முரசொலி தலையங்கம்

"உங்களை விட இந்தியாவை பற்றி காரல் மார்க்ஸுக்கு நன்கு தெரியும்".. ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்த முரசொலி!

நிர்மலா சீதாராமன்களும், அதானிகளும், மோகன் பகவத்களும் இருக்கும் வரை மார்க்ஸை புறந்தள்ள முடியாது.

"உங்களை விட இந்தியாவை பற்றி காரல் மார்க்ஸுக்கு நன்கு தெரியும்".. ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்த முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (24-02-2023)

இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்

இந்தியாவில் பிறந்த ஆர்.என்.இரவியை விட, இந்தியாவில் பிறக்காத கார்ல் மார்க்ஸுக்கு இந்தியாவைப் பற்றி நன்கு தெரியும். ஏனென்றால் மனித மனத்துக்கு அடிப்படையான அறம், மார்க்ஸ் மனதில் இருந்தது. அதனால் இந்தியாவை நன்கு புரிந்து கொண்டார். 200 ஆண்டுகளுக்கு முன்பே மார்க்ஸ் புரிந்து கொண்டார்.

‘’கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூகக் கோட்பாடுகளைச் சிதைக்க வேண்டும் என்று கட்டுரை எழுதி இருக்கிறார். கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவைச் சிதைத்தது. இதனால் இன்று மார்க்சின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது” - என்று கிண்டி ‘ராஜ்பவனை’ ஆர்.எஸ்.எஸ். இன்ஸ்டிடியூட் ஆக ஆக்கிக் கொண்டிருக்கும் ஆளுநர் ரவி சொல்கிறார். இந்தியாவின் சமூகக் கோட்பாடு என்ன என்பதைச் சொன்னால், எதனைச் சிதைத்தார் மார்க்ஸ் என விளக்கம் அளிக்க முடியும்.

ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் வெளியிடும் துண்டுப் பிரசுரங்களின் பின்னட்டைக் குறிப்புகளை வைத்துக் கொண்டு நித்தமும் ஏதேதோ பேசிவருகிறார் ஆளுநர். இவருக்கு இந்தியாவைப் பற்றியும் தெரியவில்லை, மார்க்ஸைப் பற்றியும் தெரியவில்லை. இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் எழுதிய குறிப்புகளை முழுமையாக அறிந்திருந்தால் அவர் இப்படிப் பேசி இருக்க மாட்டார்.

"உங்களை விட இந்தியாவை பற்றி காரல் மார்க்ஸுக்கு நன்கு தெரியும்".. ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்த முரசொலி!

முதலில் ஜெர்மனியில் இருந்தும், பின்னர் பிரான்சில் இருந்தும் நாடு கடத்தப்பட்ட மார்க்ஸ், 1849 ஆம் ஆண்டு இலண்டனுக்குப் புகலிடம் தேடி வந்து சேர்ந்தார். வறுமை சூழ்ந்த வாழ்க்கைதான் அவருக்கு வாய்த்தது. இவரது மூன்று குழந்தைகளும் இறந்ததும் இங்குதான். மான்செஸ்டர் நூற்பாலையில் வேலைக்குச் சேர்ந்ததால் சிறிதளவு ஊதியம் கிடைத்தது. அந்தச் சூழலிலும் தனது ஆய்வுகளை நிறுத்தவில்லை. இலண்டன் இருப்பு என்பது அவருக்குப் பிரிட்டிஷ் சமூகத்தை மட்டுமல்ல, அன்றைய காலத்தில் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த இந்தியாவைப் பற்றியும் அறிந்து கொள்ளத் தூண்டியது.

தொழில் உற்பத்தி, பொருள் உற்பத்தி மையமாக இங்கிலாந்து இருப்பதைப் பார்க்கிறார். இதற்கு இங்கிலாந்து தனது காலனிய நாடுகளை எப்படி பயன்படுத்திக் கொள்கிறது, எப்படி உழைப்பைச் சுரண்டுகிறது என்பதையும் பார்க்கிறார். இதனைப் பற்றி அதிகம் எழுதுகிறார். இந்தியச் சமூகவியல் வரலாறு குறித்து எழுதத் தொடங்குகிறார். இதனை, ‘ஆசிய உற்பத்தி முறை’ என்கிறார். பெருந்திரளான இந்திய மக்கள் கடினமாக உழைக்கக் கூடியவர்களாக இருப்பதாக மார்க்ஸ் எழுதினார். இந்தியாவின் சமூக அமைப்பு என்பது வணிக வர்க்கம், கீழ்நிலை வர்க்கங்கள், தீண்டத்தகாதவர்கள் என பிளவுபட்டு இருப்பதாகவும் மார்க்ஸ் எழுதினார். இப்படி ‘பிளவுபடுத்தியவர்’ மார்க்ஸ் அல்ல. அப்படி பிளவுபடுத்தப்பட்டு இந்தியா இருக்கிறது என்று ‘சொன்னவர்’ மார்க்ஸ்.

சாதி அடிப்படையிலான உழைப்புப் பிரிவினை இருப்பதன் காரணமாக இந்தியக் கிராமங்கள் கட்டமைப்பு ரீதியாக ஜனநாயகத் தன்மை கொண்டவை அல்ல -என்றும் மார்க்ஸ் கணித்தார். இன்றைக்கும் இந்தியக் கிராமங்கள் ஜாதிய மேலாண்மை கொண்டவைகளாகவே இருக்கின்றன. அங்கு ஜனநாயகம் என்பது - தந்தை பெரியாரின் சொல்லில் சொல்வதாக இருந்தால் - ‘ஜாதிநாயகம்’ ஆகத்தான் இருக்கிறது. இதனைக் கண்டித்துத்தான் மார்க்ஸ் எழுதி இருக்கிறாரே தவிர, வேறல்ல. ஆர்.என்.ரவி சொல்லும் இந்திய சமூகக் கோட்பாடு என்பது சாதியக் கோட்பாடாக இருப்பதால் அதனைக் கண்டிக்கிறார் மார்க்ஸ்.

"உங்களை விட இந்தியாவை பற்றி காரல் மார்க்ஸுக்கு நன்கு தெரியும்".. ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்த முரசொலி!

பிரிட்டிஷார் போய் - 75 ஆண்டுகளுக்குப் பின்னால் பிரிட்டிஷார் மீது காற்றில் படையெடுப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார் ஆளுநர். ஆனால், பிரிட்டிஷாரின் இந்தியக் காலனியாதிக்கம் குறித்து – அதே காலத்தில் – அதுவும் இலண்டனில் இருந்து கொண்டே எழுதியவர் மார்க்ஸ். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் குறித்து 1853 ஆம் ஆண்டே கண்டனம் தெரிவித்து மார்க்ஸ் எழுதி இருக்கிறார். ‘பிரிட்டிஷாரால் இந்துஸ்தானத்துக்கு ஏற்பட்டிருக்கும் துன்பதுயரம், அது முன்பு அனுபவித்த வேதனையின் சாராம்சத்தில் இருந்து மாறுபட்டதாகவும், அதைவிடப் பன்மடங்கு கொடியதாகவும் இருக்கிறது’ என்று எழுதியவர் அவர். ‘பிரிட்டிஷாரின் அடக்கு முறையின் காரணமாக இந்திய மக்கள் ஒற்றுமையுடன் போராட ஒரு பாதையையும் மறைமுகமாக பிரிட்டிஷார் ஏற்படுத்தி விட்டார்கள்’ என்றும் மார்க்ஸ் எழுதினார். அதுதான் 1857 -– புரட்சியாக வெளிப்பட்டது.

‘இந்தியக் கிராம சமூக அமைப்பு என்பது சாதி வேற்றுமையாலும், அடிமை முறையினாலும் கெட்டிருந்தன என்பதையும், மனிதனை புறநிலைமைகளுக்கு எஜமானன் ஆக்குவதற்குப் பதிலாக அவனை சாதிக்கு அடிமை ஆக்கின’ – என்று எழுதியவர் மார்க்ஸ். இதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஆசிய சமுதாயத்தை பிரிட்டிஷ் ஆட்சி அழிக்கவும் நினைக்கிறது, நவீன மாற்றங்களை தனது முதலாளித்துவத் தேவைகளுக்காக புகுத்தவும் நினைக்கிறது என்று மார்க்ஸ் கருதினார். ஆசிய சமுகம் என்பதை இதன் புராதன காலத்துக்குத் திரும்புவது அல்ல என்றும், நவீனத்துவத்தின் சாதனைகளை முதலாளித்துவம் பயன்படுத்திக் கொள்வதே என்றும் தெளிவுபடுத்தினார் மார்க்ஸ். ‘தீர்க்க முடியாத முரண்பாடுகள், இனங்கள், பழங்குடி மக்கள், சாதி சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பூகோள ஒற்றுமையைத்தான் இந்தியா என்கிறோம்” என்று எழுதி இருக்கிறார் மார்க்ஸ். இவையெல்லாம் மார்க்ஸ் எழுதிய பலநூறு பக்கங்களில் விரிவாக இருக்கின்றன. இதனைப் படித்துவிட்டு மார்க்ஸ் குறித்து கருத்துச் சொல்ல வேண்டும்.

"உங்களை விட இந்தியாவை பற்றி காரல் மார்க்ஸுக்கு நன்கு தெரியும்".. ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்த முரசொலி!

திடீரென மார்க்ஸ் மீது பாய்வானேன்? அரசியலைப் பகுப்பாய்வு செய்ய இன்று மார்க்ஸ் பயன்படுவதால்தான். அதானி விவகாரம் வெளிப்படுகிறது என்றால் அது பொருளாதாரச் சுரண்டலாகப் பார்க்கப்படுகிறது. மதவாதம் தலைதூக்கும் போது, ‘மதம் மனிதனுக்கு அபின்’ என்ற மார்க்ஸ் முன்னுக்கு வருகிறார். ஜாதியும் தீண்டாமையும் நிலப்பிரபுத்துவ - வர்ணாசிரமக் கோட்பாடுகளாக வரையறுக்க மார்க்ஸ் கண் திறக்கிறார். தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கரைப் போல கார்ல் மார்க்ஸும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்குக் கசப்பாக இருக்கிறது. பிற மதத்தவர்க்கு அடுத்து கம்யூனிஸ்ட்டு களையே தங்களது எதிரியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடக்க காலத்தில் வரையறுத்தார்கள். நிர்மலா சீதாராமன்களும், அதானிகளும், மோகன் பகவத்களும் இருக்கும் வரை மார்க்ஸை புறந்தள்ள முடியாது.

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்து, தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களைச் சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி என்பதுதான் உண்மை. இவரது சிந்தனை தமிழ்நாட்டைச் சிதைக்க முயற்சிக்கிறது. இதனை தமிழ்நாட்டு மக்கள் பொருட்படுத்துவதே இல்லை என்பதுதான் பேருண்மை.

banner

Related Stories

Related Stories