முரசொலி தலையங்கம்

ஒடிசா விபத்து- உதவுவதில் திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது -முரசொலி புகழாரம் !

ஒடிசா விபத்து- உதவுவதில் திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது -முரசொலி புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (07-06-23)

ஒடிசா விபத்தும் தமிழ்நாடு அரசும் –2

......

மாபெரும் விபத்து நடந்துள்ளது, இந்த நேரத்தில் ஒடிசா மாநில அரசுக்கு மீட்புப் பணிகளுக்கு உதவ வேண்டும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விபத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களை உடனடியாக மீட்டு அழைத்து வர வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துடிதுடிப்பையே இவை அனைத்தும் காட்டுகிறது. ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு இரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளது பட்டியல் தென்னக இரயில்வேயிலிருந்து பெறப்பட்டு அதில் தமிழ்ப்பெயர் கொண்டவர்களையும், தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்துள்ள 127 நபர்களது பட்டியலை தமிழ்நாடு அரசு தயாரித்தது. தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 127 நபர்களை மாநில அவசரகால செயல் பாட்டு மையத்திலிருந்து தொடர்பு கொள்ளப்பட்டதில், 119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது. எஞ்சிய 8 நபர்களது செல்பேசி மற்றும் முகவரி இல்லாததால் தேடுதல் தொடர்ந்தது. இந்த தகவல்களை வைத்து ஒடிசா சென்ற தமிழ்நாடு அரசு குழு ஆய்வுகளை மேற்கொண்டது.

4 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் ஒடிசாவிலிருந்து சிறப்பு இரயில் மூலம் 137 பயணிகள் சென்னை வருகை தந்தனர். இவர்களை இரயில் நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட உயரதிகாரிகள் வரவேற்றார்கள். வருகை தந்த பயணிகளுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. இவர்களில் 36 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 34 பயணிகள் இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். அனுப்பி வைக்கப்பட்ட இவர்களில் 3 பயணிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற பயணிகள் சிறு சிகிச்சைக்குப் பிறகு அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒடிசா விபத்து- உதவுவதில் திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது -முரசொலி புகழாரம் !

ஒடிசா மாநிலத்தில் இருந்து வருகிற பயணிகளுக்குத் தேவையான பரிசோதனை மற்றும் மேல் சிகிச்சை மேற்கொள்ள 30 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிக்கென அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 7 பேருந்துகளும், காவல் துறை மூலம் 50 டாக்ஸிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக 10 அவசரகால ஊர்திகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரயில் நிலையத்தில் வீல் சேர், ஸ்டிரெச்சர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள், வருகின்ற பயணிகளுக்குத் தேவையான உதவிகள் செய்திட பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

4 ஆம் தேதி மாலையில்தான் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் சென்னை திரும்பினார்கள். '' நாங்கள் நேரடியாக சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அருகில் இருக்கின்ற மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் அனுமதிக்கப்பட வில்லை. அதன் பிறகு உடல்கள் ஏதாவது வைக்கப் பட்டிருக்கிறதா என்று பிணவறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேயும் நாங்கள் சென்று விசாரித்தோம். அங்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் வைக்கப்படவில்லை. அதன் பிறகு அங்கிருக்கக்கூடிய அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் பாதிக்கப்பட வில்லை என்று அதிகாரிகள் சொன்னார்கள். ஒடிசா அரசால் வைக்கப்பட்ட அழைப்பு மையத்துக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைக் காணவில்லை என்பது மாதிரியான அழைப்புகள் வரவில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டோம். 8 பேரை மட்டும் தொடர்பு கொள்ள முடியாமல் முதலில் இருந்தது. அதில் 2 பேர் பின்னர் தொடர்புக்கு வந்துவிட்டார்கள். ஜெகதீசன் என்பவரிடம் நாங்களே பேசிவிட்டோம். மற்ற ஆறு பேர் பயணித்த பெட்டி எண். D3, D4, D7, D9, S1, S2 ஆகியவற்றில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு எதுவும் கிடையாது. இது உடனிருந்த பயணிகள் கொடுத்திருக்கக்கூடிய செய்தி. நம்முடைய அரசு அதிகாரிகள் இன்னும் அங்குதான் தங்கியிருக்கிறார்கள்" –என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை விமானநிலையத்தில் அறிவித்தார்கள்.உடனடியாக அவர்கள் இருவரும் முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து ஒடிசா நிலவரங்களை முழுமையாக விளக்கினார்கள்.

ஒடிசா விபத்து- உதவுவதில் திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது -முரசொலி புகழாரம் !

''இரண்டு நாட்களாக அங்கே தங்கி இருந்து மருத்துவமனையில் பலியானோர் வைக்கப்பட்டிருந்த வளாகம் அனைத்தையும் பார்த்தோம். ஒடிசா அரசுடனும் முழுமையாக ஆலோசனை நடத்தினோம். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட தாக இதுவரை தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்கும் தங்களது உறவினரையோ நண்பர்களையோ தொடர்பு கொள்ள முடியவில்லை என யாரும் தகவல் தெரிவிக்கவில்லை" –என்று அமைச்சர்கள் இருவரும் முதலமைச்சர் அவர்களுக்கு விளக்கம் அளித்தார்கள்.

2 ஆம் தேதி இரவு முதல் 4 ஆம் தேதி மாலை வரையிலான 48 மணி நேரமும் முதலமைச்சர் அவர்கள், ஒடிசா நிலவரம் பற்றிய சிந்தனையிலேயே இருந்தார்கள். மக்களைக் காக்கும் அரசும், ஒரு முதலமைச்சரும் எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்பட்டார்கள். ஏதோ ஒடிசாவில்தானே நடந்தது என்று இருக்கவில்லை. தமிழ்நாட்டில் இப்படி ஒரு பாதிப்பு நடந்திருந்தால் எப்படிச் செயல்பட்டிருப்போமோ அப்படிச் செயல்பட்டார் முதலமைச்சர் அவர்கள். தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளைக் கூட தள்ளி வைத்துவிட்டு ஒடிசா துயர் துடைப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் முதலமைச்சர் அவர்கள். இதுவே மக்களாட்சியின் இலக்கணம் ஆகும். இதுவே முதலமைச்சரின் இலக்கணம் ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களுக்காகத் துடிப்பதும், வேறொரு மாநிலமாகவே இருந்தாலும் வேற்றுமை பார்க்காமல் உதவுவதுமான அறநெறிகளுக்கு திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக தலைநிமிர்ந்து காட்சி அளிக்கிறது. ஆபத்து காலத்திலேயே அறநெறிகள் அடையாளம் காணப்படும் என்பதற்கு உதாரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்...

banner

Related Stories

Related Stories