முரசொலி தலையங்கம்

குஜராத்தும் மதுவிலக்கும் : “காந்தி பிறந்த மண்ணில் மதுவைப் புகுத்தி விட்டது பாஜக...” - முரசொலி விமர்சனம் !

மதுவிலக்கு மாநிலத்தின் முகத்தை வெளிப்படையாகவே கிழித்தெறியத் தொடங்கி விட்டது குஜராத் பா.ஜ.க. அரசு என முரசொலி விமர்சித்துள்ளது.

குஜராத்தும் மதுவிலக்கும் : “காந்தி பிறந்த மண்ணில் மதுவைப் புகுத்தி விட்டது பாஜக...” - முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குஜராத்தும் மதுவிலக்கும்...

மதுவிலக்கு என்றாலே குஜராத்தைதான் மேற்கோள் காட்டுவார்கள். இதோ இப்போது குஜராத் மாநிலத்தில் மதுவிலக்குக்கு விடை கொடுத்துவிட்டது பா.ஜ.க. அரசு. ‘காந்தி பிறந்த மண்ணில்’ மதுவைப் புகுத்தி விட்டது பா.ஜ.க.

மணிப்பூர் மாநிலத்தில் 32 ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது. அந்த மதுவிலக்குக் கொள்கையை மாநில பா.ஜ.க. அரசு கடந்த மாதம் விலக்கிக் கொண்டு விட்டது. இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் மது புகுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குஜராத் மாநில மதுவிலக்கு மற்றும் கலால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு உலகளாவிய வணிக சூழலை வழங்குவதற்காக கிஃப்ட் சிட்டி பகுதியில் ‘ஒயின் மற்றும் உணவு’ வசதிகளை அனுமதிக்க தடை விதிகளை மாற்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

1960 மே 1 ஆம் தேதி குஜராத் மாநிலம் உருவானது. அப்போது அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சி இருந்தது. அண்ணல் காந்தியடிகள் பிறந்த மண் என்பதால் அங்கு மதுவிலக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காந்தி நகரில் உள்ள இண்டர்நேஷனல் பைனான்ஸ் டெக் சிட்டியில் மதுவிலக்கை விலக்கிக் கொண்டு விட்டது மாநில பா.ஜ.க. அரசு. குஜராத் மாநில வளர்ச்சியை மனதில் வைத்தும், டெக் சிட்டிக்கு வர இருக்கும் பன்னாட்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வசதிக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். இதே போல் எங்களுக்கும் விதிவிலக்கு வேண்டும் என்று மற்ற தொழில் வளர்ச்சி நிறுவனங்களும் கோரிக்கை வைத்துள்ளன. இனி படிப்படியாக அனைவர்க்கும் திறந்து விடப் போவதாகச் சொல்கிறார்கள்.

குஜராத்தும் மதுவிலக்கும் : “காந்தி பிறந்த மண்ணில் மதுவைப் புகுத்தி விட்டது பாஜக...” - முரசொலி விமர்சனம் !

குஜராத் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் இசுதான் கத்வி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காந்தியின் குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசு காந்திஜியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த குஜராத் மக்களையும் அவமதித்துள்ளது. குஜராத் முதல்வர் பங்களாவில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கிஃப்ட் சிட்டியில் மது அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஊழியர்கள், பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் இங்கு சென்று குடிக்கலாம், அங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள அகமதாபாத்திற்கு மீண்டும் திரும்பி வரும்போது குடித்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்படலாம்.” என்றும் அவர் கிண்டலாகச் சொல்லி இருக்கிறார்.

இந்த நிலையில், ‘குஜராத் மாநிலத்தில் மது விலக்கு என்பதே ஒரு நாடகம்தான், மது விற்பனை என்பது மறைமுகமாக நடந்தது அது இப்போது வெளிப்படையாக மீறப்படுவதைத்தான் இனி பார்க்கப் போகிறோம்’ என்று செய்தி நிறுவனங்கள் எழுதத் தொடங்கி இருக்கின்றன.

பி.பி.சி. வெளியிட்டுள்ள கட்டுரையில், “குஜராத்தில் 2011-12 முதல் 2017-18 வரை உள்ள காலகட்டத்தில் 3.85 லட்சம் லிட்டர் மதுபானம் விற்பனை செய்யப் பட்டுள்ளதாக குஜராத் மாநில போதைப்பொருள் மற்றும் கலால் துறை தகவல் அறியும் சட்டப்படி ஒருவருக்கு பதிலளித்துள்ளது. உரிமம் பெற்ற கடைகளின் மது விற்பனையில் அகமதாபாத், வதோதரா மற்றும் கட்ச் ஆகியவற்றை தொடர்ந்து சூரத் முன்னணியில் உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளியிட்டுள்ள செய்திப்படி, ஏப்ரல் 2019 முதல் டிசம்பர் 2020 வரையில் ரூ.215 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குஜராத்தின் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மதுவின் புழக்கம் மிக அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் அங்குள்ள மதுவுக்கு எதிரான செயல்பாட்டாளர்கள். 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டிய சோதனைகளில் மட்டும் அங்கு 10 லட்சம் லிட்டர் மது கைப்பற்றப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ. 23 கோடி!

குஜராத்தும் மதுவிலக்கும் : “காந்தி பிறந்த மண்ணில் மதுவைப் புகுத்தி விட்டது பாஜக...” - முரசொலி விமர்சனம் !

“ஆரம்ப காலத்தில் குஜராத்தில் மதுவிலக்குச் சட்டம் கடுமையாக இருந்தது உண்மைதான். ஆனால், 2006-ம் ஆண்டு மோடி முதல்வராக இருந்தபோது முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ‘Vibrant Gujarat’ என்கிற திட்டத்தின் அடிப்படையில் மதுவிலக்குச் சட்டத்தில் சில சலுகைகள் கொண்டு வரப்பட்டன. அதன்படி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் குஜராத்தில் மது அருந்தத் தடை எதுவும் இல்லை. இதற்கு பின்புதான் குஜராத்தில் சட்டவிரோத மதுப் புழக்கம் அதிகரித்தது. இப்போதும் குஜராத்துக்கு வெளியே இருந்து வருபவர்கள் தங்களது முகவரிச் சான்று அல்லது தங்கும் விடுதியின் மேலாளர் அளிக்கும் கடிதத்தின் அடிப்படையில் மது வாங்கிக் கொள்ளலாம்.” என்று குஜராத்தில் சட்டவிரோதமாக புழங்கும் மதுவுக்கு எதிராக கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் மீனா படேல் பேட்டி அளித்ததாக செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“குஜராத்தில் சட்ட விரோத மதுவிற்பனை மிகப் பெரிய வணிகமாக உருவெடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக இங்கு கடத்தி வரப்படும் மது இரட்டை விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அதுதவிர, குஜராத்திலேயே எரிசாராயத்தையும் எசன்ஸையும் கலந்து மது உற்பத்தி செய்கிறார்கள்” என்றும் இவர் சொல்லி இருக்கிறார். “அகமதாபாத்தில் சுமார் 11 நட்சத்திர விடுதிகளின் மதுக்கூடங்களில் மதுவின் விலை சுமார் 10 மடங்கு அதிகம்.” என்று பேட்டி அளித்துள்ளார்கள் குஜராத் பத்திரிக்கையாளர்கள்.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவரான அல்பேஷ் தாக்கூர், “கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சூரத் அருகிலிருக்கும் வரேலி கிராமத்தில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட மதுவை அருந்தியதில் 15 பேர் உயிரிழந்தார்கள். கடந்த 2012-ம் ஆண்டு மட்டுமே மிக அதிகளவாக 143 பேர் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுவை அருந்தி உயிரிழந்திருக்கிறார்கள். இங்கு ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 7.50 லட்சம் லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்படுகிறது. இவையும் கூட பின்வழியாக கள்ள மது தயாரிப்பாளர்களுக்கு கைமாற்றப் படுகிறது” என்று சொல்லி இருக்கிறார்.

மதுவிலக்கு மாநிலத்தின் முகத்தை வெளிப்படையாகவே கிழித்தெறியத் தொடங்கி விட்டது குஜராத் பா.ஜ.க. அரசு.

banner

Related Stories

Related Stories