முரசொலி தலையங்கம்

“மதத்தை கபளீகரம் செய்தது சனாதனம்தான்” : சனாதனக் கொள்கை குறித்து ஆளுநர் RN.ரவிக்கு பாடம் எடுத்த முரசொலி!

கவர்னர், ரிக் வேதத்தை சரியாகப் படிக்க வேண்டும். ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலம், 96ஆவது ஸ்லோகத்தை வாசிக்கவும். அதில் இது சொல்லப்பட்டுள்ளது.

“மதத்தை கபளீகரம் செய்தது சனாதனம்தான்” : சனாதனக் கொள்கை குறித்து ஆளுநர் RN.ரவிக்கு பாடம் எடுத்த  முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘சனாதன’ ரவி

சில நாட்களாகச் சத்தமில்லாமல் இருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. திடீரென்று அவர் பெயரால் ஒரு அறிக்கை வந்திருக்கிறது. அதை வைத்துப் பார்க்கும் போதுதான், மிக முக்கியமான ஒரு காரியத்தில் அவர் இருந்திருப்பதை அறிய முடிகிறது. 'சனாதனம்' குறித்த ஆராய்ச்சியில் இருந்திருக்கிறார்.

சனாதன தர்மம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ள விளக்கத்தை ‘தினத்தந்தி’ நாளிதழ் (12.9.2023) வெளியிட்டுள்ளது. ‘சாதி சமூகப் பாகுபாடுகளுக்கு சனாதன தர்மத்தில் ஒருபோதும் இடமில்லை’ என்று ஆளுநர் சொல்வதாக அந்த நாளிதழ் தலைப்பு போட்டுள்ளது. ஏனென்றால் அந்த தலைப்பு மட்டும்தான் அவரது அறிக்கையில் புரியும். மற்றவை எல்லாம் அவருக்கு மட்டுமே புரியும் கருத்துகள் ஆகும்.

சனாதனம் என்றால் ஆன்மிகம், வாழ்க்கை மற்றும் படைப்பு தொடர்பானதாம். இது ஒத்திசைவான கலாச்சாரத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுக்கிறதாம். திடீரென்று ரிக் வேதத்தை ஆதாரமாகக் காட்டுகிறார். அதுதான் சனாதன தர்மத்தின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட வெளிப்பாடு என்கிறார். திடீரென உலக சமயங்கள் அனைத்துக்கும் தானே அத்தாரிட்டியைப் போல ஏதேதோ சொல்கிறார். உலகம் ஒரு குடும்பம் என்பதும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதும் , வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்பதும் சனாதன தர்மம் என்று முடிக்கிறார்.

“மதத்தை கபளீகரம் செய்தது சனாதனம்தான்” : சனாதனக் கொள்கை குறித்து ஆளுநர் RN.ரவிக்கு பாடம் எடுத்த  முரசொலி!

இதில் இருந்து ஒட்டுமொத்தமாக அவர் சொல்ல வருவது, சனாதன தர்மம் என்பது ஒற்றுமையைத்தான் போதிக்கிறது என்கிறார். சனாதன தர்மம் என்று இவர்கள் இதுவரை எதை எல்லாம் சொல்லி வந்தார்களோ, அதை எல்லாம் அவர்களே மறுத்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இதுதான் அமைச்சர் உதயநிதி போட்ட போடால் ஏற்பட்ட விளைவு ஆகும்.

மனிதர்களுக்குள் பேதமில்லை என்று சொல்லிய போது, ‘இல்லை! பேதம் உண்டு, அது பிறப்பால் வருவது, இது ஆதியில் இருக்கிறது, கீதையில் இருக்கிறது, ரிக் வேதத்தில் இருக்கிறது, மனுவில் இருக்கிறது’ என்று சொல்லி நியாயப்படுத்தி வந்தவர்கள், ‘ஐயையோ! அப்படி எந்த வேறுபாடும் எதிலும் இல்லை’ என்று இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘என் தோப்பு மாமரத்துல நீ ஏன் ஏறுகிறாய்?' என்று கேட்டார் தோட்டக்காரர். மாட்டிக் கொண்டவன் சொன்னான்:' தேங்காய் பறிக்கப் போனேன்’ என்றானாம். 'மா மரத்துல தேங்காய் எப்படி இருக்கும்?' என்று கேட்டார் தோட்டக்காரர். 'இல்லைன்றதுனால தான் இறங்குகிறேன்' என்றானாம். அப்படி இருக்கிறது இவர்களது வியாக்கியானங்கள் எல்லாம்!

“மதத்தை கபளீகரம் செய்தது சனாதனம்தான்” : சனாதனக் கொள்கை குறித்து ஆளுநர் RN.ரவிக்கு பாடம் எடுத்த  முரசொலி!

சனாதனத்தை தான் அமைச்சர் உதயநிதி விமர்சித்தார். மதத்தையே விமர்சித்துவிட்டதாகப் பரப்பினார்கள் பா.ஜ.க.வினர். இறை நம்பிக்கை வேறு - சனாதனம் வேறு என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை. மதத்தை கபளீகரம் செய்தது சனாதனம். அது தான் இந்தியாவில் எதிர்கொண்ட பிரச்சினையே!

புகழ்பெற்ற வேதப்பண்டிதரான அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் என்பவர் உலகம் முழுக்க பயணம் செய்து கீதையைப் பரப்பியவர். அவர் எழுதிய முக்கியமான நூல், ‘பகவத் கீதை உள்ளது உள்ளபடி’ என்பது ஆகும். ‘ஆங்கில வார்த்தையான ரிலிஜன் என்பது ஸநாதன தர்மம் என்பதில் இருந்து வேறுபட்டதாகும். ரிலிஜன் என்பது ஒருவித நம்பிக்கையைக் குறிக்கும். நம்பிக்கை என்பது மாறக் கூடும். ஒரு குறிப்பிட்ட முறையில் ஒருவருக்கு நம்பிக்கை இருக்கலாம். அவர் தமது நம்பிக்கையை மாற்றி வேறொரு நம்பிக்கையைக் கடைப்பிடிக்கலாம். ஆனால் ஸநாதன தர்மம் என்பது மாற்ற முடியாத செயலைக் குறிக்கும்’ (பக்கம்21) என்று எழுதி இருக்கிறார்.

'மனித சமுதாயத்தின் நால்வகை பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன. இம்முறையை படைத்தவன் நானேயாயினும் இதனை மாற்ற என்னாலே முடியாது' என்கிறது கீதை. (அத்தியாயம் 4 ; ஸ்லோகம் 13).தங்களது சுபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்ற தன்மையில் தான் இந்த நால்வரும் வேறுபடுத்தப்படுகிறார்கள்.( அத்தியாயம் 18; ஸ்லோகம்41). பிராமணர் -– சத்திரியர் –- வைசியர் –- சூத்திரர் ஆகிய நான்கு பிரிவும் செய்ய வேண்டிய செயல், தொழிலைப் பற்றி ஸ்லோகம் 42,43,44 ஆகியவை சொல்கிறது.

“மதத்தை கபளீகரம் செய்தது சனாதனம்தான்” : சனாதனக் கொள்கை குறித்து ஆளுநர் RN.ரவிக்கு பாடம் எடுத்த  முரசொலி!

மற்ற மூன்று பிரிவினருக்கும் தொண்டு செய்வதே சூத்திரரின் வேலை என்கிறது ஸ்லோகம் 44. இந்தக் கடமையை மட்டும் செய் என்கிறது ஸ்லோகம் 47. இந்த தொழிலை விட்டு வேறு தொழிலைப் பார்க்காதே என்கிறது ஸ்லோகம் 48. இவை அனைத்தும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை தொடங்கிய ஆச்சாரியர் என அழைக்கப்படும் பக்தி வேதாந்த சுவாமி பிரபு பாதர் எழுதியதுதான்.

பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என கீழ் குலத்தைச் சார்ந்தவர்கள் பாவ ......யில் பிறந்தவர்கள் என்கிறது கீதை . (அத்தியாயம் 9; ஸ்லோகம் 32) இப்படியா எழுதுவது என்று சின்மயானந்தாவே கண்டித்திருக்கிறார். ‘பாவப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்கள்’ என்று டீசெண்டாக எழுதி இருக்கிறார் பிரபு பாதர். ( பக்கம் 524)

எதில் பிறந்தாயோ அதில் தான் நீ இருக்க வேண்டும், எந்த குலத்தில் பிறந்தாயோ அந்த குலக் கடமையைத்தான் செய்ய வேண்டும். இதனால் துன்பம் அனுபவித்தால் அது உன் முன்வினைப் பாவம், அது உன் கர்ம வினை, இந்த தலையெழுத்தை நீ மாற்றவே முடியாது என்பது தான் இவர்கள் காலம் காலமாக கற்பிக்கும் தர்மம்.

கர்மம் - தர்மம் என்பதெல்லாம் அவரவர் ஜாதி, குலத் தொழிலை நிரந்தரமாகச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். சனாதனம் என்றால் மாற்றமுடியாதது, மாறாதது என்று இவர்கள் சொல்வது எல்லாம் இதை வைத்துத்தான். பிறப்பை மாற்ற முடியாதது என்பதே சனாதனக் கொள்கை.

கவர்னர், ரிக் வேதத்தை சரியாகப் படிக்க வேண்டும். ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலம், 96ஆவது ஸ்லோகத்தை வாசிக்கவும். அதில் இது சொல்லப்பட்டுள்ளது. அல்லது திருச்சி கல்யாணராமன் பிரசங்கம் கேட்கவும். சனாதனத்தை முழுமையாக அறியலாம்.

banner

Related Stories

Related Stories