முரசொலி தலையங்கம்

தேர்தல் விவகாரம் : “பா.ஜ.க.வுக்கு தெரிந்தது குறுக்கு வழி மட்டும்தான்...” : முரசொலி விமர்சனம் !

சண்டிகர் மேயர் தேர்தலில் கோல்மால் வேலைகளைப் பார்த்து மேயர் பதவியைக் கைப்பற்றி இருக்கிறது பா.ஜ.க. என முரசொலி விமர்சித்துள்ளது.

தேர்தல் விவகாரம் : “பா.ஜ.க.வுக்கு தெரிந்தது குறுக்கு வழி மட்டும்தான்...” : முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...

பா.ஜ.க.வுக்கு தெரிந்தது நேரிய வழியல்ல, குறுக்கு வழி மட்டும்தான். அவர்கள் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருப்பது அப்படித்தான். இதுதான் பா.ஜ.க.வுக்கு தெரிந்த ஒரே வழியாகும். அதைத்தான் மெய்ப்பித்திருக்கிறது சண்டிகர் மேயர் தேர்தல். பெரும்பான்மை பெற்று மேயராக ஆகி இருக்க வேண்டிய கட்சி ஆம் ஆத்மி ஆகும். ஆனால் கோல்மால் வேலைகளைப் பார்த்து மேயர் பதவியைக் கைப்பற்றி இருக்கிறது பா.ஜ.க. இந்த தேர்தலுக்கு முன்னதாகவே இதனைச் சுட்டிக்காட்டி இருந்தார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் அவர்கள் சண்டிகர் தேர்தலைப் பற்றி சுட்டிக் காட்டினார்கள். “நாம் ஒற்றுமையாக நின்றுவிட்டாலே, அது பா.ஜ.க.வை மனரீதியாக பலவீனப்படுத்தி விடும். ஒரே ஒரு உதாரணத்தை சொல்கிறேன். சண்டிகர் மாநகர மேயரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்க இருந்தது. ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பா.ஜ.க.வுக்கு 14 கவுன்சிலர்கள் ஆதரவு இருந்தது. ஆம் ஆத்மி கட்சிக்கு 13 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆம் ஆத்மியும், காங்கிரசும் இணைந்து போட்டியிட்டதால் மேயர் பதவியை இந்தியா கூட்டணி கைப்பற்றும் நிலைமை உருவானது. இந்தியா கூட்டணியின் முதல் வெற்றியாக இது அமையப் போகிறது என்று வட மாநில ஊடகங்கள் எழுதினார்கள். உடனே என்ன செய்தார்கள் தெரியுமா? தேர்தலையே ரத்து செய்ய வைத்து விட்டார்கள். தேர்தல் நடந்திருந்தால் இந்தியா கூட்டணிதான் வென்றிருக்கும். ஒரு மேயர் தேர்தலையே கேன்சல் செய்கிறார்கள் என்றால், பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை இந்தியா கூட்டணித் தலைவர்கள் உணர்ந்தாக வேண்டும்.” என்று முதலமைச்சர் அவர்கள் எச்சரிக்கையுடன் சொன்னார்கள்.

சண்டிகர் தேர்தலில் இப்போது பா.ஜ.க.வே வென்றுவிட்டது. எப்படி வென்றது? ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர்கள், காங்கிரசைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வுக்கு கட்சி மாறி விட்டார்களா? இல்லை. மாறாக, அவர்கள் அளித்த வாக்குகளைச் செல்லாது என்று ஆக்கிவிட்டு, பா.ஜ.க. வென்றதாக அறிவித்துவிட்டார்கள். இதை விட மகா கேவலம் இருந்திருக்க முடியுமா?

தேர்தல் விவகாரம் : “பா.ஜ.க.வுக்கு தெரிந்தது குறுக்கு வழி மட்டும்தான்...” : முரசொலி விமர்சனம் !

ஜனவரி 30 - அண்ணல் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள். அதே நாளில் ஜனநாயகப் படுகொலையை நடத்தி இருக்கிறது பா.ஜ.க.

சண்டிகர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 35 இடங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி 20 இடங்களைப் பெற்றுள்ளது. பா.ஜ.க 14 கவுன்சிலர்களையும், சிரோன்மணி அகாலிதளம் ஒரு கவுன்சிலரையும் பெற்றுள்ளது. மேயர் பதவியை ஆம் ஆத்மி கட்சியும், இரண்டு துணை மேயர் பதவிகளை காங்கிரஸ் கட்சியும் பிரித்துக் கொண்டு கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ‘இந்தியா’ கூட்டணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் இது. ஜனவரி 18 அன்று தேர்தல் நடந்திருக்க வேண்டும். ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும் என்ற நிலையில் தேர்தல் அதிகாரியை உடல்நிலை சரியில்லை என்று சொல்லி வரவிடாமல் தடுத்து விட்டது பா.ஜ.க. பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு தேர்தலை ஒத்தி வைத்தார்கள். ஆனால் திடீரென்று ஜனவரி 30 ஆம் தேதியே தேர்தலை நடத்தி விட்டார்கள். தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி 20 வாக்குகளையும், பா.ஜ.க. 16 வாக்குகளையும் பெற்றது. ஆனால் 8 வாக்குகளை செல்லாது என அறிவித்து பா.ஜ.க. குறுக்கு வழியில் வெற்றி பெற்றது.

இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 8 பேர் வழங்கிய வாக்குகளைச் செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்துவிட்டார். பா.ஜ.க.வின் மகா திருட்டுத்தனம் அல்லவா இது? மோடி தேர்தலா, மோசடித் தேர்தலா என்று எதிர்க்கட்சிகள் கேட்பது உண்மை தானே?

தேர்தல் விவகாரம் : “பா.ஜ.க.வுக்கு தெரிந்தது குறுக்கு வழி மட்டும்தான்...” : முரசொலி விமர்சனம் !

முதலமைச்சரும், அம்மாநில ஆம் ஆத்மி தலைவருமான பகவந்த் மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் ஜனநாயகத்தில் இன்று கறுப்பு நாள்” என குறிப்பிட்டுள்ளார். “இதற்குமுன்பு மத்தியப் பிரதேசம், கோவா, மகாராஷ்டிரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க. இதுபோன்ற செயலில்தான் ஈடுபட்டது. இப்போது சண்டிகரில் மேயர் பதவியை பா.ஜ.க. சூறையாடியுள்ளது. இதுதான் பா.ஜ.க.வின் வரலாறு” என்றும் பகவந்த் மான் விமர்சித்துள்ளார். “நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜ.க. விழுங்கிக்கொண்டிருக்கிறது. மூர்க்கத்தனமான அதிகாரம் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் அழிவை ஏற்படுத்தி விடும்” என்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் எச்சரித்துள்ளார். இது அனைவருக்குமான எச்சரிக்கை என்று சொல்லி இருக்கிறது காங்கிரஸ் கட்சி.

சண்டிகர் மேயர் தேர்தலில் குறுக்குவழியில் பா.ஜ.க. வெற்றி பெற்றதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. “வாக்குச்சீட்டுகளில் தேர்தல் அலுவலர் திட்டமிட்டே திருத்தம் செய்துள்ளார்” என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. வாக்குச் சீட்டுகளில் தேர்தல் அதிகாரி அனில் மஷி, திருத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

காங்கிரஸ் - ஆம் ஆத்மி உறுப்பினர்களின் 8 வாக்குகளை செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்தார். காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணிக்கு 12 வாக்குகள் மட்டுமே கிடைத்திருப்பதாகவும், பா.ஜ.க.வுக்கு 16 வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் சண்டிகர் மேயர் பதவியை பா.ஜ.க. கைப்பற்றிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதாவது 20 வாக்குகளைப் பெற்ற ‘இந்தியா’ கூட்டணி வாக்குகளில் 8 வாக்குகளைச் செல்லாது என்று ஆக்கி, பா.ஜ.க.வை வெற்றி பெற வைத்துள்ளார்கள். சண்டிகர் மேயர் பதவியை குறுக்கு வழியில் பா.ஜ.க. கைப்பற்றியிருப்பது வெட்கக்கேடான ஜனநாயக விரோதச் செயல். நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எந்த கீழ்நிலைக்கும் பா.ஜ.க. செல்லும் என்பதற்கு சண்டிகர் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

ஒரே ஒரு மேயர் தேர்தலிலேயே இத்தனை மோசடிகள் - முறைகேடுகள் - தில்லுமுல்லுகள் என்றால், நாடாளுமன்ற, சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் பா.ஜ.க.வின் செயல், எந்த அளவிற்கு இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஒற்றுமையின் மூலம் மட்டுமே இத்தகைய மோசடித்தனங்களை வீழ்த்த முடியும்.

- முரசொலி தலையங்கம்

01.02.2024

banner

Related Stories

Related Stories