முரசொலி தலையங்கம்

சேது சமுத்திரத் திட்டம்: அடிப்படை அறிவு கூட இல்லாமல் அறிக்கை விடலாமா 'அரைகுறை' அண்ணாமலை? - முரசொலி!

2002 ஆம் ஆண்டு பா.ஜ.க.வுக்குத் தெரியாத இராமர் பாலம், அவர்கள் ஆட்சி முடிந்து காங்கிரசு – தி.மு.க. கூட்டணி ஆட்சிக் காலத்தில் மட்டுமே தெரிந்தது எப்படி? இந்த அரசியல்தான் கேவலமானது!

சேது சமுத்திரத் திட்டம்: அடிப்படை அறிவு கூட இல்லாமல் அறிக்கை விடலாமா 'அரைகுறை' அண்ணாமலை? - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (10-01-2023)

அரைகுறைக்குத் தெரியாது!

சேது சமுத்திரத் திட்டம் குறித்து ‘அரைகுறை’ அண்ணாமலை பேசி இருக்கிறார். சொந்தக் கட்சிக்குள் பல்வேறு ஆடியோ -– - வீடியோ சிக்கலில் சிக்கி முழி பிதுங்கிக் கிடக்கும் அண்ணாமலைக்கு தான் என்ன அறிக்கை விடுகிறோம் என்பதே தெரியவில்லை போலும்! ‘‘இந்தியாவின் பாரம்பர்ய நம்பிக்கையான ராமர் பாலத்தை இடித்து, அங்கே அறிவியல் சாத்தியமில்லாத நீர் வழித்தடத்தை உருவாக்க நினைத்தார்கள்” என்று சொல்லி இருக்கிறார் ‘அரைகுறை’ அண்ணாமலை. அப்படி ஒரு பாலமே இல்லை என்பதை பா.ஜ.க. அமைச்சரே சொல்லி இருப்பது அவருக்குத் தெரியுமா?

மாநிலங்களவையில் கார்த்திகேய சர்மா என்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்த விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘‘18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால் ராமர் பாலம் பற்றிய தகவல்களைக் கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன. வரலாற்றின்படி 56 கிலோமீட்டர் நீளத்துக்கு பாலம் இருந்ததாக நம்பப்பட்டு வந்தது. தொடர்ச்சியாகக் காணப்படும் சுண்ணாம்புக் கல் திட்டுகளைக் கொண்டு சில முடிவுகளுக்கு வரக்கூடும். ஒரே வாக்கியத்தில் கூறுவதென்றால், ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்” என்றும் தெரிவித்து இருந்தார். எனவே, பா.ஜ.க.வின் ஒன்றிய அமைச்சராலேயே அந்த ‘பாரம்பர்ய நம்பிக்கை’ விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

சேது சமுத்திரத் திட்டம்: அடிப்படை அறிவு கூட இல்லாமல் அறிக்கை விடலாமா 'அரைகுறை' அண்ணாமலை? - முரசொலி!

‘பணம் கொள்ளையடிப்பதற்காக சேதுசமுத்திரத் திட்டம் தீட்டப்பட்டது’ என்கிறார் அண்ணாமலை. இதைவிட பிரதமர் வாஜ்பாய்மீது அவதூறு குற்றச்சாட்டு இருக்க முடியாது. ஏனென்றால், அந்தத் திட்டத்தை தொடக்க காலத்தில் தீட்டியவர் பிரதமர் வாஜ்பாய் அவர்கள்தான். இதுவே அந்த ‘அரைகுறை’க்குத் தெரியவில்லை.

‘சேது சமுத்திரத் திட்டத்தை பா.ஜ.க. அரசு நிறைவேற்றும்’ என்று 1998 ஆம் ஆண்டு சென்னையில் வைத்து அறிவித்தவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள். முதல்கட்ட ஆய்வுக்காக 5 கோடி ரூபாயை ஒதுக்கியது பா.ஜ.க. அரசு. ‘இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்’ என்று அன்றைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா நாடாளுமன்றத்திலேயே சொன்னார்.

2003 ஆம் ஆண்டு கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சத்ருக்கன் சின்ஹா, ‘‘பாம்பன் தீவிற்குக் கிழக்கே, ஆதம் பாலம் வழியாகச் செல்கின்ற புதிய கடல்வழிப் பாதையில் திட்டம் மேற்கொள்ளப்படும்” என்று உறுதி அளித்தார். 1998 முதல் 2004 வரையிலான பா.ஜ.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த அனைவரும் தங்கள் பங்குக்கு இந்தத் திட்டத்தை நகர்த்தி வந்தார்கள். இதைத்தான் ‘மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக தீட்டப்பட்ட திட்டம்’ என்கிறாரா அண்ணாமலை? ஒரு திட்டம் எந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் அறிக்கை விடலாமா?

2004 ஆம் ஆண்டு ஆட்சி மாறியது. பா.ஜ.க. ஆட்சி முடிந்து, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகுதான் முழுமையாகப் பணிகள் தொடங்கின. அதன்பிறகு பா.ஜ.க. ‘பல்டி’ அடித்தது. சுப்பிரமணிய சுவாமியும், ஜெயலலிதாவும் நீதிமன்றத்துக்குப் போனதை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டது பா.ஜ.க.

சேது சமுத்திரத் திட்டம்: அடிப்படை அறிவு கூட இல்லாமல் அறிக்கை விடலாமா 'அரைகுறை' அண்ணாமலை? - முரசொலி!

‘‘நாம் இருக்கும்வரை ராமர் சேதுவை யாராலும் தொட முடியாது” என்று எல்லாக் கூட்டங்களிலும் அன்றைய பா.ஜ.க. தலைவர் அத்வானி சொல்லி வந்தார். ‘சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம்’ என நெல்லை (2007) பொதுக்கூட்டத்தில் பேசும்போது அத்வானி அறிவித்தார். சேது சமுத்திரத் திட்டம் குறித்து அன்றைய காங்கிரசு கூட்டணி அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசு, அந்த மனுவையே திரும்பப் பெற்றது.

நீதிமன்றத் தடை ஒரு பக்கம் என்றால், மக்கள் மன்றத்தில் எதிர் பிரச்சாரம் செய்து முட்டுக் கட்டை போட்டது பா.ஜ.க. தான். இதெல்லாம் ‘அரைகுறை’ அண்ணாமலைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நீதிமன்றத்தில் வழக்கு நடப்பது உண்மைதான். 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. அரசு என்ன மனு தாக்கல் செய்தது? ‘‘சேதுசமுத்திரத் திட்டத்துக்காக இராமர் பாலத்தை இடிக்க மாட்டோம். இராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம்” என்றுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையும் ‘கொள்ளையடிப்பதற்காகத்தான்’ என்று சொல்வாரா அண்ணாமலை? ஒரு திட்டத்தில் தனது கட்சியின் ஆட்சி என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது என்பதையே தெரிந்து கொள்ளாமல் அறிக்கை வெளியிடுவதா?

மன்னார் வளைகுடாவில் தூத்துக்குடி புதிய துறைமுகத்திலிருந்து இந்த கால்வாய் தொடங்கப்பட்டு கிழக்கு நோக்கியும், பின் தெற்கு பாம்பன் தீவு வரை வடகிழக்கு நோக்கியும் பின் ஆதம் பாலத்தின் குறுக்காகவும் வெட்டப்பட்டு அங்கிருந்து வங்காள விரிகுடாப் பகுதியில் அமையும் கால்வாயுடன் இறுதியாகச் சேரும்வரை சர்வதேச மீடியல் லைனுக்கு

(International Media Line) இணையாகச் செல்ல வேண்டும், எனும் புதிய பாதை எண் 6க்கு வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசினால் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இதுவும் அரைகுறைகளுக்குத் தெரியாது.

2002 ஆம் ஆண்டு பா.ஜ.க.வுக்குத் தெரியாத இராமர் பாலம், அவர்கள் ஆட்சி முடிந்து காங்கிரசு – தி.மு.க. கூட்டணி ஆட்சிக் காலத்தில் மட்டுமே தெரிந்தது எப்படி? இந்த அரசியல்தான் கேவலமானது!

சேது சமுத்திரத் திட்டம்: அடிப்படை அறிவு கூட இல்லாமல் அறிக்கை விடலாமா 'அரைகுறை' அண்ணாமலை? - முரசொலி!

‘சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்றுவோம்’ என்று 2014 ஆம் ஆண்டு கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி நாடாளு மன்றத்தில் அறிவித்திருந்தார். மதுரைக்கு வந்து இந்திய கடலோர காவல் படை விமானத்தில் ராமேஸ்வரம் வந்த நிதின் கட்காரி, ‘‘வாஜ்பாய் அவர்களால் அனுமதிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்போடு, மக்களின் சமய உணர்வு புண்படுத்தாத வகையில் நிறைவேற்றுவோம்’’ என்றுதான் சொல்லி இருக்கிறார்.

சேது சமுத்திரத் திட்டத்துக்கு அன்றைய பிரதமர் வாஜ்பாய் தான் தொடக்கப்புள்ளியாக இருந்தார் என்பதும், இன்றைய பா.ஜ.க. அரசும் ‘மாற்றுப்பாதையில் செயல்படுத்தலாம்’ என்றே சொல்கிறது என்பதும்கூட தெரியாமல் அறிக்கை விடும் அண்ணாமலையை ‘அரைகுறை’ என்று சொல்லாமல் என்ன சொல்வது?!

banner

Related Stories

Related Stories