முரசொலி தலையங்கம்

“ஐ.நா.வின் குறிக்கோள்களை உள்ளடக்கிய தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள்” : புகழாரம் சூட்டிய ‘முரசொலி’ !

ஐக்கிய நாடுகளின் குறிக்கோள்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோள்களை ஒப்பிட்டு எழுத வேண்டிய தேவை இப்போது ஏன் ஏற்பட்டது என்பதை அவர் ஒப்பிட்டுச் சொல்லி இருப்பதுதான் மிக மிக முக்கியமானது ஆகும்.

“ஐ.நா.வின் குறிக்கோள்களை உள்ளடக்கிய தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள்” : புகழாரம் சூட்டிய ‘முரசொலி’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஐ.நா.வின் குறிக்கோள்களும் தி.மு.க.வின் குறிக்கோள்களும் - 1

ஐக்கிய நாடுகள் அவையின் வளம் குன்றாக் குறிக்கோள்களுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை எந்த வகையில் எல்லாம் பொருந்திப் போகிறது என்பது குறித்து டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து ஒரு ஆய்வு நூலை எழுதி இருக்கிறார்.

டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து, இயற்பியல் துறையில் முனைவர் ஆராய்ச்சி பட்டம் (Ph.D.) பெற்றவர். தென் கொரியா, ஜப்பான், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் முது முனைவர் ஆராய்ச்சியாளராக பணியாற்றியவர். பிரிட்டனில் உள்ள சுவான்சி பல்கலைக் கழகத்தில் நானோ டெக்னாலஜி அடிப்படையிலான ஒளிவினையூக்கிகள் (Photocatalyst) குறித்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றியவர்.

ஜப்பான் நாட்டின் ஆய்வு விருதையும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வேல்சு அரசின் கூட்டு விருதையும் வென்றவர். தற்போது ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கெரியட்-வாட் பல்கலைக்கழகத்தில் (Heriot-Watt University) இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். சூரிய ஆற்றல் மூலம், நானோ நுட்ப பருப்பொருட்களைக் கொண்டு புதிய பயன்பாட்டு கருவிகளை வடிவமைப்பதன் மூலம் எவ்வாறு சுற்றுப்புறச் சூழலில் கார்பன் தடங்களை குறைக்க இயலும் என்ற ஆராய்ச்சிக் குழுவின் தலைவராக உள்ளார்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பன்னாட்டு ஆய்விதழில் வெளியிட்டுள்ளார். அறிவியல், உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயண அனுபவங்கள் குறித்து தொடர்ந்து தமிழில் எழுதியும், பேசியும் வருபவர். அவர் தான், உலகின் முன்னேறிய நாடுகளோடு ஒப்பிடும்போது திராவிடம் மற்றும் திராவிட ஆட்சிகள் ஏன் சிறந்தது என்பதை சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதியும் வருகிறார். அவர் சமீபத்தில் ஒரு நூலை வெளியிட்டு இருக்கிறார். 'ஐக்கிய நாடுகளின் வளம் குன்றா குறிக்கோள்கள் பார்வையில் தி.மு.க தேர்தல் அறிக்கை - 2021' என்பதாகும்.( நிகர்மொழி பதிப்பகம் வெளியீடு)

திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தலில் ஈடுபட்ட காலத்துக்கு முந்தைய தேர்தலில் இருந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அவையே, அந்தத் தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவையாக எப்போதும் இருக்கும். ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையாக இல்லாமல், ஒரு நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்த கொள்கை அறிக்கையாகவே எப்போதும் அமைந்திருக்கும்.

'சொன்னதைச் செய்வோம் - செய்வதைத் தான் சொல்வோம்' என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதற்கு திருக்குறள் போல் தீட்டிக் கொடுத்த பாதையில் தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடைபோட்டு வருகிறார்கள். 'சொல்லாததையும் செய்வோம்' என்று அடுத்த வளர்ச்சியை நோக்கி ஆட்சியை வளர்த்தெடுத்து வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.

பதவியேற்ற நொடிமுதல், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தொடங்கிய காட்சி எந்த மாநிலத்திலும் கிடையாது. ஓராண்டு காலத்தில் 60-70 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிய சாதனையும் வேறு எங்கும் கிடையாது. தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத பல்வேறு திட்டங்கள் ( இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன்) வரிசையாக அணிவகுப்பதும் வேறு எங்கும் கிடையாது.

முதலமைச்சர் அவர்களே சட்டப்பேரவையில் சொன்னது மாதிரி, 'ஒன்றிய அரசின் ஒத்துழைப்பும், நிதிநிலை வளர்ச்சியும் இருந்திருக்குமானால் ' அனைத்து வாக்குறுதிகளையும் ஓராண்டில் நிறைவேற்றிக் காட்டிய ஆட்சியாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சி அமைந்திருக்கும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இத்தகைய சிறப்புக்குரிய தேர்தல் அறிக்கையானது ஐக்கிய நாடுகள் அவையில் இடம்பெற்றிருக்கும் நாடுகள் சார்பில் உருவாக்கப்பட்ட 'வளம் குன்றா வளர்ச்சி குறிக்கோள்கள்' என்பவற்றோடு எப்படி பொருந்திப் போகின்றன என்பதை முனைவர் சுதாகர் பிச்சைமுத்து விளக்கி இருக்கிறார்.

2015 ஆம் ஆண்டு ஐ.நா. இத்தகைய குறிக்கோளை வடிவமைத்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட வேண்டும் என்று நிர்ணயித்துள்ளார்கள்.

1. வறுமை ஒழிப்பு (No Poverty)

2. பசியற்ற சமூகம் (Zero Hunger)

3. நலம் & நலவாழ்வு (Good Health and Well-being)

4. தரமான கல்வி (Quality Education)

5. பாலின சமத்துவம் (Gender Equality)

6.தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம் (Clean Water and Sanitation)

7. புதுப்பிக்கவல்ல மற்றும் மலிவான எரிபொருள் (Affordable and Clean Energy)

8. வேலைவாய்ப்பும், அதன் அடிப்படையில் பொருளாதார மேம்பாடும் (Decent Work and Economic Growth)

9. உள்கட்டமைப்பு மேம்பாடு (Industry Innovation and Infrastructure)

10. சமூக ஏற்றத்தாழ்வை களைதல் (Reducing Inequality)

11. தன்னிறைவு சமூகக்கட்டமைப்பு (Sustainable Cities and Communities)

12. வளங்களை பொறுப்பான முறையில் பயன்படுத்துதல் (Responsible Consumption and Production)

13. காலநிலை மாறுபாடு தொடர்பான நடவடிக்கை (Climate Action)

14. கடல்சார் வளங்களைப் பேணுதல் (Life Below Water)

15. சூழலியல் பாதுகாப்பு (Life On Land)

16.அமைதி மற்றும் நீதி (Peace Justice and Strong Institutions)

17. வளங்குன்றா வளர்ச்சிக்கான கூட்டமைப்புகள் (Partnerships for the Goals)

இவையாவும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான குறிக்கோள்கள் என்று ஐ.நா. அறிவித்துள்ளது. ''இதையெல்லாம் உள்ளடக்கியே தி.மு.கவின் கடந்த எல்லாத் தேர்தல் வாக்குறுதிகளும் இருந்திருக்கின்றன. இந்த முறை ( 2021) இதையும் தாண்டி நிறைய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன" என்கிறார் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து.

ஐக்கிய நாடுகளின் குறிக்கோள்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோள்களை ஒப்பிட்டு எழுத வேண்டிய தேவை இப்போது ஏன் ஏற்பட்டது என்பதை அவர் ஒப்பிட்டுச் சொல்லி இருப்பதுதான் மிக மிக முக்கியமானது ஆகும்.

( தொடரும்)

banner

Related Stories

Related Stories