முரசொலி தலையங்கம்

“ராமர் கோவில் விவகாரம் என்பது வெறும் ஓட்டு அரசியல் என்பதை உண்மையான பக்தர்கள் அறிவார்கள்...” - முரசொலி !

பாபர் மசூதியை இடித்துப் போட்ட இடத்தில் இந்த ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அதனால்தான், ஏதோ நடத்த முடியாததை நடத்திக் காட்டியதைப் போல துள்ளிக் குதிக்கிறார்கள்.

“ராமர் கோவில் விவகாரம் என்பது வெறும் ஓட்டு அரசியல் என்பதை உண்மையான பக்தர்கள் அறிவார்கள்...” - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

'தினமணி'யும் 'துக்ளக்”க்கும் சொன்னது என்ன?

ஏன் இந்த நாட்டில் கோவில் எதுவும் கட்டப்பட்டதே இல்லையா? கோவில் திருப்பணிகள் நடந்ததே இல்லையா? பிரதமர்கள் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தது இல்லையா? ஏதோ நாட்டில் முதல் முதலாக ராமருக்கு கோவில் கட்டப்பட்டதைப் போலவும், திருப்பணிகள் நடந்ததைப் போலவும், கோவிலுக்குள் செல்லும் முதல் பிரதமர் நரேந்திர மோடிதான் என்பதைப் போலவும் கட்டமைத்து பா.ஜ.க. தேடிக் கொள்ளும் விளம்பரத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை.

நாம் முன்பு சொன்ன எதுவும் முதல் முறையல்ல. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும்தான் முதல் முறையானது. பாபர் மசூதியை இடித்துப் போட்ட இடத்தில் இந்த ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அதனால்தான், ஏதோ நடத்த முடியாததை நடத்திக் காட்டியதைப் போல துள்ளிக் குதிக்கிறார்கள்.

பாபர் மசூதி 6.12.1992 அன்று இடிக்கப்பட்டபோது “தினமணி' நாளிதழும், 'துக்ளக்' வார இதழும் எழுதிய தலையங்கங்கள் மிக முக்கியமானவை. 32 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துகள் இப்போதும் எப்படி பொருந்திப் போகின்றன என்பதைக் கவனியுங்கள்.

“ராமர் கோவில் விவகாரம் என்பது வெறும் ஓட்டு அரசியல் என்பதை உண்மையான பக்தர்கள் அறிவார்கள்...” - முரசொலி !

வழக்கமாக 4 ஆம் பக்கத்தில் தலையங்கம் தீட்டும் தினமணி, பாபர் மசூதி இடிப்புக்கு மறுநாள் (7.12.1992) முதல் பக்கத்தில் தலையங்கம் தீட்டியது. தலைப்பு 'தேசத் துரோகம்' என்பது ஆகும். 'அயோத்தியில் நடந்த அட்டூழியம் நமது தேசத்தின் கவுரவத்துக்கே இழுக்காகும். ஒரு மதச்சார்பான இலக்கை அடைவதற்கு ஏமாற்று வேலை, மிருக வெறிச் செயல்கள் ஆகியவற்றில் இறங்கக் கூட தயாரான நிலையில் இந்தியாவில் முக்கிய எதிர்க்கட்சி இருக்கிறது என்பது நாட்டுக்கு அம்பலமாகி இருக்கிறது. ... ஹிந்து சாம்ராஜ்யம் இங்கு நிறுவப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறவர்களின் உள்ளங்களில் நீண்ட நாளாக ஊறிக் கிடக்கின்ற பத்தாம்பசலி கோஷங்களின் விளைவாகவே சர்ச்சைக்குரிய கட்டடம் பங்கப்படுத்தப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது..... அயோத்தியில் நடந்த சம்பவங்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பெரும்பாலான பா.ஜ.க. தலைவர்கள் கையை விரிக்கலாம். ஆனால் அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பும் அளவுக்கு யாரும் அறிவில்லாதவர்கள் அல்ல.." என்று எழுதியது 'தினமணி'.

பாபர் மசூதியை இடித்த பிறகு வெளியான "துக்ளக்' இதழின் அட்டைப்படத்தை முழுமையான கருப்பாக அச்சிட்டு வெளியிட்டார் அதன் அன்றைய ஆசிரியர் சோ அவர்கள். 15.12.1992 தேதியிட்ட ‘துக்ளக்' இதழ் அது. அந்த அட்டைப் படத்துக்கு சோ ஒரு விளக்கம் எழுதினார். “அயோத்தி நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்த வன்முறைச் சம்பவங்களும் இந்த நாட்டிற்குத் தந்திருக்கும் பரிசை விளக்குகிறது அட்டை. எல்லோரும் சேர்ந்து முயன்றால், இந்தக் கறையைத் துடைத்து விடலாம் என்று நம்புவோம்" என்று எழுதினார் சோ. 32 ஆண்டுகள் கழித்து என்ன நடந்திருக்கிறது என்பதை விளக்கத் தேவையில்லை.

பாபர் மசூதி இடிப்பை மிகக் கடுமையாகக் கண்டித்தவர் சோ. 'அயோத்தியில் அயோக்கியத்தனம்' என்றே தலைப்பிட்டு தலையங்கம் தீட்டினார், சோ. "அயோத்தியில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும், அவர்களால் குவிக்கப்பட்ட வெறியர்களுமாகச் சேர்ந்து, மசூதியை இடித்துத் தள்ளிவிட்டார்கள். ஆலயத் திருப்பணி என்ற பெயரில், அசல் காட்டுமிராண்டித்தனத்தை நடத்தி இருக்கிறார்கள்.

“ராமர் கோவில் விவகாரம் என்பது வெறும் ஓட்டு அரசியல் என்பதை உண்மையான பக்தர்கள் அறிவார்கள்...” - முரசொலி !

"மசூதிக்கு எந்தவிதச் சேதமும் வராமல், பார்த்துக் கொள்ளப்படும்' என்று பொது மேடைகளில் பா.ஐ.க.வினர் பேசிய பேச்சு காற்றோடு போயிற்று. இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு எழுத்து மூலமாக உத்திரப்பிரதேச பா.ஜ.க. அரசு கொடுத்த வாக்குறுதி மசூதி இடிவதற்கு முன்பாகவே பொடிப்பொடியாகிவிட்டது. உ.பி. அரசுக்காக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகிய பிர- பல வக்கீல் மனம் நொந்து போய், 'அவமானத்தில் நான் தலைகுனிகிறேன்' என்று கோர்ட்டிலேயே கூறியிருக்கிறார்.

கோவில் மூலம் கிடைக்கக் கூடிய ஓட்டுக்காக, நாட்டிற்கே பா.ஜ.க. ஒரு பெரும் நாசத்தை விளைவித்துவிட்டது. 'ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், கர சேவகர்களைத் தடுக்க முயன்றார்கள் முடியவில்லை. வி.ஹெச்.பி.யினர் பொறுமையைக் கடைப்பிடிக்கும் படி வேண்டினார்கள் - நடக்கவில்லை. பா.ஜ.க.வினர் மன்றாடிக் கேட்டுக் கொண்டனர் - அடக்கமுடியவில்லை' என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லலாம். இதெல்லாம் கால் காசு பெறாத வெற்று வார்த்தைகள்.

இந்த வெறிக் கூட்டத்தை அங்கே கூட்டும்போது இவர்களுக்கெல்லாம் புத்தி எங்கே போயிற்று? 'மசூதி இடிக்கப்பட்டே ஆக வேண்டும்' என்று முழங்கி வெறியைத் தூண்டிய போதெல்லாம், இவர்களுடைய மனிதத் தன்மை என்னவாயிற்று?” என்று கேட்டார் சோ. ( துக்ளக் - - 15.12.1992 பக்கம் 1) இன்றைக்கு துக்ளக், தினமணி ஆகியவை இப்படி எழுதாது. எழுதுவார்கள் என எதிர்பார்க்கவும் முடியாது. இந்த நிலைக்கான 'பரிகாரம்' என்ன?

அதையும் சோ சொல்லி இருக்கிறார். 1.8.1992 இதழில் சோ எழுதினார்:

...ராமர் கோவில் விவகாரத்தில் மத நம்பிக்கைக்கோ, தெய்வ பக்திக்கோ எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஓட்டு அரசியல் ஒன்றுதான் இப்பிரச்சினையில் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால்தான் தீர்வு காண்பதும் கடினமாக இருக்கிறது... நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட முடியாது என்ற விபரீதமான பிடிவாதத்தை விஸ்வ ஹிந்து பரிஷத் கைவிட வேண்டும். மறுத்தால் விஸ்வ ஹிந்து பரிஷத்தையே கைவிட பா.ஜ.க. முன்வர வேண்டும். மறுத்தால் பா.ஜ.க.வையே கைவிட விவரமறிந்தவர்கள் முன் வருவார்கள்" - என்று எழுதினார் சோ.

ராமர் கோவில் விவகாரம் என்பது ஓட்டு அரசியல் மட்டும்தான். அதனை உண்மையான பக்தர்கள் அனைவரும் அறிவார்கள்.

- முரசொலி தலையங்கம்

24.01.2024

banner

Related Stories

Related Stories