு வங்கத்தில் வைத்து சொல்லி இருக்கிறார் ஒன்றிய அமைச்சர். இதற்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.

“பா.ஜ.க.வை தமிழர்கள் புறக்கணிக்க இந்த ஒன்றே போதும்...” - CAA பிரச்னையை சுட்டிக்காட்டி முரசொலி விமர்சனம்!

“தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க. அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மத நல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்! No CAA In TamiINadu” என்று உறுதி செய்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

குடியுரிமைச் சட்டம் என்பது, ஒரு நாட்டில் வாழ முடியாமல் அகதிகளாக வருகின்றவர்களுக்கு வாழ்வு தரக்கூடியது ஆகும். இந்திய நாடாளுமன்றத்தில் 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில்தான் இன்றைய ஒன்றிய அரசு ஒரு திருத்தம் செய்கிறது. அனைவருக்கும் குடியுரிமை என்று சொல்லி இருந்தால் அதனை நாம் எதிர்க்கப் போவது இல்லை. ஆனால் பா.ஜ.க.வின் குறுகிய எண்ணத்துக்கு வடிவம் கொடுத்துள்ளது இந்த சட்டத் திருத்தம்.

* எல்லா மதத்தவருக்கும் குடியுரிமை உண்டு, இசுலாமியரைத் தவிர!

* எல்லா நாட்டவர்க்கும் குடியுரிமை உண்டு, ஈழத்தமிழரைத் தவிர!

- இதுதான் பா.ஜ.க.வின் இசுலாமியர் விரோத தமிழர் விரோத குடியுரிமைச் சட்டம் ஆகும். இதனை எதிர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினரான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள், சமணர்கள், பவுத்தர்கள் இந்தியாவுக்குள் வரலாமாம். ஆனால் இசுலாமியர்கள் வரக்கூடாதாம். இப்படி மத உள்நோக்கம் கொண்டது எப்படி அனைவர்க்கும் பொதுவான சட்டம் ஆகும்? இந்திய அரசை மதச்சார்பற்ற அரசு என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதன்படி பார்க்கும்போது மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்தச் சட்டத்தையும் கொண்டு வர முடியாது. ஆனால் அதனைத் தான் இன்றைய பா.ஜ.க. அரசு செய்கிறது..

“பா.ஜ.க.வை தமிழர்கள் புறக்கணிக்க இந்த ஒன்றே போதும்...” - CAA பிரச்னையை சுட்டிக்காட்டி முரசொலி விமர்சனம்!

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பாதிக்கப்படும் மக்கள் இந்தியாவுக்குள் வரலாம் என்றால் இலங்கையில் இருந்து மக்கள் வர என்ன தடை? மத ரீதியாகவும், இன ரீதியாகவும் அதிகமான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் நாடு இலங்கை. தமிழர்கள் பச்சைப் படுகொலைகள் செய்யப்பட்டார்களே இலங்கையில். தமிழர்கள் கட்டிய கோவில்கள் இடிக்கப்பட்டதே? அவை 'இந்துக் கோவில்கள்'தானே? மற்ற அண்டை நாட்டைச் சேர்ந்த 'இந்துக்கள்' வரலாம் என்றால் ஈழத்தில் இருக்கும் தமிழர்களை 'இந்துக்களாக' இந்த பா.ஜ.க. அரசு நினைக்கவில்லையா? ஈழத்தில் இருப்பவர்கள் இனத்தால் தமிழர்களாக இருந்தாலும் அவர்களது சமய நம்பிக்கை இந்து - சைவம் சார்ந்ததுதானே!

தமிழகத்தில் சுமார் 78 ஆயிரம் ஈழத்தமிழர்கள் அவர்களுக்கான அரசு வாழ்விடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 1983ம் ஆண்டு வந்தவர்கள் முதல் 2002ம் ஆண்டு வந்தவர்கள் வரை இருக்கிறார்கள். இவர்களால் மீண்டும் இலங்கைக்குச் செல்ல முடியாது. அவர்களுக்கு தாய்த்தமிழகம்தானே அடைக்கலம் தர முடியும்? அவர்களைப் புறக்கணிக்கும் சட்டத்தை தமிழ்நாடு எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஒன்றிய அரசு இப்படி ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்ததும், பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த ஈழ அகதிகள், "எங்களுக்கு இந்தியக் குடியுரிமை தராவிட்டால் கடலில் கொண்டு போய் தள்ளிவிடுங்கள்” என்று பேட்டி அளித்தார்கள்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ஈழ அகதி மாணவர் ஒருவர், "எனக்கு இந்தியக் குடியுரிமைதராவிட்டால், கருணைக்கொலை செய்துவிடுங்கள்” என்று சொன்னார். இதையெல்லாம் மீறித்தான் குடியுரிமைச் சட்டம் வரப் போகிறது. 'இந்து'க்களாகவே இருந்தாலும் 'தமிழர்களாக' இருந்தால் வேண்டாம் என்பதுதான் பா.ஜ.க.வின் வகுப்புவாத, இனவெறுப்பு வாதக் கொள்கை ஆகும். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கு ஆயிரம் காரணம் இருக்கிறது. பா.ஜ.க.வை தமிழர்கள் புறக்கணிக்க இந்த ஒன்றே போதும்!

- முரசொலி தலையங்கம்

02.02.2024

banner

Related Stories

Related Stories