முரசொலி தலையங்கம்

”ஆளுநர் ஆர்.என்.ரவியின் நோக்கம் வழிபாடு அல்ல பழிபோடு” : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!

‘என்னை கிள்ளிட்டான் மிஸ்’ என்று பள்ளிச் சிறுவர்கள் சொல்வதைப் போல இருக்கிறது ஆளுநரின் குற்றச்சாட்டு.

”ஆளுநர் ஆர்.என்.ரவியின் நோக்கம் வழிபாடு அல்ல பழிபோடு” : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (25-01-2024)

வழிபாடு அல்ல, பழிபோடு !

ஆளுநராக வந்ததில் இருந்து குழப்பம் செய்வதையே தொழிலாகச் செய்து வருகிறார் ஆர்.என்.ரவி. பதவிப் பிரமாணத்தோடு அவர் எடுத்துக் கொள்ளும் ரகசியக் காப்புப் பிரமாணம் என்பது தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதாக மட்டுமே அமைந்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் புதிதாகக் கட்டித் திறக்கப்படுகிறது. அந்த விழாவைப் புறக்கணித்து விட்டு மேற்கு மாம்பலத்துக்கு ஆளுநர் வர வேண்டிய அவசியம் என்ன வந்தது? அயோத்திக்குப் போய்விட்டால், தமிழ்நாடு அமைதியாக இருந்துவிடும்அல்லவா? அதனால்தான், ஆளுநர் மேற்கு மாம்பலம் வருகிறார். வந்தவர் அமைதியாக கோதண்டராமரை வணங்கி விட்டுச் சென்றிருக்க வேண்டும். அவர் வந்த நோக்கம், வழிபாடு அல்ல. பழிபோடு என்பது ஆகும்.

இவர் வந்தபோது அர்ச்சகர்கள் மிரண்டு போய் காணப்பட்டார்களாம். உடனடியாக செய்தி வெளியிடுகிறார் ஆளுநர். இவரைப் பார்த்து அர்ச்சகர்கள் எதற்காக பயப்பட வேண்டும்? எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை என்பதை அர்ச்சகர்களே பேட்டியாக ஊடகங்களில் கொடுத்து விட்டார்கள்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவிலுக்கு தான் சென்றதாகவும் அப்பொழுது அங்குள்ள பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்ததாகவும், நாடு பாலராமர் பிராண பிரதிஷ்டை கொண்டாடும் பொழுது கோயில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வு வெளிப்படுத்துகிறது என்றும் ஆளுநர் ரவி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்ததற்குப் பின்னணி என்பது, இதன் மூலமாக தமிழ்நாடு அரசின் மீது பழிபோடுவதுதான்.

ஆளுநர் சொன்ன சில நிமிடங்களிலேயே மேற்கு மாம்பலம் கோதண்டராமர் திருக்கோவில் தலைமை அர்ச்சகர் மோகன் பட்டாச்சாரியார் இதற்கு சரியான விளக்கத்தைச் சொல்லி விட்டார்.

”ஆளுநர் ஆர்.என்.ரவியின் நோக்கம் வழிபாடு அல்ல பழிபோடு” : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!

“இன்று காலை 8 மணியளவில் ஆளுநர் அவர்கள் கோவிலுக்கு வருகை புரிந்தார். அப்போது கோபுர வாசல் அருகே அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு, சுவாமி தரிசனம் சிறப்பாக செய்து வைக்கப்பட்டது. கோவிலின் தலப்புராணமும், கோவிலில் எழுந்தருளியுள்ள எம்பெருமாள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. ஆளுநர் பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் சென்றார். சுமார் 20நிமிடம் சுவாமி தரிசனம் செய்தார்கள். இன்று விசேஷ தினம் என்பதால் நேற்று அர்ச்சகர்கள் யாரும் தூங்கவில்லை. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், புஷ்ப அலங்காரம் செய்யவேண்டியிருந்தது. அதன் காரணமாக ஒரு நிமிடம் கூட நாங்கள் ஓய்வெடுத்து படுக்கவில்லை. பிரசாதங்கள் எல்லாம் செய்து சுவாமிக்கு பூஜைகள் முடித்து ஆளுநர் வருகைக்காக தயாராக இருந்தோம். சரியான தூக்கமில்லை என்பதால் அசதியாக இருந்தது. இப்போது கூட சோர்வை எங்கள் முகத்தில் பார்க்கலாம்” என்று சொல்லி இருக்கிறார் தலைமை அர்ச்சகர்.

“அர்ச்சகர்கள் குறித்து X தளத்தில் ஆளுநர் பதிவிட்டது குறித்து கேள்விப்பட்டோம். ‘அர்ச்சகர்கள் வாடிய முகத்துடன் இருப்பதாக’ பதிவிட்டுள்ளதாக கேள்விப் பட்டோம். நாங்கள் பூஜையிலுள்ளோம். தூக்க

மின்மையால் அவர் அப்படி தெரிவித்திருக்கலாம். மற்ற படி யாரும் எதுவும் சொல்ல வில்லை. யாரும் அச்சுறுத்தவில்லை. அவருடைய (ஆளுநரின்) பாதுகாவலர்கள் சொன்னபடி நடந்து கொண்டோம். அவ்வளவுதான்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

‘என்னை கிள்ளிட்டான் மிஸ்’ என்று பள்ளிச் சிறுவர்கள் சொல்வதைப் போல இருக்கிறது ஆளுநரின் குற்றச்சாட்டு. ராமருக்கு எதிராக தி.மு.க. அரசு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் இவரது நோக்கம். ஆளுநர், அயோத்திக்குப் போகாமல் இருந்ததும், மேற்கு மாம்பலம் வந்ததும் இதற்குத் தானா?

இவர்கள் எல்லாம் உண்மையில் பதில் சொல்ல வேண்டியது பூரி சங்கராச்சாரியாருக்குத்தான். ஆன்மிகப் பெரியவர்கள் சிலர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு, தமிழ்நாடு அரசைப் பார்த்து கேள்வி எழுப்பட்டும். குறை சொல்லட்டும்.

ஆதி சங்கராச்சாரியார் நிறுவிய மடங்களில் ஒன்றான பூரியில் உள்ள கோவர்த்தன பீடத்தின் சங்கராச்சாரியார் அவர்கள், “அயோத்தியில் நடக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பை எங்கள் மடம் பெற்றுள்ளது, அதில் நான் அங்கு வர விரும்பினால், அதிகபட்சமாக ஒருவருடன் வரலாம் என்று கூறுகிறது. 100 பேருடன் அங்கு இருக்க அனுமதித்திருந்தாலும், அன்று நான் அங்கு சென்றிருக்க மாட்டேன்” என்று சொல்லி இருக்கிறார். ஆளுநர் வகையறா இதற்குப் பதில் சொல்லத் தயாரா?

“நான் கடந்த காலத்தில் அயோத்திக்குச் சென்று வந்திருக்கிறேன், மேலும் எதிர்காலத்தில் ராமரை தரிசனம் செய்வதற்காக அதே மத நகரத்திற்குச் செல்வேன், குறிப்பாக பல நூற்றாண்டுகளாக தடைப்பட்ட வேலை இறுதியாக நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், கோவிலில் ராம்லல்லா சிலையை நிறுவுவது சாஸ்திர விதிகளின்படி (நமது சாஸ்திரங்களின் கோட்பாடுகள்) செய்யப்பட வேண்டும். கோவர்தன் பீடம்/மட்டத்தின் அதிகார வரம்பு பிரயாகை வரை பரவியுள்ளது, ஆனால் ஜனவரி 22 மதப் பயிற்சி முழுமைக்கும் எங்களின் ஆலோசனையோ அல்லது வழிகாட்டுதலோ பெறப்படவில்லை. மோடி, சிலையைத் தொட்டு அங்கு நிறுவும் போது, நான் கைதட்டிக் கொண்டு இருக்க முடியாது ”என்று அவர் சொல்வதற்கு இவர்கள் பதில் சொல்லி இருக்க வேண்டும்.

ஜோதிர்பீடத்தின் தலைவரும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். ஜோதிர் மடத்தின் 46வது சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி தனது வீடியோவில், “நாங்கள் சொல்வது மோடிக்கு எதிரானது அல்ல. அல்லது வெறுப்பின் காரணமாக அல்ல, மாறாக சாஸ்திர விதியை ( சாஸ்திரங்களின் சடங்குகள் ) பின்பற்றுவதும், அவை பின்பற்றப்படுவதை உறுதி செய்வதும் சங்கராச்சாரியார்களின் கடமையாகும். இங்கு சாஸ்திர விதி புறக்கணிக்கப்படுகிறது. கோவில் முழுமையடையாத நிலையில் பிரான் பிரதிஷ்டா (கும்பாபிஷேகம்) நடப்பது மிகப்பெரிய பிரச்சினை,” என்றார். “இதைச் சொன்னால், நாம் ‘மோடி எதிர்ப்பு’ என்று அழைக்கப்படுகிறோம்” என்றார். இதற்கு பதில் சொல்லத் தயாரா?

இவர்கள் ஆன்மிகத்துக்கு எதிரானவர்களா? இவர்களை இந்து விரோதிகள் என்று சொல்லி விடுவீர்களா?

banner

Related Stories

Related Stories