
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மகளிர் மாநாட்டில் ஆற்றிய உரை
நம்முடைய டெல்டா மாவட்டத்தை, குறிப்பாக இந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை திராவிட இயக்கத்தின் தொட்டில் என்று அனைவரும் சொல்வார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைத் தந்த மண் இந்த டெல்லா பகுதி. நம் கழகத் தலைவர் அவர்கள் நானும் ஒரு டெல்டாகாரன் என்று அடிக்கடி பெருமையாக சொல்வார்கள்.
அப்படிப்பட்ட தமிழ் மண்ணில் இன்று இந்த ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மகளிர் மாநாடு மிகச்சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்றிருக்கிறது. இதைச் சிறப்பாக ஏற்பாடு செய்த கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் அத்தை கனிமொழி அவர்களுக்கும், கழகத்தின் முதன்மைச் செயலாளர் அண்ணன் நேரு அவர்களுக்கம், அவர்களுடன் சேர்ந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த டெல்டா பகுதியைச் சேர்ந்த அனைத்து அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், அனைத்து சகோதரிகளுக்கும் என்னுடைய பாராட்டுகளையும், நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்ற இயக்கங்கள் எல்லாம் ஒரு வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒருமுறை மாநாடு நடத்துவார்கள். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் சென்ற மாதம் திருவண்ணாமலையில் இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு, அதன் பின்பு பல்லடத்தில் மகளிர் அணி மாநாடு, இன்று தஞ்சையில் மகளிர் அணி மாநாடு, மீண்டும் விருதுநகரில் இளைஞர் அணி சந்திப்பு, அதற்குப் பிறகு திருச்சியில் மண்டல மாநாடு என்று இப்படி மாதத்திற்கு ஒரு மாநாடு, சந்திப்பு நடத்தி நம்முடைய இயக்கத்தின் கொள்கைகளை, அரசின் சாதனைகளை, தலைவரின் சாதனைகளைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிற ஒரே இயக்கம் நம் திராவிட முன்னேற்றக் கழகம்.
நேற்றுதான் நாம் அனைவரும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கத்தைச் செலுத்தினோம். இந்தித் திணிப்புக்கு எதிராக முதன் முதலாகப் பெண்களைத் திரட்டிப் போராடியது யார் என்று பார்த்தால், இந்த டெல்டா பகுதியைச் சேர்ந்த தர்மாம்பாள் அம்மையார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அவர்கள்தான். அவர்களைத் தந்த பகுதி இந்த தஞ்சைப் பகுதி.
அதுமட்டுமல்ல, தென்னிந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரைக் தந்தது இந்த டெல்டா பகுதிதான். அப்படிப்பட்ட இந்தப் பகுதிதான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும் கொடுத்தது.
இந்தியாவிலேயே முதன் முறையாக பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சம உரிமை கொடுத்தவர் டாக்டர் கலைஞர். இந்தியாவிலேயே முதல் முறையாகக் காவல்துறையில் பெண்களுக்குச் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் டாக்டர் கலைஞர். இந்தியாவிலேயே முதல் முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்து வைத்தவர் டாக்டர் கலைஞர். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்று கலைஞர் வழியில் நம்முடைய கழகத் தலைவர் அவர்கள் பெண்களுக்குப் பார்த்துப், பார்த்து நம்முடைய ஆட்சியை நடத்திக்கொண்டு வருகிறார்கள். நம்முடைய தலைவர் அவர்கள் ஆரம்பித்து வைத்ததுதான் ‘விடியல் பயணத் திட்டம்’, ‘காலை உணவுத் திட்டம்’, ‘புதுமைப் பெண் திட்டம்’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’. இன்று மாதந்தோறும் ஒரு கோடியே 30 லட்சம் மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கொடுத்துக்கொண்டிருக்கிறார் நம் தலைவர் அவர்கள்.
அதுமட்டுமல்ல, இங்கு வந்திருக்கக்கூடிய உங்களில் பல பேர் மேயராக, துணை மேயராக, நகர்மன்ற, ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருக்கிறீர்கள் என்றால் அதற்கு வழி செய்தது நம் கழக ஆட்சி, நம்முடைய கழகத் தலைவர் அவர்கள். இப்படி மகளிர் முன்னேற்றத்திற்கு ஒட்டுமொத்த இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக, வழிகாட்டியாக நம்முடைய தலைவர் அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.
இப்பொழுது தேர்தல் நெருங்கி வந்துவிட்டது, இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தேர்தல். தேர்தல் எப்பொழுது வந்தாலும் ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார். இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்தார். வந்து என்ன பேசினார்? நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பேசியது யார்? ஒன்றிய பிரதமர் திரு.மோடி அவர்கள்.
திரு.மோடி அவர்களே, மைக் என்று நினைத்து நீங்கள் கண்ணாடியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 2023-லிருந்து பா.ஜ.க ஆட்சியில் இருக்கக்கூடிய மணிப்பூரில் மிகப்பெரிய ஒரு கலவரம் நடந்தது. அந்தப் பெண்களுக்கு நடந்த கொடுமையையெல்லாம் நாடே பார்த்தது. ஏராளமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
அதுமட்டுமல்ல, பா.ஜ.க ஆட்சி சரியில்லை, சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது என்று இன்று மணிப்பூரில் ஆட்சி கலைக்கப்பட்டு ஒரு வருடமாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கிறது. 2002-ஆம் ஆண்டு இதே பிரதமர் திரு.மோடி அவர்கள் குஜராத்தின் முதலமைச்சராக இருக்கும் பொழுது முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார்கள். அந்த கலவரத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது யார் என்று பார்த்தால் பெண்கள். ஐந்து மாத கர்ப்பிணி பில்கிஸ் பானுவை சங்கிக் கூட்டம் பாலியல் பலாத்காரம் செய்தது. குடும்பத்தையே கொலை செய்தார்கள். அந்த கொடூரமான வழக்கில் குற்றவாளிகள் பக்கம் நின்றது பா.ஜ.க அரசு.
காஷ்மீரில் ஆசிஃபா என்ற ஒரு சிறுமி, உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பட்டியலின சிறுமி, இப்படிப் பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து சங்கிகள் கொலை செய்தார்கள். அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவுக் குரல் கொடுத்த கேடுகெட்ட கட்சிதான் பா.ஜ.க.
இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்கின்ற மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கின்ற மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம். இந்த நான்கு மாநிலங்களையும் ஆட்சி செய்து கொண்டிருப்பது பா.ஜ.க அரசு.

பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகளைச் செய்துவிட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்து பெண்களிடம் ஓட்டு கேட்பது வெட்கமாக இல்லையா திரு.மோடி அவர்களே என்று உங்களைப் பார்த்துத் தமிழ்நாட்டுப் பெண்கள் கேட்கிறார்கள். இப்படிப்பட்ட பாசிஸ்டுகள் தமிழ்நாட்டிற்குள் வந்தார்கள் என்றால் மகளிருக்கும் பாதுகாப்பு இருக்காது, நம்முடைய மாநிலத்திற்கும் பாதுகாப்பு இருக்காது.
இப்பொழுது கூடப் பெண்களுக்குப் பேருதவியாக இருக்கக்கூடிய 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை எப்படியாவது முடக்குகிறோம் என்று ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இவ்வளவு நாட்களாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதியை ஒதுக்காமல் இழுத்தடித்தார்கள். இன்று அந்த நிதிச் சுமையை நம்முடைய மாநில அரசின் மீது திணிக்க முயற்சிக்கிறார்கள். இதையும் நம்முடைய முதலமைச்சர்தான் முதல் ஆளாக எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் நம்பர் ஒன் அடிமை எடப்பாடி பழனிசாமி அதற்கும் ஒன்றிய அரசுக்கு இன்று முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
முரட்டுப் பக்தர் கேள்விப்பட்டிருப்பீர்கள், முரட்டுத் தொண்டரைப் பார்த்திருப்பீர்கள், ஆனால் இன்று ஒரு முரட்டு அடிமையாக நம் கண் முன்னாலேயே நடந்து காட்டிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி அவர்கள். இன்று எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிடலாம் என்று பாசிஸ்டுகள் கனவு காண்கிறார்கள். பழைய அடிமைகள் மட்டுமல்லாமல் இன்று புதுப்புது அடிமைகளும் உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் கிளம்பி வரட்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தை, நம்முடைய தமிழ்நாட்டை அவர்களால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.
அதற்கு இங்கே இருக்கக்கூடிய நம்முடைய மகளிர் படை நிச்சயம் ஒரு காவல் அரணாகத் தமிழ்நாட்டிற்கு இருப்பார்கள். ஒவ்வொரு அரசுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஒன்றிய பா.ஜ.க அரசை எடுத்துக்கொண்டால், அதன் அடையாளம் ‘பாசிசம்’ என்று சொல்வார்கள். முன்பிருந்த அ.தி.மு.க அரசின் அடையாளம் ‘அடிமை அ.தி.மு.க அரசு’ என்று சொல்வார்கள். ஆனால் நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு என்ன அடையாளம்? இது முழுக்க முழுக்க மகளிருக்கான அரசு என்பதுதான் நம்முடைய அரசின் அடையாளம்.
இந்த அரசு அமையக் காரணமாக இருந்தது இங்கு வந்திருக்கக்கூடிய மகளிர் நீங்கள்தான். இன்று இந்த அரசைத் தொடர்ந்து கொண்டாடுவதும் இங்கு வந்திருக்கக்கூடிய மகளிர் நீங்கள்தான்.
ஆகவே, நம் அரசின் சாதனைகளை, திட்டங்களை, கொள்கைகளை நீங்கள் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். நம்முடைய கழக அணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும்.
நம் தலைவர் இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சர் பொறுப்பில் அமர வேண்டும். அதற்கு இங்கு வந்திருக்கக்கூடிய மகளிர் நீங்கள் அடுத்த 80 நாட்களுக்குத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இறங்கி உங்களின் தேர்தல் பிரச்சாரத்தை இன்னும் அதிகமாக, வேகமாகச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும்.
நம் திராவிட மாடல் இரண்டாம் பாகத்திற்கு (Part 2) மக்கள் தயாராகிவிட்டார்கள். நம்முடைய முதலமைச்சர், தலைவர் அவர்கள் சொன்னது போல நாம்தான் மீண்டும் வெல்வோம். நாம்தான் மீண்டும் வருவோம் என்று கூறி உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளைக் கூறி நம்முடைய தலைவருடைய ஆட்சி தொடரட்டும், தமிழ்ப் பெண்கள் வெல்லட்டும்.






