முரசொலி தலையங்கம்

தேர்தல் அரசியலுக்காக சமூகநீதியை காவு கொடுக்கும் பா.ஜ.க.. இடஒதுக்கீட்டை சின்னாபின்னம் ஆக்கிய கர்நாடக அரசு!

கர்நாடகா தேர்தல் அரசியலுக்காக சமூகநீதியைச் சந்திசிரிக்க வைத்துள்ளது பா.ஜ.க. இதுவரை இருந்த இடஒதுக்கீடுகளை அரசியல் லாபங்களுக்காக பிரித்து சின்னாபின்னம் ஆக்கி இருக்கிறார்கள்.

தேர்தல் அரசியலுக்காக சமூகநீதியை காவு கொடுக்கும் பா.ஜ.க.. இடஒதுக்கீட்டை சின்னாபின்னம் ஆக்கிய கர்நாடக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பழுதுபட்ட சோஷியல் இன்ஜினியரிங்!

கர்நாடகா தேர்தல் அரசியலுக்காக சமூகநீதியைச் சந்திசிரிக்க வைத்துள்ளது பா.ஜ.க. இதுவரை இருந்த இடஒதுக்கீடுகளை அரசியல் லாபங்களுக்காக பிரித்து சின்னாபின்னம் ஆக்கி இருக்கிறார்கள். சாதியின் பேரால் ஒடுக்கப்பட்டவர்கள், மதரீதியாக சிறுபான்மையினர்கள், எனப் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பவர்கள், பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதவர்கள் என்று பிரித்து இடஒதுக்கீட்டைக் கொடுத்ததன் விளைவு, கர்நாடக மாநிலமே கொந்தளித்துக் கிடக்கிறது.

2பி - நிலையில் உள்ள மதச் சிறுபான்மையினருக்கான (முஸ்லிம்) இடஒதுக்கீட்டை கர்நாடக பா.ஜ.க. அரசு நீக்கிவிட்டது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம் மக்களுக்கு இதுவரை 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அதனை மொத்தமாக நீக்கிவிட்டார்கள். இனி இசுலாமியர்கள், கர்நாடகாவைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்க மாட்டார்கள்.

தேர்தல் அரசியலுக்காக சமூகநீதியை காவு கொடுக்கும் பா.ஜ.க.. இடஒதுக்கீட்டை சின்னாபின்னம் ஆக்கிய கர்நாடக அரசு!

அவர்களை, மொத்தமாகக் கொண்டு போய் ‘பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதி ஏழைகளுக்கான’ (EWS) – பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். ஒரே நாளில் அனைத்து இசுலாமியர்களையும் உயர் ஜாதியாக ஆக்கி விட்டார்கள். உயர் ஜாதியினருடன் இனி இசுலாமியர்கள் போட்டியிட வேண்டும். கேட்டால், ‘மதரீதியான இடஒதுக்கீடு கிடையாது’ என்கிறார் பா.ஜ.க. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை. ‘இசுலாமியர் அனைவரும் EWS - பட்டியலுக்குப் போவார்கள் என்பதே மதரீதியான இடஒதுக்கீடுதானே? ஒரு குறிப்பிட்ட மக்கள் அனைவரையும் இன்னொரு இடஒதுக்கீடு பட்டியலில் சேர்ப்பது இடஒதுக்கீடு ஆகாதா?

இசுலாமியர்கள், பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கப் போவது இல்லை. அப்படியானால் அவர்களுக்கு எதற்காக தனியாக 4 விழுக்காடு இடஒதுக்கீடு என்று சொல்லி அதனை மொத்தமாகக் காலி செய்துவிட்டார்கள். கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த பா.ஜ.க. செயற்குழுவில் பிரதமர் மோடி என்ன பேசினார்?

‘’Reach out to minorities, marginalised, India’s best era coming” என்று பிரதமர் மோடி பேசினாரே! ‘இந்தியாவுக்கு சிறப்பான சகாப்தம் வரப்போகிறது” என்று சிறுபான்மையினரிடம் சொல்லச் சொல்லி இருந்தாரே? ‘’In his address to the BJP national executive, Modi asked party workers to reach out to Pasmandas, Bohras, Muslim professionals and educated Muslims, without expecting votes in return, said a source present at the meeting. “The call was mainly to build confidence among these communities,” என்று ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு இருந்ததே?

தேர்தல் அரசியலுக்காக சமூகநீதியை காவு கொடுக்கும் பா.ஜ.க.. இடஒதுக்கீட்டை சின்னாபின்னம் ஆக்கிய கர்நாடக அரசு!

மோடியின் உரை குறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் நாம் உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டும்’ என்று பிரதமர் கூறியதாகச் சொன்னார் ‘‘அவ்வாறு செய்யும் போது, வாக்குகளைப் பற்றி மட்டும் நாம் சிந்திக்கத் தேவையில்லை, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்காகவும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்” என்று பிரதமர் சொன்னதாகச் சொல்லி இருந்தாரே? இவை அனைத்தும் கர்நாடகாவில் காற்றில் பறந்து விட்டது ஏன்?

இசுலாமியர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட 4 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை என்ன செய்தார்கள் தெரியுமா? கர்நாடகாவைப் பொறுத்தவரையில் முக்கியமான சமூகப் பிரிவுகளாக இருக்கும் லிங்காயத்துகள், ஒக்கலிகா கவுடாக்கள் ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு தலா 2 விழுக்காடு எனக் கொடுத்துவிட்டார்கள். இவர்கள்தான் கர்நாடகா தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பவர்கள். இதனை விட ஆதாய அரசியல் செயல்பாடு இருக்க முடியுமா? இந்த அடிப்படையில் ஒக்கலியர் இடஒதுக்கீடு 6 விழுக்காடாகவும், லிங்காயத்துகள் ஒதுக்கீடு 7 விழுக்காடாகவும் உயர்ந்துவிட்டது. இதனை தனது சாதனையாக பா.ஜ.க. சொல்லிக் கொள்கிறது.

மதச்சிறுபான்மையினரான இசுலாமியர்களையும் -– சமூகப் பிரிவுகளான இரண்டு ஜாதியினரையும் எதிரெதிராக நிறுத்திவிட்டது பா.ஜ.க. ‘இசுலாமியர்களிடம் இருந்து பறித்து உங்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி இருக்கிறோம்’ என்று மார்தட்டுகிறது பா.ஜ.க. அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. ‘இசுலாமியர்களிடம் இருந்து பறித்து எங்களுக்குத் தருவதை ஏற்கமாட்டோம். இது எங்கள் இருவருக்கும் சண்டை மூட்டும் முயற்சி’ என்று லிங்காயத்து மக்கள் சொல்லி வருகிறார்கள். ‘தங்களுக்கான தனி இடஒதுக்கீடாக 15 விழுக்காடு தர வேண்டும் என்று கேட்டு வந்தோம். ஆனால் ஏமாற்றி விட்டது பா.ஜ.க.’ என்று அவர்கள் சொல்லி வருகிறார்கள்.

தேர்தல் அரசியலுக்காக சமூகநீதியை காவு கொடுக்கும் பா.ஜ.க.. இடஒதுக்கீட்டை சின்னாபின்னம் ஆக்கிய கர்நாடக அரசு!

இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடான 3பி- இல் இருந்து தங்களை மாற்றி 2 ஏ-க்குள் கொண்டு வரவேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. ஆனால் இசுலாமியரிடம் இருந்த 2 விழுக்காட்டை எடுத்து இவர்களுக்குக் கொடுத்து சமாளிக்கப் பார்த்தது பா.ஜ.க. அதனால் அம்பலப்பட்டு நிற்கிறது. லிங்காயத்துகளின் கோபம் பா.ஜ.க. மீது அதிகமாகி உள்ளதுதான் உண்மை.

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை மாற்றி அமைத்தது போலவே பட்டியலின மக்கள் இடஒதுக்கீட்டிலும் தனது விளையாட்டைக் காட்டியது கர்நாடக பா.ஜ.க.

பட்டியலின இடஒதுக்கீட்டை 15 இல் இருந்து 17 விழுக்காடாகவும், பழங்குடி இடஒதுக்கீட்டை 3 இல் இருந்து 7 ஆகவும் உயர்த்தி இருக்கிறார்கள். பட்டியல் பிரிவினரில் செய்யப்பட்ட உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பஞ்சாரா சமூக மக்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது இதனால்தான். ‘’இந்தப் பிரச்சினையை விரைவில் நானே தீர்த்து வைப்பேன்” என்று எடியூரப்பா சொன்னாலும் அதனை யாரும் ஏற்கத் தயாராக இல்லை.

* இசுலாமியர் இடஒதுக்கீடு பறிப்பு

* மதச்சிறுபான்மையினரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரையும் மோத விடும் போக்கு

* பட்டியலின மக்களுக்குள் ஏற்படுத்திய பாகுபாடுகள் - இவை அனைத்தும் கர்நாடக தேர்தல் அரசியல் லாபத்துக்காகச் செய்யப்படுபவை என்பதை அந்த மாநிலத்து மக்கள் நன்கு அறிவார்கள். மக்களை மோதவிட்டுக் குளிர்காய்வதுதான் பா.ஜ.க.வின் ‘சோஷியல் இன்ஜினியரிங்’. அந்த இயந்திரம் பழுதுபட்டு விட்டது என்பதைத்தான் கர்நாடகா காட்டுகிறது!

banner

Related Stories

Related Stories