முரசொலி தலையங்கம்

இறந்தவர்களின் பெயரில் நடந்த 'ஆயுஷ்மான் பாரத்' ஊழல்.. வெளிவந்த பாஜகவின் முறைகேடு -முரசொலி விமர்சனம் !

இறந்தவர்களின் பெயரில் நடந்த 'ஆயுஷ்மான் பாரத்' ஊழல்.. வெளிவந்த பாஜகவின் முறைகேடு -முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (2.9.2023)

பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழிக்கும் சி.ஏ.ஜி. – 3

* ஆயுஷ்மான் திட்டம்:

“ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. எப்படி என்றால், ஒரே போலி எண்ணில் 7.5 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டுள்ளார்கள். இறந்துபோன 88 ஆயிரம் பேரின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுதான் ஆயுஷ்மான் ஊழல் ஆகும்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 2018-ஆம் ஆண்டு ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தத் திட்டத்தின்கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் மொத்தம் 7 கோடியே 87 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர் என்று ஒன்றிய அரசு கூறியது. ஆனால் திட்டம் எப்படி நடந்துள்ளது தெரியுமா?

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகளில் 88 ஆயிரத்து 760 பேர் இறந்துவிட்டனர். ஆனால், அவர்கள் இறந்த பின்னரும், சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறி 2 லட்சத்து 14 ஆயிரத்து 923 காப்பீட்டுக் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆளும் மத்தியப்பிரதேசத்தில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ், சிகிச்சை பெற்ற பின் இறந்ததாக அறிவிக்கப்பட்ட 403 நோயாளிகளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில், மத்தியப்பிரதேசத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் 8 ஆயிரம் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாக கணக்கில் கூறப்பட்டுள்ளது. மேலும், தகுதியில்லாத குடும்பங்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாகப் பதிவு செய்யப்பட்டு, சுமார் 22 கோடியே 44 லட்சம் ரூபாய் வரை பயன்பெற்றுள்ளார்கள்.

இறந்தவர்களின் பெயரில் நடந்த 'ஆயுஷ்மான் பாரத்' ஊழல்.. வெளிவந்த பாஜகவின் முறைகேடு -முரசொலி விமர்சனம் !

ஒரே நேரத்தில் ஒரு நோயாளி பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கணக்கு காட்டி காப்பீட்டுத் தொகை பெறப்பட்டு மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது.

ஏழு ஆதாருடன் 4 ஆயிரத்து 761 பதிவுகள் இணைக்கப் பட்டுள்ளன. 9 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களது தொலைபேசி எண் 3 என பதிவு செய்துள்ளனர். 7 லட்சத்து 49 ஆயிரத்து 820 பயனாளிகள் 9999999999 என்ற ஒரே தொடர்பு எண்ணை அளித்துள்ளனர். இந்த ஏழரை லட்சம் பயனாளிகள் கொடுத்த ஒரே தொடர்பு எண்ணும் போலியானது. மேலும் 8888888888 என்ற ஒரே தொடர்பு எண் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 300 பயனாளிகள் கொடுத்துள்ளனர். 9000000000 என்ற ஒரே எண்ணை 96 ஆயிரத்து 46 பேர் தொடர்பு எண்ணாக அளித்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். 9 லட்சம் பேர் தொடர்பு எண் எதுவும் கொடுக்காமலும் ஒன்றிய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இப்படி, ஊழலை வாழவைத்துள்ளது ‘ஆயுஷ்மான்’ திட்டம்!

* பாரத்மாலா திட்டம்:

நாடு முழுவதும் உள்ள சாலைகள் - – நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளை இணைக்கும் வகையில் ‘பாரத்மாலா’ திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு கொண்டுவந்தது. “பாரத்மாலா” திட்டத்தின்படி 34,800 கிலோ மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலை அமைக்க 5 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாயை பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. ஆனால், 26 ஆயிரத்து 316 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை அமைக்க 8 லட்சத்து 46 ஆயிரத்து 588 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதாவது, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ‘ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு 15 கோடியே 37 லட்சம் ரூபாய்’ என்ற செலவை விட இரண்டு மடங்கு அதிகமாக, ஒரு கிலோ மீட்டருக்கு 32 கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

பல செலவுகள் அதிகமாக இருந்தாலும், 2023 மார்ச் 31 வரை 13 ஆயிரத்து 499 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. இது பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அங்கீகரித்த நீளத்தில் 39 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

இறந்தவர்களின் பெயரில் நடந்த 'ஆயுஷ்மான் பாரத்' ஊழல்.. வெளிவந்த பாஜகவின் முறைகேடு -முரசொலி விமர்சனம் !

‘பாரத்மாலா’ திட்டத்துக்கான டெண்டர் முறைகேடுகளையும் சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஏலதாரர்கள் டெண்டர் நிபந்தனையைப் பூர்த்தி செய்யாதது, தவறான ஆவணங்களின் அடிப்படையில் ஏலதாரர்கள் தேர்வு செய்யப்பட்டது, அங்கீகரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் அல்லது தவறான டி.பி.ஆர்.கள் இல்லாமல் வழங்கப்பட்ட பணிகள் மற்றும் 3 ஆயிரத்து 598 கோடியே 52 லட்சம் ரூபாய் அளவுக்கு நிதியை திருப்பிவிட்டது போன்றவற்றையும் சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேபோல், “துவாரகா விரைவு நெடுஞ்சாலை” திட்டத்தில், ஒரு கிலோ மீட்டருக்கு 18 கோடி ரூபாயாக இருந்த செலவு, 250 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

பாரத்மாலா பரியோஜனா -– 1 திட்டத்தின் கீழ் டெல்லியில் உள்ள துவாரகா முதல் ஹரியானா மாநிலம் குர்கான் வரை 29.06 கிலோமீட்டர் நீளத்திற்கான உயர்மட்ட எட்டு வழி துவாரகா விரைவு நெடுஞ்சாலை அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 2019-–ஆம் ஆண்டு தொடங்கியது. “துவாரகா விரைவு நெடுஞ்சாலை” அமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துத் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கான பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

ஹரியானாவில் 18.9 கிலோ மீட்டர் தூரத்திற்கும் டெல்லியில் 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்குமான இத்திட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் நீள சாலை அமைக்க 18 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஒப்புதல் அளித்த நிலையில், அதற்கு மாறாக ஒரு கிலோ மீட்டருக்கு 250 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவானதாக சி.ஏ.ஜி. விசாரணையில் அம்பலமாகியுள்ளது. முதலில் இத்திட்டத்தின் செலவு 528 கோடியே 80 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனால் பின்னர் 7 ஆயிரத்து 287 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது திட்டமிட்ட மதிப்பைவிட ஆயிரத்து 278 மடங்கு கூடுதல் தொகை செலவிடப்பட்டுள்ளது. இதுதவிர, விரிவான திட்ட அறிக்கை இல்லாமலேயே இந்த விரைவுச் சாலைத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதையும் சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

ஏழு திட்டங்களில் நடந்த ஊழல்கள் மட்டும்தான் இவை. எல்லாத் திட்டங்கள் குறித்த அறிக்கையும் வந்தால் பா.ஜ.க.வின் ஊழல் முகம் முழுமையாகக் கிழிந்து தொங்கிவிடும்.

banner

Related Stories

Related Stories