முரசொலி தலையங்கம்

ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் ஆளுநரின் செயல்.. கடுமையாக சாடிய பத்திரிக்கைகள்: பட்டியலிட்ட முரசொலி!

தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது மோசமானதும் அசிங்கமானதும் ஆகும் என ‘தி இந்து’ நாளிதழ் தலையங்கம் தீட்டி உள்ளது.

ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் ஆளுநரின் செயல்.. கடுமையாக சாடிய பத்திரிக்கைகள்: பட்டியலிட்ட முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (13.01.2023)

எல்லோராலும் எதிர்க்கப்பட்ட ஆளுநர்!

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக அனைவரது எதிர்ப்பையும் வாங்கிக் கொண்டு விட்டார் ஆளுநர் ஆர்.என்.இரவி. தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் நடந்து கொண்ட விதத்தை ஆங்கில நாளிதழ்களான தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் ஹெரால்ட் ஆகிய அனைத்துப் பத்திரிக்கைகளும் கண்டித்து தலையங்கம் தீட்டி உள்ளன.

தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது மோசமானதும் அசிங்கமானதும் ஆகும் என ‘தி இந்து’ நாளிதழ் தலையங்கம் தீட்டி உள்ளது. ‘Bad and ugly’ என்ற தலைப்பிலேயே எல்லாம் அடங்கிவிட்டது.

‘விரும்பத்தகாத நிகழ்வுகள் தானாகவே நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும்’ என்ற சொற்களுடன் தொடங்கும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் தலையங்கம், ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார் என்றும், சட்டமன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியே ஆளுநர் உரை என்பதை மறந்துவிட்டு, தி.மு.க. மீதான தனது வெறுப்புணர்வை ஆளுநர் சட்டமன்றத்திற்கும் கொண்டு சென்றது கெடுவாய்ப்பானது என்றும் ‘தி இந்து’ தலையங்கம் தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் ஆளுநரின் செயல்.. கடுமையாக சாடிய பத்திரிக்கைகள்: பட்டியலிட்ட முரசொலி!

அரசியல் சட்டம் மற்றும் மரபுகளின்படி, குடியரசுத் தலைவரோ, ஆளுநர்களோ அரசுகள் தயாரித்து தரும் உரையில் இருந்து விலகக்கூடாது, ஏனெனில் இந்த உரைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் கொள்கை அறிக்கை என்றும் தெரிவித்துள்ள ‘தி இந்து’ நாளிதழ், மாநில உணர்வுகளுக்கு எதிரான மற்றும் அரசியல் ரீதியான பேச்சுக்களை ஆளுநர் நிறுத்திக் கொண்டால், இதுபோன்ற மோதல் போக்குகளை வருங்காலங்களில் தவிர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. அரசியல் சட்டத்தின் நீண்ட கால கண்ணோட்டத்தில் ஆளுநர்களின் பங்களிப்பு குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இதன் மூலம் ராஜ்பவன்களில் குடியிருப்பவர்கள், தங்களின் அரசியல் மேலாதிக்க உணர்வுகளை கைவிட்டு விட்டு, சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது போன்ற முக்கிய அரசியலமைப்பு கடமைகளை மட்டுமே செய்யும் நிலை ஏற்பட வேண்டும் என்றும் ‘தி இந்து’ தலையங்கத்தில் கண்டிக்கப்பட்டுள்ளது.

‘‘சுதந்திர இந்திய வரலாற்றில், ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தின் தொடக்கமான ஆளுநர் உரையின் போது வெளிநடப்பு செய்த முதல் ஆளுநர் என்ற அவப்பெயரை ஆர்.என்.ரவி பெற்றுள்ளார்” என்று டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

2021 செப்டம்பர் மாதம் ஆளுநராகப் பதவியேற்ற ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தி.மு.க.வுடன் கருத்தியல் மற்றும் அரசியல் ரீதியாக அடாவடித்தனமான மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதாகவும், மே 2021 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், ஆளுநர் ரவி, தாம் ஒரு நியமனப் பதவியில் உள்ளதை மறந்து, ஒவ்வொரு கட்டத்திலும், மாநில மக்களின் நீண்டகால நம்பிக்கைகள் மற்றும் அரசியல் சித்தாந்தங்களுக்கு எதிராக பேசி வருவதாகவும் சொல்லி இருக்கிறது.

ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் ஆளுநரின் செயல்.. கடுமையாக சாடிய பத்திரிக்கைகள்: பட்டியலிட்ட முரசொலி!

சட்டப்பேரவை விதிகள் மற்றும் மரபுகளை மீறி செயல்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடந்து கொண்டதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு ஆளுநரால் மக்களின் விருப்பத்தை முறியடிக்க முடியுமானால், அது ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் செயலாகவே கருதப்படும் என்றும் இக்கட்டுரை கடுமையாக விமர்சித்துள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசின் ஆத்திரமூட்டும் ஏஜென்டாக செயல்படுவதாக ‘டெக்கான் ஹெரால்ட்’ நாளிதழ் விமர்சித்துள்ளது.

மாநில அரசின் கருத்துகளையும் கொள்கைகளையும் வகுத்துரைக்கும் உரையில் சேர்க்கவோ, குறைக்கவோ ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்பது விதிகளில் தெளிவாக உள்ளதாகவும், ஆளுநர் ரவி முன்னெப்போதும் இல்லாத வகையில் சில வார்த்தைகளை தனது உரையில் சேர்த்துள்ளது மிகவும் தவறானது என்றும் ஆளுநர்களுக்கு சுதந்திரமான அதிகாரங்கள் இல்லை, மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் விருப்பத்திற்கு கட்டுப்பட வேண்டும். ஆனால், பா.ஜ.க. அல்லாத ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள் தங்கள் அரசுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதும், நிர்வாகத்தில் தலையிடுவதும், அதிகரித்து வருவதாகவும், ஒன்றிய அரசின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்த ஆளுநர்கள் போட்டி போடுவது போல் உள்ளதாகவும் விமர்சித்துள்ள டெக்கான் ஹெரால்ட், ஆர்.என்.ரவி உள்ளிட்ட சில ஆளுநர்கள் சட்டப்பேரவைகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுத்து, நியாயமற்ற முறையில் நடந்துகொண்டுள்ளதாகவும், அரசியல் சட்டத்தின் இன்றியமையாத அம்சமான கூட்டாட்சி முறைக்கு இந்த ஆளுநர்கள் பெரும் தீங்கு செய்வதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களுக்கு, அரசுகளுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ள டெக்கான் ஹெரால்ட்,

தனது எஜமானர்களின் அரசியல் விருப்பங்களை மாநிலங்கள் மீது திணிக்க முயற்சிக்கிறார் என்றும் ஒன்றிய அரசின் ஆத்திரமூட்டும் ஏஜென்டாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும், அவரைப் போன்ற ஆளுநர்களின் கருத்துகளும், நடத்தைகளும் நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எந்த நன்மையும் செய்யாது என்றும், ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்ப அழைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவையில் நடந்து கொண்ட விதம் அவரது பதவிக்கு உகந்தது அல்ல என ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்’ விமர்சித்துள்ளது.

ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் ஆளுநரின் செயல்.. கடுமையாக சாடிய பத்திரிக்கைகள்: பட்டியலிட்ட முரசொலி!

தமிழ்நாடு அரசின் நீட் தேர்வு எதிர்ப்பை ஆளுநர் அங்கீகரிக்க மறுக்கிறார். அத்துடன் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவற்றை கிடப்பில் போட்டுள்ளார். இதனால் அவர் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்ற தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார் என்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்நாட்டை தமிழகம் என ஆளுநர் கூறியதை சுட்டிக்காட்டியுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு என்ற பெயருக்கு தனித்த சிறப்பும் பின்னணியும் உள்ளது எனக் கூறியுள்ளது.

ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு ஒன்றிய அரசு நேரடியாகப் பொறுப்பேற்காது என்றாலும், தற்போதைய நிகழ்வுகள் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசுக்கு எதிரான உணர்வுகளை வலுப்படுத்துவதில்தான் முடிவடையும் என்றும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ எச்சரித்துள்ளது.

இப்படி எல்லோரும் எதிர்க்கப்பட்ட ஆளுநராக ஆர்.என். இரவி ஆகிவிட்டார்.

banner

Related Stories

Related Stories