முரசொலி தலையங்கம்

ஒட்டுக் கேட்க ஒரு சட்டமா? : புதிய தொலைத்தொடர்பு மசோதாவில் உள்ள ஆபத்துகளை விளக்கும் முரசொலி!

இணைய முடக்கத்தை இனி எந்த மாநிலத்தில் செய்தாலும் அதனை சட்டபூர்வமாகச் செய்யலாம்.

ஒட்டுக் கேட்க ஒரு சட்டமா? :  புதிய தொலைத்தொடர்பு மசோதாவில் உள்ள ஆபத்துகளை விளக்கும் முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (30-12-2023)

ஒட்டுக் கேட்க ஒரு சட்டமா?

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஒரு சட்டம், மொபைல் போன் நெட்வொர்க்கை கையகப்படுத்தும் திட்டமாக அமைந்துள்ளது. இதன்மூலம் தனி நபர்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளையும் ஒன்றிய அரசு தலையிட்டு எடுத்துக் கொள்ள முடியும். ‘மொபைல் போன் நெட்வொர்க்கை அரசு கையகப்படுத்தலாம்’ என்றே பல செய்தி நிறுவனங்கள் தலைப்பிட்டுள்ளன.

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது அவசரச் சூழல் போன்ற காரணங்களுக்காக, ‘மொபைல்போன் நெட்வொர்க்’ உட்பட தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளை, ஒன்றிய அரசு தற்காலிகமாக தன்வசப்படுத்திக் கொள்ளும் வகையில், புதிய தொலைத்தொடர்பு மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தந்தி சட்டம், இந்திய கம்பியில்லா தந்தி சட்டம் போன்ற பழைய சட்டங்களுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட்பக் காலத்துக்கேற்ப, தொலைத் தொடர்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 138 ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த தொலைத் தொடர்புச் சட்டத்தினைத் திருத்த முயற்சிக்கிறது பா.ஜ.க. அரசின் சட்டம். தொலைத் தொடர்புத் துறையில், ஊடகங்கள் வெளியிடும் செய்திகள், தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்துவதாக இருப்பின், ஒன்றிய அரசு அக் குறிப்பிட்ட ஊடகத்தை முடக்கலாம் என்ற பிரிவையும் இதில் இணைத்திருக்கிறது. இது முழுக்க முழுக்க ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புகைக் குண்டுவீச்சு விவகாரம் தொடர்பான அமளிக்கு இடையே இந்த மசோதாவை, ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார்.

ஒட்டுக் கேட்க ஒரு சட்டமா? :  புதிய தொலைத்தொடர்பு மசோதாவில் உள்ள ஆபத்துகளை விளக்கும் முரசொலி!

பொதுமக்கள் பாதுகாப்பு, அவசர நிலை, பேரிடர் நிர்வாகம், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக, மொபைல் போன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நெட்வொர்க்கை, ஒன்றிய அரசு அல்லது மாநில அரசு அல்லது அரசுகளால் நியமிக்கப்படும் அதிகாரிகள் கையகப்படுத்த இந்த மசோதா வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தலாக உள்ள தகவல் பரிமாற்றங்களைத் தடுத்து நிறுத்துவது, தொலைத் தொடர்புச் சேவையைத் துண்டிப்பது போன்ற அதிகாரமும் அரசுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி, தனிநபர்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளையும் ஒன்றிய அரசு தலையிட்டு எடுத்துக் கொள்ள முடியும்.

ஒன்றிய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள், பணி நிமித்தமாக அனுப்பும் செய்திகளில் அரசுகள் தலையிடாது. அதே நேரத்தில் தேசியப் பாதுகாப்பை மீறுவதாக இருந்தால் மட்டும் அதில் அரசுகள் குறுக்கிட முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் சட்டவிரோதமாக தொலைபேசியை ஒட்டுக்கேட்போருக்கு மூன்று ஆண்டுகள் சிறை, 2 கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இந்தப் புதிய சட்டத்தின்படி, தொலைத் தொடர்பு தொடர்பான சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் அமைப்பும், ஆணையமும் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா நிதி மசோதாவாகக் கொண்டு வரப்பட்டதாலும், இதற்கு மாநிலங்களவையில் ஒப்புதல் பெற வேண்டியதில்லை என்பதாலும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மசோதாவில் தன்மறைப்பு ( தனிமனித பிரைவசி) சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாகவும், எனவே, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு இதனை அனுப்ப வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இரண்டு நபர்களுக்கு இடையே பகிரப்படும் செய்திகளை, தேவைப்பட்டால் தொலைத்தொடர்பு நிறுவனம் அரசுக்கு வழங்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவது மற்றும் பொதுக் கொள்கையின் அடிப்படையில், ஒன்றிய அரசால் கண்காணிக்கப்பட்டு, இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், உளவுபார்க்கும் கருவிகளே இல்லாமல் இந்தச் சட்டத்தின் துணைக்கொண்டு ஒன்றிய அரசால் ஒருவரை ஒட்டுக்கேட்க முடியும்; இதற்கு மாநில அரசுக்கும் உரிமை உண்டு என்றும் கூறப்பட்டாலும், தொலைத்தொடர்புத்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அதன் முழுமையான கட்டுப்பாடு ஒன்றிய அரசுக்குச் செல்கிறது.

ஒட்டுக் கேட்க ஒரு சட்டமா? :  புதிய தொலைத்தொடர்பு மசோதாவில் உள்ள ஆபத்துகளை விளக்கும் முரசொலி!

தொலைத் தொடர்பு ஊடகங்களின் உரிமங்கள் தொடர்பான புது வரையறையும், இம்மசோதா முன்மொழிகிறது. இதன் மூலம், தொலைத் தொடர்புச் சேவைகள், கருவிகள், உள்கட்டமைப்பு, வலைப்பின்னல் போன்ற அனைத்தும் ஒன்றியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது. இதன் மூலம் கருத்துரிமை முழுவதுமாகப் பறிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் நடக்கக்கூடிய செய்திகளை, பல்வேறு பகுதிகளிலிருந்தும், பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் சேகரித்து உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகத்தைக் கட்டுப்படுத்த நினைப்பது, நாட்டின் வெளிப்படைத் தன்மைக்கு மிகப்பெரிய சவாலாக அமையும். இந்த மசோதா மக்களின் அடிப்படை உரிமையை கேள்விக்குறியாக்கப் பார்க்கிறது.

இந்த மசோதா மிகமிகக் கடுமையானது; இணையத்தை முடக்குவது ஆகும். வாட்ஸ்அப், டெலிகிராம், இமெயில் ஆகிய சேவைகளை இது குறிவைக்கிறது.

பொதுப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு நலன் கருதி என்று ஒன்றிய அரசுக்கு வழங்கும் அதிகாரங்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியவை ஆகும். இஸ்ரேலிய நிறுவனம் செய்த பெகாசஸ் நடவடிக்கைகள், இனி சட்டபூர்வமானவை ஆகலாம். ‘நாட்டுக்கு ஆபத்தானவர்கள்’ என்று யாருடைய போனையும் இடை மறித்துக் கேட்கலாம்.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் பெகாசஸ் மென் பொருள் மூலம் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமைப் போராளிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேரின் செல்போன் தகவல் திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் செய்தியை ‘தி கார்டியன்’ இதழ் வெளியிட்டுள்ளது. ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழும் வெளியிட்டுள்ளது. இது இந்திய நாடாளுமன்றத்தை அதிர வைத்தது. இறுதியாக பிரச்சினையே கிடப்பில் போடப்பட்டது.

மணிப்பூர் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்டது போன்ற இணைய முடக்கத்தை இனி எந்த மாநிலத்தில் செய்தாலும் அதனை சட்டபூர்வமாகச் செய்யலாம்.

banner

Related Stories

Related Stories