முரசொலி தலையங்கம்

போர் நிறுத்தம் - வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறியது ஒன்றிய பாஜக அரசின் மாபெரும் தவறு : முரசொலி!

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபை தீர்மானத்தை ஆதரிக்காமல் – வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறியது ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாபெரும் தவறு ஆகும்.

போர் நிறுத்தம் - வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறியது ஒன்றிய பாஜக அரசின் மாபெரும் தவறு : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (01-11-2023)

ஒன்றிய அரசின் நிலைப்பாடு மாபெரும் தவறு

காசாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபை தீர்மானத்தை ஆதரிக்காமல் – வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறியது ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாபெரும் தவறு ஆகும். பாதிக்கப்படும் காசா மக்கள் பக்கம் நிற்கிறோம் என்ற நிலைப்பாட்டுக்கு இது எதிரானது மட்டுமல்ல, இஸ்ரேலை ஆதரிக்கும் நிலைப்பாடு ஆகும் இது.

காசாவில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர் எண்ணிக்கை எட்டாயிரத்தைத் தொடப்போகிறது. இதில் 3,500க்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள். இந்த நேரத்தில் கூட போரை நிறுத்துங்கள் என்ற தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை என்றால், ‘பயங்கரவாதத்துக்கு எதிரானவர்கள் நாம்’ என்று பேசுவதற்கான யோக்கியதையை இந்திய நாடு எப்படி பெற முடியும்?

வடக்கு காசாவில் இருந்து கடந்த 11–15 ஆம் தேதிகளில் மட்டும் 10 லட்சம் மக்கள் வெளியேறும் நிலைமையை இஸ்ரேல் உருவாக்கியது. 13 ஆம் தேதிக்குள் இவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. எனவே இவர்கள் வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கும் குடிநீர் கிடையாது. மின்சாரம் கிடையாது. மருந்துப் பொருட்கள் கிடையாது. எனவே பெரும்பாலானவர்கள் மருத்துவமனைகளுக்குள் தஞ்சம் புகுந்தார்கள். மருத்துவமனைகள் மொத்தமும் சந்தைகள் போலக் காணப்பட்டன. மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள், அவசர அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் என பலரது உயிர்கள் அபாயக் கட்டத்தை அடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பே கடந்த 16 ஆம் தேதி அறிக்கை கொடுத்தது. தெற்கு காசாவில் இருக்கும் மருத்துவ மனைகளை மூடுவதற்கும் இஸ்ரேல் உத்தரவிட்டதாக ஐ.நா. தெரிவித்தது.

இந்த நிலையில் காசா மருத்துவமனைகள் மீதே கடந்த 16 ஆம் தேதி குண்டுகள் வீசியது இஸ்ரேல். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள். காசா நகரத்தில் இருந்த அல் அஹ்லி மருத்துவமனை மீது வான்வெளி தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் ராணுவம். தஞ்சம் அடைந்திருந்த பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள். போரில் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பது மிகமிகச் சாதாரணமான அடிப்படை விதியாகும். அதையும் மீறியது இஸ்ரேல்.

போர் நிறுத்தம் - வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறியது ஒன்றிய பாஜக அரசின் மாபெரும் தவறு : முரசொலி!

இப்படிப்பட்ட நிலைமையில் பாலஸ்தீன அதிபருடன், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தொலைபேசியில் பேசினார். இஸ்ரேல் – பாலஸ்தீன ஹமாஸ் ஆகிய இருவருக்கு இடையிலான போர் தொடங்கி 13 நாட்களுக்குப் பிறகு மோடி முதன்முதலாக பாலஸ்தீன அதிபருடன் பேசினார்.

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, காசா மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும், பாலஸ்தீன மக்களுக்கான இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் தொடரும் என்று சொன்னதாகவும் தகவல்கள் வெளியானது. ‘பயங்கரவாதம், வன்முறை, குறைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து அப்போது இந்தியப் பிரதமர் கவலை தெரிவித்தார்’ என்றும், ‘இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியாவின் நீண்ட காலக் கொள்கைகள் தொடரும் என்று இந்தியப் பிரதமர் தெரிவித்தார்’ என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது உள்ளார்ந்த அக்கறையுடன் செய்யப்பட்ட செயலாக இருக்குமானால் ஐ.நா. வில் கடந்த 28 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்.

‘குடிமக்களின் பாதுகாப்பு, சட்டபூர்வ மற்றும் மனிதாபிமானக் கடமைகளை உறுதி செய்தல்’ என்பதுதான் ஐ.நா. தீர்மானத்தின் தலைப்பாகும். ‘காசா மக்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும். அங்கு ஐ.நா. மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளின் பாதுகாப்பான அணுகலை உறுதி செய்ய வேண்டும். காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து தெற்குப் பகுதிக்கு மக்கள் இடம்பெயர வேண்டும் என்ற இஸ்ரேலின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். சட்டவிரோதமாக பிடித்து வைத்துள்ள குடிமக்கள் அனைவரையும் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அனைத்துத் தரப்பினரும் அதிகபட்சக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்’ – இது தான் ஐ.நா. தீர்மானம் ஆகும்.

ஐ.நா.வின் தீர்மானத்தில் இஸ்ரேல் நாட்டை பெரிய அளவில் கண்டிக்கவில்லை. கண்டனம் தெரிவிக்கவில்லை. ஐ.நா.வின் தீர்மானம் என்பது கூட ‘மனிதாபிமான’ குரலை எதிரொலிப்பதாக மட்டும்தான் அமைந்திருந்தது. மனித உரிமைக் குரலை எதிரொலிப்பதாக அமையவில்லை. ஆக்கிரமிப்பைக் கண்டிக்கவில்லை. இத்தகைய சாதாரண தீர்மானத்தைக் கூட ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு ஆதரிக்க மனமில்லை.

போர் நிறுத்தம் - வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறியது ஒன்றிய பாஜக அரசின் மாபெரும் தவறு : முரசொலி!

போர் நிறுத்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்துள்ளது. எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளது. 45 நாடுகள் வாக்களிக்கவில்லை. அதில் இந்தியாவும் ஒன்று. ஹமாஸ் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும் என்று கனடா ஒரு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அந்த திருத்தத்தை ஆதரித்து ஒன்றிய பா.ஜ.க. அரசு வாக்களித்துள்ளது. இதன் மூலமாக பா.ஜ.க.வின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

‘பயங்கரவாதம், வன்முறை, குறைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து இந்தியப் பிரதமர் கவலை தெரிவித்தார்’ என்ற பழைய செய்திக்கு முற்றிலும் விரோதமானது இந்த நிலைப்பாடு. ஐ.நா. தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலமாகத்தான் பயங்கரவாதம், வன்முறைக்கு எதிரான தனது குரலை பா.ஜ.க. அரசு வலியுறுத்தி இருக்க முடியும். பாலஸ்தீன பிரதமரிடம் தொலைபேசியில் பேசுவதால் அல்ல.

banner

Related Stories

Related Stories