முரசொலி தலையங்கம்

ஊழலைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா ? : அதிமுக ஆட்சிக் கால ஊழலை பட்டியலிட்ட முரசொலி!

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஊழலைப் பற்றி பேசலாமா? அவரது ஆட்சிக் கால ஊழலைப் பற்றி பேசுவோமா?

ஊழலைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா ? : அதிமுக ஆட்சிக் கால ஊழலை பட்டியலிட்ட முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (28-12-2023)

ஊழலைப் பற்றி பேசலாமா ? – 1

நாடும் நாட்டு மக்களும் தன்னையும் தனது காலத்து அ.தி.மு.க. அமைச்சர்களையும் பற்றி மறந்திருப்பார்கள் என்ற நினைப்பில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசி இருக்கிறார். அவரெல்லாம் ஊழலைப் பற்றி பேசலாமா? அவரது ஆட்சிக் கால ஊழலைப் பற்றி பேசுவோமா?

பழனிசாமியின் தலைவி ஜெயலலிதாவுக்கு ஊழல் வழக்கில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அவர்கள் ஜெயலலிதா,சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். ‘ஜெயலலிதா செய்தது ஊழல் மட்டுமல்ல,

மன்னிக்க முடியாத அரசியல் சட்டப் படுகொலை’ என்று உச்சநீதிமன்ற நீதியரசர்கள் தங்கள் தீர்ப்பில் சொன்னார்கள். “குற்றவாளிகள் அனைவரும் ஒரு கூட்டமாக முதல் குற்றவாளி ஜெயலலிதா வீட்டில் வசித்து வந்துள்ளனர். சேர்ந்து வாழ்வதற்காகவோ, அல்லது மனிதாபிமான அடிப்படையிலோ ஜெயலலிதா பிற குற்றவாளிகளை தன் வீட்டில் தங்க வைக்கவில்லை.

மாற்றாக ஜெயலலிதா சேர்த்துக் குவித்த சொத்துக்களை அவர்கள் பெயரில் வைத்துக் கொள்ளவே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜெயலலிதா வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று சாட்சியங்கள் அடிப்படையிலும் சூழ்நிலை அடிப்படையிலும் அய்யமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது” - என்று உச்சநீதிமன்ற நீதியரசர்கள் எழுதி இருந்தார்கள். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று இரண்டு முறை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியவர் ஜெயலலிதாவே. முதலமைச்சராக இருந்தபோதே பதவி விலகி சிறைக்குப் போனவர் ஜெயலலிதாவே. இதையெல்லாம் மக்கள் இன்னும் மறக்கவில்லை.

ஊழலைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா ? : அதிமுக ஆட்சிக் கால ஊழலை பட்டியலிட்ட முரசொலி!

நான்காண்டு சிறைத் தண்டனை பெற்ற சசிகலா சிறைக்குப் போவதற்கு முன்புதான் – சசிகலாவின் காலை நோக்கி மண்புழுவைப் போல ஊர்ந்து சென்று – முதலமைச்சர் பதவியை பழனிசாமி பெற்றார். அந்த வீடியோவை தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாட்ஸ் அப்பில் இன்னும் அழிக்காமல் வைத்துள்ளார்கள்.

இதே பழனிசாமி மீது டெண்டர் வழக்குப் பாய்ந்தது. உடனடியாக உச்சநீதிமன்றம் போய் தடை வாங்கினார். அதனால்தான் முதலமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடித்தார். “உங்கள் மீது ஊழல் புகார் சொல்லப்படுகிறதே?” என்று நிருபர்கள் டெல்லியில் வைத்து அவரிடம் கேட்டார்கள். “யார் மீதுதான் ஊழல் புகார் இல்லை” என்றார் பழனிசாமி.

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும் இதுகுறித்து பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2018 ஆம் ஆண்டே வழக்கு தாக்கல் செய்தார்.

ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவினாசிபாளையம் ஆகிய நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது ரூ.713 கோடியாக உள்ள நிலையில் அந்தத் திட்டத்திற்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான ஒப்பந்தம் பழனிசாமி உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி, செங்கோட்டை, கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்தும் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அன்ட் கோ என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஆர்.எஸ். பாரதி கூறியிருந்தார்.

பாலாஜி டோல்வேஸ் நிறுவனத்தில் சேகர்ரெட்டி, நாகராஜன், சுப்ரமணியம் ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத் துறையின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. வண்டலூர் முதல் வாலாஜா வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் எஸ்.பி.கே. அன்ட் கோ நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள 5 வருடங்களுக்கான 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அன்ட் கோவிற்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்ற விசாரணையின்போது ஆர்.எஸ்.பாரதி ஆதாரங்களுடன் தெரிவித்தார்.

ஊழலைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா ? : அதிமுக ஆட்சிக் கால ஊழலை பட்டியலிட்ட முரசொலி!

தனது உறவினர்களுக்கே பெரும்பாலான ஒப்பந்தங்களைக் கொடுத்தார் என்பதே முக்கியமான குற்றச்சாட்டு. இதன் மூலம் பழனிச்சாமி, தனது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என ஆர்.எஸ்.பாரதி மனுவில் தெரிவித்து இருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி 2018 அக்டோபர் மாதம் உத்தரவிட்­டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. அந்த வழக்கு அப்படியே கிடந்தது.

ஆட்சி மாறியது, காட்சியும் மாறியது. தமிழக அரசு தரப்பில் வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப் ட்டது. “இவ்வழக்கு கடந்த நான்கு ஆண்டு காலமாக உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு நிலுவையில் உள்ளதால் வழக்கின் விசாரணை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும்” என முறையிட்டது. இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விரைந்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி, சென்னை உயர்நீதி மன்றமே விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த வழக்கு மீண்டும் வேகம் எடுத்தது.

-தொடரும்

banner

Related Stories

Related Stories