முரசொலி தலையங்கம்

சொத்து குவிப்பு வழக்கு: “நான் மைசூர் மகாராஜா குடும்பத்தை சேர்ந்தவள் என்றவர் ஜெ” - அம்பலப்படுத்திய முரசொலி

மொத்தமாகவே நாடகங்களுக்கு மேல் நாடகங்கள் நடத்தியவர்தான் ஜெயலலிதா. எனவே, நிர்மலா சீதாராமன்கள் எச்சரிக்கையுடன் பேச வேண்டும். ஜெயலலிதாவைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் பேச வேண்டாம்.

சொத்து குவிப்பு வழக்கு: “நான் மைசூர் மகாராஜா குடும்பத்தை சேர்ந்தவள் என்றவர் ஜெ” - அம்பலப்படுத்திய முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜெயலலிதாவின் நாடகங்கள் -– 2

* 1989 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. ஜானகி காலத்தைப் போலவே வன்முறையை உருவாக்கி, தி.மு.க. அரசையும் கலைக்க வைக்க ஜெயலலிதா நினைத்தார். அதனால் திட்டமிட்டு வன்முறை நாடகத்துக்கு ஒத்திகை பார்த்தார்.

1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் முதலமைச்சர் கையில் இருந்து பட்ஜெட் புத்தகத்தைப் பறிப்பதும், அவரைத் தாக்குவதும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் போடப்பட்ட சதித் திட்டம் என்பதை, அப்போது அவருடன் இருந்த எஸ்.திருநாவுக்கரசர் பின்னர் ஒப்புக் கொண்டார். பிற்காலத்தில் சட்டமன்றத்திலேயே இந்தக் காட்சிகளை விவரித்து எஸ்.திருநாவுக்கரசர் பேசிப் பதிவு செய்துள்ளார். எனவே, ‘ஜெயலலிதாவின் நாடகம் இது’ என்பதில் துளியும் மக்களுக்குச் சந்தேகமில்லை.

சம்பவம் நடந்த அன்றே பேட்டி அளித்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள், 'அ.தி.மு.க.வினர் இன்று காலையில் இப்படித் திட்டமிட்டு இருப்பது எங்களுக்குத் தெரிய வந்தது. அதனால் சபையில் எது நடந்தாலும் தி.மு.க. உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கட்டளை யிட்டிருந்தேன்' என்று சொன்னார்கள். 'அரசாங்கத்தைக் கலைக்க நடந்த சதி' என்றே அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பேட்டி அளித்தார்கள்.

சொத்து குவிப்பு வழக்கு: “நான் மைசூர் மகாராஜா குடும்பத்தை சேர்ந்தவள் என்றவர் ஜெ” - அம்பலப்படுத்திய முரசொலி

* இது மட்டுமல்ல; தன்னைக் கொலை செய்ய அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திட்டமிட்டதாகவும் பேட்டி அளித்தார் ஜெயலலிதா. '' மருத்துவமனைக்கு என்னைப் பார்க்க வருபவர்கள் கோவில் பிரசாதமாக சர்க்கரைப் பொங்கலும், கேசரியும் கொடுக்கிறார்கள். அதில் விஷம் இருக்கலாம் என்பதால் நான் எந்தப் பிரசாதத்தையும் சாப்பிடவில்லை" என்று பேட்டி நாடகம் நடத்தியவர்தான் ஜெயலலிதா. 1989 ஏப்ரல் 5 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சினையாகவே கொண்டு வந்து விவாதம் நடந்தது.

* 24.2.1990 அன்று அதிகாலை 5 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே ஜெயலலிதாவின் கார் மீது லாரி ஒன்று மோதியது. இது தற்செயலாக நடந்த விபத்து. பசுமாடு குறுக்கே வர, லாரியைத் திருப்பினார் லாரி டிரைவர். அது ஜெய லலிதாவின் காரில் மோதி விட்டது. ஆனால், அவரது காரை கருப்பு கார் ஒன்று பின்தொடர்ந்து வந்ததாகவும், வயர்லெஸ் மூலமாக ஒரு லாரிக்கு தகவல் சொல்லப்பட்டதாகவும், அந்த லாரி திடீரென வந்து ஜெயலலிதா காரை இரண்டு முறை மோதியதாகவும் கதை சொன்னார்கள். அந்த லாரியில் 'உதயசூரியன்' வரையப்பட்டு இருந்தது என்று சொன்னது தான் ஹைலைட்.

இப்படி மோதும் நோக்கத்தோடு வந்ததாகச் சொல்லப்பட்ட டிரைவர் எங்கும் ஓடவில்லை. அங்கேயே வண்டியை நிறுத்திவிட்டு, வண்டிக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தார். கிளீனரும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். காரில் இருந்தது ஜெயலலிதா என்ற வி.ஐ.பி. என்பதால் டிரைவர் பயந்து போய்விட்டார். அந்த லாரி உரிமையாளருக்குத் தகவல் சொல்லி, அவரும் வந்துவிட்டார். மூவரும் அவர்களாகவே காவல் நிலையத்துக்கு வந்தார்கள். ஜெயலலிதாவின் தாக்குதல் பழி நாடகம், விடிவதற்குள் பல்லிளித்தது.

சொத்து குவிப்பு வழக்கு: “நான் மைசூர் மகாராஜா குடும்பத்தை சேர்ந்தவள் என்றவர் ஜெ” - அம்பலப்படுத்திய முரசொலி

* தி.மு.க. ஆட்சியைக் கலைக்க ‘விடுதலைப்புலிகளுக்கும் தி.மு.க. அரசுக்கும் நேரடித் தொடர்பு’ என்ற பொய்யைக் கிளப்பிக் கலைக்க வைத்தார் ஜெயலலிதா. அதற்காகவே அன்றைய பிரதமர் சந்திரசேகரை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார்.

* ஆளுநர் சென்னா ரெட்டிக்கும் ஜெயலலிதாவுக்குமான மோதல் அனைவரும் அறிந்தது ஆகும். அரசியல் - ஈகோ மோதல் அது. அதற்கு ஜெயலலிதா சொன்ன காரணம்தான் அவரது நாடகத்தன்மை எந்த அளவுக்குப் போகும் என்பதற்கு உதாரணம். '' ஆளுநரைச் சந்திப்பதற்காக ஆளுநர் மாளிகைக்குச் சென்ற என்னிடம் ஆளுநர் சென்னாரெட்டி தவறாக நடந்து கொள்ள முயன்றார்" என்றார் ஜெயலலிதா.

* வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தை பல கோடியில் நடத்திய ஜெயலலிதாதான் அவரை வளர்ப்பு மகனே இல்லை என்றார். 'வளர்ப்பு மகன் திருமணத்துக்கு நான் எதுவும் செலவு செய்யவில்லை' என்று பெங்களூரு நீதிமன்றத்தில் சொன்னார் ஜெயலலிதா.

* கிண்டியில் இருக்கும் பொதுத்துறை நிறுவனமான டான்சியை; தான் பங்குதாரராக இருக்கும் ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ்க்கு வாங்கினார். அரசு பதவியில் இருப்பவர் அரசு நிலத்தைப் பெறக் கூடாது என்பது விதி. வழக்கு வந்ததும், 'அதில் இருப்பது என்னுடைய கையெழுத்தே இல்லை' என்றார்.

* 1996 தேர்தலில் படுதோல்வியை அடைந்தார் ஜெயலலிதா. அவரே தோற்றார்.'தேர்தல் தோல்விக்கு என்ன காரணம்?' என்று கேட்டு தொண்டர்களை கடிதம் எழுதச் சொன்னார். சசிகலா காரணம் என்று பலரும் கடிதம் எழுதினார்கள். உடனே சசிகலாவை நீக்குவதாக அறிவித்தார். 'சில தனிநபர்களை விட கட்சியின் எதிர்காலமே முக்கியம்' என்று அறிக்கை விட்டார். சசிகலா அப்போது சிறையில் இருந்தார். அவரை சிறைக்குள் சென்று பார்த்துவிட்டு வந்துதான் இந்த நாடகத்தை அரங்கேற்றினார் ஜெயலலிதா.

சொத்து குவிப்பு வழக்கு: “நான் மைசூர் மகாராஜா குடும்பத்தை சேர்ந்தவள் என்றவர் ஜெ” - அம்பலப்படுத்திய முரசொலி

1996 செப்டம்பரில் சசிகலாவை நீக்கி அறிக்கை விட்ட ஜெயலலிதா, 1997 ஜூலையில் அறிக்கை விடாமலேயே சேர்த்துக் கொண்டார். பத்து மாத நாடகம் முடிந்தது. சிறையில் இருந்து ஜாமீன் வாங்கிவிட்டு வெளியில் வந்த சசிகலா, நேராக போயஸ் கார்டன் வந்தார். அவரை வாசலில் நின்று தட்டு வைத்து ஆரத்தி காட்டி வரவேற்றார் ஜெயலலிதா.

* தனக்கு எதிராக பெங்களூரில் உட்கார்ந்து பேசியதாக சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் 2012 இல் நீக்கினார் ஜெயலலிதா. மூன்றே மாதத்தில் சசிகலாவை மட்டும் போயஸ் கார்டனில் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா.

* 1991 ஆம் ஆண்டு 2 கோடியாக இருந்த ஜெயலலிதாவின் சொத்து, ஐந்தே ஆண்டுகளில் 66 கோடியாக உயர்ந்ததுதான் அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஆகும். பெங்களூரு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. 'நான் மைசூர் மகாராஜா குடும்பத்தைச் சேர்ந்தவள். இவை பரம்பரைப் பணம்' என்று சொன்னார் ஜெயலலிதா.

* 23 கிலோ தங்கம், 125 கிராம் வைரம், 1,116 கிலோ வெள்ளி ஆகியவை அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. ‘இவை எதுவும் தன் நகை அல்ல’ என்றார். ‘விசாரணை அதிகாரியான நல்லமநாயுடு, கொண்டுவந்து வைத்த நகை இது’ என்று சொன்னவர்தான் ஜெயலலிதா.

* ‘சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தெரியாது’ என்றும் சொன்னவர் ஜெயலலிதா. இதனை நீதிபதி ஏற்கவில்லை. 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதிப்படுத்தினார்.

- இப்படி மொத்தமாகவே நாடகங்களுக்கு மேல் நாடகங்கள் நடத்தியவர்தான் ஜெயலலிதா. எனவே, நிர்மலா சீதாராமன்கள் எச்சரிக்கையுடன் பேச வேண்டும். ஜெயலலிதாவைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் பேச வேண்டாம்!

banner

Related Stories

Related Stories