முரசொலி தலையங்கம்

“இந்தியாவில் அதிகார மொழியாக ஒற்றை மொழி எப்போதும் இருக்க முடியாது..” - முரசொலி தாக்கு !

இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழும் நாடு. இங்கு ஆட்சிமொழியாக, அலுவல் மொழியாக அதிகார மொழியாக ஒற்றை மொழி எப்போதும் இருக்க முடியாது என முரசொலி தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தியாவில் அதிகார மொழியாக ஒற்றை மொழி எப்போதும் இருக்க முடியாது..” - முரசொலி தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சங்க காலமும் கழக காலமும் !

தமிழ்நாட்டை ஒரு பூந்தோட்டம் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இதை வெறும் அழகியலுக்காக அவர் அப்படிச் சொல்லவில்லை. எதற்காக பூந்தோட்டம் என்கிறேன் என்பதை தலைவர் கலைஞர் அவர்களே விளக்கினார்கள்.

“தமிழ்நாடு என்ற பூந்தோட்டத்தில் சிலப்பதிகார ரோஜாவும், சீவகசிந்தாமணி என்ற செண்பகமும் குண்டலகேசிப் பூங்கொத்தும் மணி மேகலை என்ற மல்லிகையும், அகம் புறமென்ற அன்றலர்ந்த முல்லைகளும் மணம் பரப்பிடக் காண்கிறோம். மலர்களின் மணத்தை மொண்டு தருகின்ற தென்றலாக பாரதியும் - பாரதிதாசனும் இருக்கிறார்கள்" என்று தலைவர் கலைஞர் அவர்கள் பேசினார்கள். தமிழ் இலக்கியத்தின் மணத்தையும் குணத்தையும் தமிழ்நாட்டு மக்களுக்கு படைப்பாளிகளும், எழுத்தாளர்களும், அறிஞர்களும், பேச்சாளர்களும் மட்டும் வழங்கவில்லை. தமிழ்நாடு அரசும் வழங்கி வருகிறது.

“இந்தியாவில் அதிகார மொழியாக ஒற்றை மொழி எப்போதும் இருக்க முடியாது..” - முரசொலி தாக்கு !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் முற்காலத்தில் என்றால், அதைத் தான் கழகத்தின் காலமும் செய்து வருகிறது. சங்க காலத்தை மீட்டெடுத்துத் தரும் அரசாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு திகழ்கிறது.

* திசைதோறும் திராவிடம் திட்டத்தின் கீழ் 25 நூல்களும் -

* முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ் 46 நூல்களும்-

* இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் 59 நூல்களும் -

* சங்க இலக்கிய வரிசையில் பத்துப்பாட்டு நூல்களும் -

* முன்பு வெளியான கலைக்களஞ்சியத்தின் ஆவணப்பதிப்பும்

* நூற்றாண்டு காணும் ஆளுமைகளின் படைப்புகளாக 2 நூல்களும் -

* வ.உ.சி.யின் நூல் திரட்டுகளாக இரண்டு நூல்களும்

* நாட்டுடமை ஆக்கப்பட்டவர் வரிசையில் 17 நூல்களும் என 173 நூல்களை கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லையில் பொருநை விழா -

தஞ்சையில் காவிரி விழா -

கோவையில் சிறுவாணி விழா -

மதுரையில் வைகை விழா -

சென்னையில் இலக்கியவிழா - என ஐம்பெரும் விழாக்கள் நடந்திருக்கின்றன. தமிழ் வளர்க்க புலவர்கள் கூடும் அமைப்பாக தமிழ்ச் சங்கங்கள் அமைந்திருந்தன. இது தமிழ்க் கூடலாக அப்போது அழைக்கப்பட்டது. பண்டைக் காலத்தில் மூன்று சங்கங்கள் இருந்ததாக இறையனார் களவியல் நக்கீரர் உரை கூறுகிறது. தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என இது அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடல் கொண்ட தென்மதுரை, கபாடபுரம், தற்கால மதுரை ஆகிய இடங்களில் மூன்று சங்கங்களும் முறையே செயல்பட்டுள்ளன.

“இந்தியாவில் அதிகார மொழியாக ஒற்றை மொழி எப்போதும் இருக்க முடியாது..” - முரசொலி தாக்கு !

காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரையிலான மன்னர்கள் தலைச் சங்கத்தையும், வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திரு மாறன் வரையிலான மன்னர்கள் இடைச் சங்கத்தையும், முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரையிலான மன்னர்கள் கடைச் சங்கத்தையும் போற்றி வளர்த்ததாக வரலாறு சொல்கிறது. இந்த வரிசையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை வள்ளல் பாண்டித்துரையார் 1901 ஆம் ஆண்டு நிறுவினார். இன்றைய கழக ஆட்சி இதன் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது.

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் இலக்கியம் படிக்க வேண்டும். இலக்கியம்தான் ஒரு மனிதனைப் பண்படுத்தும்" என்று இலக்கிய விழாவைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

"எழுத்தும், இலக்கியமும் மொழியை வளர்க்கின்றன. வளர்ப்பது மட்டுமல்ல, காக்கின்றன. மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் நம்முடைய பண்பாடு சிதைந்துவிடும். பண்பாடு சிதைந்தால் நம்முடைய அடையாளம் போய்விடும். அடையாளம் போய்விட்டால் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை இழந்து விடுவோம். தமிழன் என்ற தகுதியை இழந்தால் வாழ்ந்தும் பயனில்லை." என்று சொல்லி இலக்கியம் - மொழி உணர்ச்சியைத் தூண்டி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

"இலக்கியம் என்பது பொழுது போக்கு அல்ல, அதுதான் நமது நோக்கும் போக்குமாக மாற வேண்டும். இலக்கியம் என்பது பேரியக்கமாக மாற வேண்டும்" என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

“இந்தியாவில் அதிகார மொழியாக ஒற்றை மொழி எப்போதும் இருக்க முடியாது..” - முரசொலி தாக்கு !

திராவிட முன்னேற்றக் கழக அரசு முன்னெடுக்கும் இலக்கிய முயற்சிகள் அனைத்தும் மொழிக்காப்பு முயற்சிகளே ஆகும். மொழியைக் காப்பதன் மூலமாக இனத்தையும், தமிழ்நாட்டையும் காக்க முடியும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இம்முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பிறமொழியைப் பயன்படுத்துதல், பிறமொழியைக் கற்றுக் கொள்ளுதல் என்பது வேறு. பிறமொழி ஆதிக்கத்துக்கு அடிபணிதல் என்பது வேறு. பிறமொழி ஆதிக்கத்தை மிகக் கடுமையாக எல்லாக் காலத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்து வந்துள்ளது. இந்தி எப்போது திணிக்கப்பட்டதோ அப்போது முதல் எதிர்க்கிறோம். இன்றைய பா.ஜ.க. அரசு ஒன்றிய அரசுக்கு சூட்டி வரும் இந்திப் பெயர்களையும் கடுமையாக எதிர்க்கிறோம்.

இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழும் நாடு. இங்கு ஆட்சிமொழியாக, அலுவல் மொழியாக அதிகார மொழியாக ஒற்றை மொழி எப்போதும் இருக்க முடியாது. மொழியை விட்டுக் கொடுக்க யாரும் முன்வர மாட்டார்கள். அதிலும் தமிழர்கள் முன்வரவே மாட்டார்கள். இந்த வகையில் இரண்டு வகைகளில் தமிழை வளர்த்தாக வேண்டும்.

ஒன்று பிறமொழி ஆதிக்கங்களில் இருந்து தமிழைக் காத்தல். மற்றொன்று தமிழுக்கு காலம் தோறும் செழுமையான படைப்புகளை உருவாக்கித் தந்து கொண்டே இருத்தல். இவை இரண்டையும் மிகச் சரியாகச் செய்யும் அரசாக இன்றைய கழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் சிலருக்கு அவர் உறுத்தலாக இருக்கிறார்!

banner

Related Stories

Related Stories