முரசொலி தலையங்கம்

ஒன்றிய அரசு கூட செய்யாததை செய்து காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!

‘ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்’ - – என்ற விழாவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தனித்தன்மையை அடையாளம் காட்டுவதாக அமைந்திருந்தது.

ஒன்றிய அரசு கூட செய்யாததை செய்து காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (04-10-2023)

அறிவியலாளர்களைப் போற்றுவதிலும் முதல்வர்!

அனைத்துத் துறைகளையும் இந்தியாவிலேயே முதன்மையாக மாற்றுவதன் மூலம் – இந்தியாவில் முதலமைச்சர்களுக்கு எல்லாம் முதல் அமைச்சராகத் திகழ்கிறார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். அந்த வரிசையில் அறிவியலாளர்களைப் போற்றுவதிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முதல்வராகத் திகழ்கிறார்!

‘ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்’ - – என்ற விழாவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தனித்தன்மையை அடையாளம் காட்டுவதாக அமைந்திருந்தது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றி - உலகையே இந்தியாவின் பக்கம் திருப்பிய –- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்பது அறிவியல் ஆய்வாளர்களை ஒரே மேடைக்கு அழைத்து வந்து பாராட்டிய காட்சி என்பது இதுவரை இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாதது ஆகும். ஏன், ஒன்றிய அரசே கூட இப்படி ஒரு பாராட்டுவிழாவை நடத்தியது இல்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்களை அழைத்துப் பாராட்டியதன் மூலமாக, அனைத்து மாநில அரசுகளுக்கும் முன்னுதாரணத்தைச் செய்து காட்டி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். “இந்த மேடையில் நிற்பதே எனக்குப் பெருமையாக இருக்கிறது! தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல- – தமிழனாகப் பிறந்த பெருமையை இன்றைய தினம் அதிகமாக அடைகிறேன்! இந்தியாவின் பக்கமாக உலகத்தையே பார்க்க வைத்த தமிழ்நாட்டு அறிவியல் மேதைகள் ஒன்பது பேர் இந்த மேடையில் அமர்ந்திருப்பது எனது உள்ளத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது” என்று சொல்லிக் காட்டிய பெருமை என்பது, இது வரை அவர்கள் அடையாத பெருமை ஆகும்.

முனைவர் கே.சிவன், முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, முனைவர் வி.நாராயணன், ஏ.இராஜராஜன், எம்.சங்கரன், ஜெ.ஆசீர் பாக்கியராஜ், மு.வனிதா, நிகார்ஷாஜி, முனைவர் ப.வீரமுத்துவேல் ஆகிய ஒவ்வொருவரது சிறப்பையும் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “என்னைப் பொருத்த வரையில் தமிழ்நாட்டு இளைய சமுதாயத்தினர் இவர்களையே தங்களது வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டு முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தமிழ்நாட்டு மாணவ சமுதாயத்துக்கு அவர் வைத்த வேண்டுகோள் என்பதும், இதுவரை யாரும் சொல்லிக் காட்டாத பெருமை ஆகும்.

ஒன்றிய அரசு கூட செய்யாததை செய்து காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!

இவை அனைத்துக்கும் சிகரம் வைப்பதைப் போல, “இத்தகைய பெருமையை இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏற்படுத்திக் கொடுத்த – ஏற்படுத்திக் கொடுக்கப் போகும் மேதைகளாக இந்த ஒன்பது விஞ்ஞானிகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் – - ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் ரூபாய் வழங்குகிறோம் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது. மேடையில் இருந்த அனைத்து அறிவியல் ஆளுமைகளும் எழுந்து நின்று முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்கள். “உங்கள் அறிவுக்கான அளவுகோல் ஏதுமில்லை. உங்கள் உழைப்புக்கான அங்கீகாரத்தின் அடையாளமாக தமிழ்நாடு அரசு இந்தத் தொகையை வழங்குகிறது. இதனை ஏற்றுக் கொண்டு – மேலும் மேலும் இந்தியாவுக்காக உழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று மகுடம் சூட்டினார் முதலமைச்சர் அவர்கள்.

‘இஸ்ரோ’ சிவன் சொல்லி இருக்கிறார். “தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த விழா மூலம் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கின்ற பள்ளி மாணவர்கள், தாங்கள் எந்த அளவிலும் குறைவானவர்கள் அல்ல, நம்மாலும் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இவர்களும் விஞ்ஞானிகளாக வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது” என்று சொல்லி இருப்பது முதலமைச்சர் அவர்களின் முழுமுதல் நோக்கத்தை எடுத்துச் சொல்வதாக அமைந்திருந்தது.

சந்திரயான் 3 – திட்ட இயக்குனர் விஞ்ஞானி வீரமுத்துவேல் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். “தமிழக அரசு எங்களுக்கு மரியாதை செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போன்று எங்களை ஊக்கம் அளிப்பதால் எங்களை மட்டும் அல்ல அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் சமூகத்திற்கு பெரிய அளவில் கொண்டு போக செய்யும். இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்த முதலமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி. அரசாங்கத்திற்கு நன்றி. விஞ்ஞானிகள் சார்பாக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆமாம்! ஒட்டுமொத்தமாக அறிவியல் உலகத்தையே பாராட்டிவிட்டார் முதலமைச்சர் அவர்கள்.

விஞ்ஞானி வனிதா முத்தையா, “தமிழ்நாடு அரசு எங்களுக்கு மிகப்பெரிய மரியாதையைக் கொடுத்துவிட்டது. நாங்கள் இப்படி நடக்கும் என்று நினைக்கவே இல்லை. ஒரு சின்ன நிகழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.தமிழக முதல்வருக்கு நன்றி” என்று மகிழ்ச்சியைத் தெரிவித்து இருக்கிறார்.

ஒன்றிய அரசு கூட செய்யாததை செய்து காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!

ஆதித்யா எல்1 திட்ட இயக்குனர் விஞ்ஞானி நிகர் ஷாஜி, “எங்களை தமிழக அரசு கௌரவித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்ததற்கு நாங்கள் பெருமை அடைகிறோம்” என்று சொல்லி இருக்கிறார்.

விஞ்ஞானி நாராயணன், “தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் வளர்ந்து உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது பணி தமிழ்நாடும் இந்தியாவும் வளர்ச்சி அடைய அடித்தளமாக இருக்கும். நாம் அனைவரும் நம் தமிழ்நாட்டு முதல்வரை பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்” என்று சொல்லி இருக்கிறார்.

அறிஞர்களைப் போற்றும் அரசு - அறிவியல் அறிஞர்களைப் போற்றும் அரசு - என்பதை அந்த மேடையில் இருந்தபடியே நாட்டுக்கு எடுத்துக் காட்டிவிட்டார் முதலமைச்சர் அவர்கள். இதேபோன்ற அறிவியல் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதற்கும் அடித்தளம் அமைத்துவிட்டார் முதலமைச்சர் அவர்கள்.

அதேபோல், அறிவியல் ஆளுமைகளால் போற்றப்படும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் உயர்ந்து நிற்கிறார். ஞாயிறு போற்றுதும் - ஞாயிறு போற்றுதும்.

banner

Related Stories

Related Stories