முரசொலி தலையங்கம்

“இலங்கைப் பிரச்சினையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்” : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு பாடம் எடுக்கும் ‘முரசொலி’ !

ஒரு புதிய கூட்டாட்சி அரசியலமைப்பை இலங்கையில் உருவாக்கவேண்டும். அப்படி உருவாக்கினால்தான் அது அங்குள்ள தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தரும் அரசியலமைப்பாக இருக்க முடியும்.

“இலங்கைப் பிரச்சினையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்” : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு பாடம் எடுக்கும் ‘முரசொலி’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா!

இலங்கையில் அரசியல் சூழல் சிக்கலுக்குரியதாக மாறி இருக்கும் இந்த நேரத்தில், ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் தெளிவுபடுத்தி இருக்கிறது.

இலங்கை விவகாரங்கள் குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நாடாளுமன்றக்கட்சிகள் கூட்டம் நடந்துள்ளது. இதில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. நாடாளுமன்றக் குழுத்தலைவரும் கழகப் பொருளாளருமான டி.ஆர்.பாலு இதனை விளக்கி இருக்கிறார்.

File Image
File Image

இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குதல், பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்தியாவரும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு, தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர் நிலை, பாக் நீரிணைப் பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாப்பது, கச்சத்தீவு மீட்பு ஆகியவை குறித்துப் பேசிய பிறகு இறுதியாக, ஈழத்தமிழரது அரசியல் உரிமைகள் குறித்து டி.ஆர்.பாலு வலியுறுத்தி இருக்கிறார்.

"இலங்கைக்கு மனிதநேய அடிப்படையில் உதவி செய்திடும் அதே வேளையில், அங்கு நிலவும் இனப்பிரச்சினைக்குத்தீர்வு கண்டிட, தமிழர்கள் மிகுதியாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகத் தன்னாட்சியையும் அதிகாரப் பகிர்வையும் வழங்கும் வகையில், இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த உண்மையான அக்கறையுடன் இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும்" என்பதே திராவிட முன்னேற் றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கை ஆகும். இதனை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி இருக்கிறார் டி.ஆர்.பாலு.

இதே கருத்தைத்தான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் வலியுறுத்தி இருக்கிறார்.

File image
File image

"இலங்கை மக்கள், நபர்களை மாற்றினால்போதும் என்று போராடவில்லை. அரசியல் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்றுதான் போராடுகிறார்கள். இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா காரணம் அல்ல, வேறு காரணம் உள்ளது. தமிழர்களை அழிப்பதற்காக அளவுக்கு மீறி ராணுவத்துக்கு கடன் வாங்கி செலவு செய்ததால் ஏற்பட்டது இந்தச் சிக்கல்.

இன்னமும் தமிழர்கள் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ராணுவம் வெளியேற வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்று சேர்க்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும். இவை எல்லாம் செய்தால்தான் இலங்கையில் அமைதி காண முடியும்" என்று வைகோ சொல்லி இருக்கிறார்.

இலங்கையில் இன்றைய பிரச்சினை என்பது, அரசியல் - சமூக - வகுப்புவாத - பொருளாதாரப் பிரச்சினை ஆகும். போரைக் காரணமாகக் காட்டி மற்ற பிரச்சினைகளை அமுக்கி வைத்திருந்தார்கள். போர் முடிந்த பின்னால் அமுக்கப்பட்டுக்கிடந்த அவை அனைத்தும் வெளியே கிளர்ந்து எழுந்துவிட்டது. இதிலிருந்து இலங்கை ஆட்சியாளர்களால் - அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களால் மீள முடியவில்லை. யாராக இருந்தாலும் - ராஜபக்ஷேக்களாக இருந்தாலும் - வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கு மீளத் தெரியவில்லை .

“இலங்கைப் பிரச்சினையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்” : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு பாடம் எடுக்கும் ‘முரசொலி’ !

உலக நாடுகளை எதிர்பார்த்துதான் அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் இந்தியா, ஈழத்தமிழர் நலன் சார்ந்து சில அரசியல் கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக்கழ கத்தின் உள்ளார்ந்த கோரிக்கை ஆகும்.

மனிதாபிமான உதவி செய்வது. பணம் கொடுப்பது, மருந்துப் பொருள்கள் கொடுப்பதோடு தனது கடமை முடிந்ததாக இந்திய அரசு நினைக்கக் கூடாது. கடந்த காலங்களில் மலையகத்தமிழர்களது உரிமைகளுக்காக இலங்கையும் இந்தியாவும் ஒப்பந்தம் செய்து கொண்டவரலாறு நமக்குண்டு. இலங்கைத்தமிழர் உரிமைக்காக இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும், இலங்கை அதிபர் ஜெய வர்த்தனாவும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இத்தகைய அரசியல் உரிமையின் தொடர்ச்சியை செய்தாக வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது.

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின்படி தமிழர்கள் பெரும் பான்மையாக வாழும் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப் படும், அந்த மாகாணம் உரிமை பெற்ற மாகாணமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் 1987 ஆம் ஆண்டு போட்ட ஒப்பந்தம் 35 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கிறது.

“இலங்கைப் பிரச்சினையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்” : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு பாடம் எடுக்கும் ‘முரசொலி’ !

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு - கிழக்கு என்று சொல்லி விடக்கூடாது என்பதற்காகவே அங்கு சிங்களக் குடியேற்றங்கள் அதிகமாக நடந்தன. இந்தச் சட்டம் செல்லாது என்று இலங்கை உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. எனவே, புதிய ஒரு சட்டத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியாக வேண்டும். அதுதான் ஒட்டுமொத்த ஈழத்தமிழர் நலன் சார்ந்ததாக அமைய முடியும்.

ஒரு புதிய கூட்டாட்சி அரசியலமைப்பை இலங்கையில் உருவாக்கவேண்டும். அப்படி உருவாக்கினால்தான் அது அங்குள்ள தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தரும் அரசியலமைப்பாக இருக்க முடியும்.

அனைத்து இனத்தவர்க்குமான அரசியலமைப்பு, அனைத்து மதத்தவர்க்குமான அரசியலமைப்பு, அனைத்து மொழியினருக்குமான அரசியலமைப்பு அங்கு உருவாக வேண்டும். அனைவரையும் மனநிறைவு கொள்ள வைக்கும் ஒரு அரசியலமைப்பை உருவாக்காமல் இலங்கையில் அமைதியை உருவாக்க முடியாது. அப்படி உருவாக்கினால் அது நிரந்தரமான அமைதியாகவும் இருக்க முடியாது.

ஒற்றையாட்சித் தன்மைக்கு முற்றுப்புள்ளிவைத்தலே, ஒற்றுமைக்கு வழிவகுக்கும். அனைவர்க்குமான அரசியலமைப்பே, அமைதிக்கு வழிவகுக்கும். புறக்கணித்தல், புரட்சிக்கே வழிவகுக்கும்.

banner

Related Stories

Related Stories