முரசொலி தலையங்கம்

இந்தியாவை காப்பாற்ற தயாராகிவிட்டது ‘இந்தியா‘ கூட்டணி; கலக்கத்தில் மோடி - பா.ஜ.க கூட்டம் : முரசொலி!

‘ஒரே நாடு –- ஒரே தேர்தல்’ என்ற குழப்பக் கொள்கையை கையில் எடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதன் மூலமாக ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்படுத்தலாமா என்று பார்க்கிறார் அவர்.

இந்தியாவை காப்பாற்ற தயாராகிவிட்டது ‘இந்தியா‘ கூட்டணி; கலக்கத்தில் மோடி - பா.ஜ.க கூட்டம் : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (04- 09- 2023)

மும்பையில் முழு வெற்றி!

பாட்னாவில் கருவாகி - பெங்களூரில் உருவாகி - மும்பையில் திருவாகி இருக்கிறது ‘இந்தியா’ கூட்டணி. இது பா.ஜ.க.வுக்கும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் எத்தகைய கலக்கத்தை உருவாக்கி இருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் – -சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்தது ஆகும். இந்தியா கூட்டணிக் கூட்டம் நடக்க நடக்க ... சிலிண்டரின் மொத்த விலையே 200 தான் என்கிற அளவுக்கு பிரதமர் குறைத்தாலும் குறைத்துவிடுவார்.

மும்பை கூட்டமானது முழு வெற்றியாக அமைந்திருப்பதால் தான் அதனை திசை திருப்புவதற்காக –- ‘ஒரே நாடு –- ஒரே தேர்தல்’ என்ற குழப்பக் கொள்கையை கையில் எடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதன் மூலமாக ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்படுத்தலாமா என்று பார்க்கிறார் அவர். ‘இந்தியா’ கூட்டணி மிகத் தெளிவாக இருக்கிறது. ‘பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இலக்கு’ என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அந்த ஒற்றை முழக்கத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் கையில் எடுக்கவில்லை.

இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மும்பைக் கூட்டத்திலேயே தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். “எதிர்க்கட்சிகள் ஒன்று சேரமாட்டார்கள் என்று நினைத்தது பா.ஜ.க. ஒரே கூட்டத்தில் பிரிந்து விடுவார்கள் என நினைத்தார்கள். கூட்டணியாக இணைந்து - – அதற்கு பெயரும் சூட்டி மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவிட்டோம் என்பது நமது பக்குவத்தை மட்டுமல்ல நம்முடைய உறுதியையும் காட்டுகிறது.

இத்தகைய உறுதியுடன் செயல்பட்டு வரும் அகில இந்தியக் கட்சித் தலைவர்கள் – -மாநிலக் கட்சியின் தலைவர்கள் – -மாநில முதலமைச்சர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிப் பாதையில் நாம் பயணித்து வருகிறோம் என்பதன் அடையாளம் இது” என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இதே கருத்தைத் தான் அனைத்துத் தலைவர்களும் எதிரொலித்தார்கள்.

இந்தியாவை காப்பாற்ற தயாராகிவிட்டது ‘இந்தியா‘ கூட்டணி; கலக்கத்தில் மோடி - பா.ஜ.க கூட்டம் : முரசொலி!

“இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு, நிச்சயமாக பா.ஜ.க. தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை” என்றார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். ஆம்! என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது மும்பை கூட்டம்.

14 உறுப்பினர்கள் கொண்ட ஒருங்கிணைப்பு மற்றும் தேர்தல் வியூகக் குழு அமைக்கப்பட்டு விட்டது. இதேபோல் பிரச்சாரக் குழு, பத்திரிகையாளர்கள் குழு, சமூக ஊடகக் குழு, ஆய்வுக் குழு ஆகிய குழுக்களும் அமைக்கப்பட்டு விட்டன. தொகுதிப் பங்கீடுகளைத் தொடங்கி விடுங்கள் என்றும் ‘இந்தியா’ கூட்டணி அறிவித்துள்ளது.

“இந்தியா கூட்டணிக் கட்சிகளான நாங்கள் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முடிந்தவரை ஒன்றாகப் போட்டியிட்ட முடிவு செய்திருக்கிறோம். பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு ஏற்பாடுகள் உடனடியாக தொடங்கப்படும்” என்பது தீர்மானமாக நிறைவேற்றப் பட்டுள்ளது. ‘எல்லா இடங்களிலும் பா.ஜ.க.வுக்கு எதிராக இருமுனைப் போட்டியை உருவாக்க முடிவு செய்துள்ளோம்’ என்று சொல்லி இருக்கிறார் உத்தவ் தாக்கரே. மூன்றாவது அணியை உருவாக்க நினைத்தது பா.ஜ.க. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, இரண்டு அணிகளோடு நிறுத்த வைத்தது தான் தி.மு.க. தலைவரின் மகத்தான சாதனை ஆகும்.

பாட்னாவில் 19 கட்சிகளின் அணிச்சேர்க்கையாக இருந்தது. பெங்களூருவில் 26 கட்சிகளின் இணைப்பாக வளர்ந்தது. மும்பையில் 28 கட்சிகளாக வளர்ந்து வருகிறது. இன்னும் பல கட்சிகள் வரலாம். காங்கிரஸையும் உள்ளடக்கிய அணிச் சேர்க்கை தான் வெற்றிகரமாக அமையும் என்பதை தொடர்ந்து சொல்லி வந்தவர் தி.மு.க. தலைவர் அவர்கள்.

இந்தியாவை காப்பாற்ற தயாராகிவிட்டது ‘இந்தியா‘ கூட்டணி; கலக்கத்தில் மோடி - பா.ஜ.க கூட்டம் : முரசொலி!

“நாங்கள் எடுத்துள்ள முடிவுகள் பா.ஜ.க.வை வீழ்த்துவதை உறுதி செய்துள்ளது. ஒருங்கிணைப்புக் குழுவை நாங்கள் அமைத்துள்ளது இதனை உறுதி செய்துள்ளது. இந்தியா கூட்டணி நிச்சயமாக பா.ஜ.க.வை வீழ்த்தும்” என்றார் ராகுல் காந்தி. “இந்திய மக்களின் 60 சதவிகிதத்தை நாங்கள் பிரதிபலிக்கிறோம்” என்றும் ராகுல் சொன்னார். “தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம். நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த கூட்டத்தின் நோக்கம் மத்தியில் உள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதுதான். நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். வரலாற்றை மாற்றி எழுத பா.ஜ.க.வை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று திட்டவட்டமாகச் சொல்லி இருக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். “நாங்கள் அமைத்திருப்பது சில கட்சிகளின் கூட்டணி அல்ல. புதிய இந்தியாவை உருவாக்க விரும்பும் 140 கோடி மக்களின் கூட்டணி ஆகும்” என்று சொன்னார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

“நாங்கள் ஒருபோதும் தவறு செய்ய மாட்டோம்” என்று உறுதி அளித்திருக்கிறார் சரத்பவார். நரேந்திர மோடி –- அமித்ஷா -– நிதின் கட்கரி -– யோகி ஆதித்யநாத் -– மோகன் பகவத் என பா.ஜ.க. தான் பல கோஷ்டிகளாகக் கலகலகத்துப் போயிருக்கிறதே தவிர 'இந்தியா' கூட்டணி அல்ல. ‘இந்தியா’ கூட்டணியை வழிநடத்துவது தனி மனிதர்களல்ல, தத்துவங்கள் ஆகும். பா.ஜ.க., மோடி என்ற ஒற்றை முகத்தைக் காட்டி வெற்றி பெற நினைக்கிறது. அந்த முகத்தின் சாயம் வெளுத்துவிட்டது. ஆனால், இந்தியா கூட்டணியானது பல்வேறு தத்துவங்களை முன்னிலைப் படுத்துகிறது. இந்த தத்துவங்கள் வெல்லும் தத்துவங்களாக அமைந்துள்ளன. இவை காலம் காலமாக இந்தியாவைக் காப்பாற்றி வந்த தத்துவங்கள் ஆகும்.

‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலமாக இந்த தத்துவங்களைக் காக்கலாம். இந்த தத்துவங்களை காப்பாற்றுவதன் மூலமாக இந்தியாவைக் காப்பாற்றலாம். இந்த ஒற்றை நோக்கத்தை கூர்மையாக்கியதன் மூலமாக மும்பை கூட்டமானது முழு வெற்றியை ஈட்டித் தந்துள்ளது.

banner

Related Stories

Related Stories