முரசொலி தலையங்கம்

இடஒதுக்கீட்டில் கை வைக்கிறது UGC : திரைமறைவில் பா.ஜ.க செய்யும் மிகமிக அநீதியாகும் இது - முரசொலி!

இராமர் கோவில் விவகாரத்தில் மற்றவர்களை திசை திருப்பி மறைத்து விட்டு திரைமறைவில் பா.ஜ.க. செய்யும் அநீதிதான் இது.

இடஒதுக்கீட்டில் கை வைக்கிறது UGC :  திரைமறைவில் பா.ஜ.க செய்யும் மிகமிக அநீதியாகும் இது - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (31-01-2024)

யு.ஜி.சி. உத்தரவில் அநீதி

உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இடங்களுக்குப் பொருத்தமான விண்ணப்பதாரர்கள் கிடைக்கவில்லை என்றால் பொதுப் பிரிவினருக்கு அவற்றைக் கொடுக்கலாம் என்று SC, ST மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை யு.ஜி.சி. வெளியிட்டுள்ளது.

பொதுமக்களின் கருத்தை தெரிவிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 28-ம் தேதியுடன் முடிவடைகிறதாம். இராமர் கோவில் விவகாரத்தில் மற்றவர்களை திசை திருப்பி மறைத்து விட்டு திரைமறைவில் பா.ஜ.க. செய்யும் அநீதிதான் இது.

பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டுதலில், “குரூப் ஏ பதவி, காலியாக இருக்க அனுமதிக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் பொது நலன் கருதி இந்த முன்மொழிவை தயாரிக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.

குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதற்கான முன்மொழிவுக்கு பல்கலைக்கழக நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தாலும், குரூப் ஏ மற்றும் பி பதவிகளுக்கு, இட ஒதுக்கீட்டிற்கான முன்மொழிவை கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பதவிகள் காலியாக இருந்தால், பல்கலைக்கழகங்கள் விரைவில் இரண்டாவது முறையாக ஆட்சேர்ப்புக்கு அழைப்பதன் மூலம் காலியிடங்களை நிரப்ப முயற்சிக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்கி, இட ஒதுக்கீட்டின் கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில், அந்த இடங்களை பொதுப்பிரிவின் கீழ் நிரப்புவதற்கான, வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்பது இதுவே முதல்முறை. ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் பட்டியல் இனத்தவர்க்கும் பழங்குடி இனத்தவர்க்கும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது.இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்பட்டு 33 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இவை முழுமையான பலனைக் கொடுத்துவிட்டதா என்றால் இல்லை.

இட ஒதுக்கீடு அமலாகி பல்லாண்டுகள் ஆகியும், IIT, IIM நிறுவன உயர் பதவிகளில் ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படாத அநீதி தொடர்கிறது. இங்கெல்லாம் தரை மட்டத்தில்தான் இடஒதுக்கீடு தரப்படுகிறது. இந்தக் காலியிடங்களை நிரப்ப சிறப்பு முயற்சி (special drive to fill the backlog vacancies) எடுப்பதற்கு பதிலாக, இடஒதுக்கீட்டையே ஒழித்துக்கட்டும் சூழ்ச்சியையே யு.ஜி.சி. செய்கிறது.

உயர்கல்வி நிறுவனப் பணிகளுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவதுதான் சமூகநீதியின் அடிப்படை ஆகும். ஆனால் தகுதியானவர்கள் இல்லை என்று அறிவித்து இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது இடஒதுக்கீட்டையே ரத்து செய்வதற்கான தந்திரம் ஆகும். அதனைத்தான் அப்பட்டமாகச் செய்ய நினைக்கிறார்கள்.

பொதுவாகவே சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைப்பதைத்தான் பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்து செய்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பை இந்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தபோது, இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு இல்லாமலேயே தேர்வு நடைபெறும் என்று கூறியிருந்தார். உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வாதாடும் போது 27 சதவிகித இடஒதுக்கீடு தரமாட்டோம் என்று முதலில் சொன்னது பா.ஜ.க. அரசு. நாடு முழுவதும் எதிர்ப்பு வந்த நிலையில் ஒப்புக் கொண்டார்கள். அதிலும் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 விழுக்காடு என்பதில்தான் குறியாக இருந்தார்கள்.

இடஒதுக்கீட்டில் கை வைக்கிறது UGC :  திரைமறைவில் பா.ஜ.க செய்யும் மிகமிக அநீதியாகும் இது - முரசொலி!

பொருளாதார அளவுகோலை சமூகநீதியில் புகுத்தி, முன்னேறிய பிரிவு ஏழைகளுக்கு ஒரு இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்க்கு, நிதி உதவிகள் செய்வதில் மாற்றுக் கருத்து இல்லை. அரசியல் சட்டமானது சமூக நீதிக்கான அளவுகோலாக சமூகத்திலும், கல்வியிலும் பின் தங்கியவர்க்குதான் சிறப்பு சலுகைகள் வழங்குகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அல்ல. இந்திய நாடாளுமன்றத்திலேயே ‘பொருளாதார அளவுகோல்’ என்ற கருத்து தோற்றது ஆகும். ஆனால் அந்தப் பொருளாதார அளவுகோலை கையில் எடுத்தது பா.ஜ.க.

இடஒதுக்கீடு என்றாலே தகுதி போய் விட்டது, திறமை போய்விட்டது, ‘குறைஞ்ச மார்க் வாங்கினவா உள்ளே வந்துவிட்டா’ என்று குமைந்து கொண்டு இருந்தவர்கள், பொருளாதார இடஒதுக்கீடு தரப்பட்டதும் ‘சைலண்ட் மோட்’க்கு போய்விட்டார்கள். இப்போது யாரும் தகுதி போய்விட்டது, திறமை போய் விட்டது என்று பேசுவது இல்லை.

சமூகநீதியில் நாம் அடைய வேண்டிய தூரம் மிகமிக அதிகம் ஆகும். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது சிலைத் திறப்பு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சமூகநீதி வரலாற்றில் நாம் அடைய வேண்டிய இலக்குகளை விரிவாகப் பட்டியலிட்டார். இதற்கிடையே ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீட்டில் கை வைக்கிறது யு.ஜி.சி.

இந்த உத்தரவுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அதனை திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இனி எந்தச் சூழலிலும் இதுபோன்ற விதிமுறைகள் வரக்கூடாது.

இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவதை கட்டாயமாக்க வேண்டும். தகுதியானவர்களை உருவாக்காமல், தகுதி இல்லை என்று காரணம் சொல்வது மிகமிக அநீதியாகும்.

banner

Related Stories

Related Stories