
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகவும். அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இச்சட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், ஒன்றிய அரசிற்கு உரிய ஆலோசனை வழங்கவும், மத்திய ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த மத்திய ஆலோசனை வாரியத்தின் 8-வது குழுக் கூட்டம் புதுடெல்லி டாக்டர்.அம்பேத்கர் சர்வதேச மைய வளாகத்தில் ஜன.8 ஆம் தேதி ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை நிர்வகிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பாக, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் பல முன்னோடி திட்டங்களை எடுத்துரைத்து சில முக்கிய கோரிக்கைகள் மற்றும் முன்மொழிவுகளையும் ஒன்றிய அரசின் பரிசீலனைக்காக முன்வைத்தார்.
ஒன்றிய அரசு நிர்வகித்து வரும் தனித்துவ அடையாள அட்டை (UDID) தரவுத்தளத்தில் தமிழ்நாடு அரசிற்கு இணைய இசைவு வழங்கிட அமைச்சர் அவர்களால் கடந்த ஆண்டு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கை ஒன்றிய அரசால் ஏற்கப்பட்டு தமிழ்நாடு அரசிற்கு இணைய இசைவு வழங்கியதற்கு அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இயக்கக் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும் போது வழங்கப்பட்டு வந்த GST வரிவிலக்கை தொடர்ந்திடவும், கேட்கும் கருவிகளுக்கு வழங்கப்படும் GST விலக்கு போன்று, அனைத்து உதவி உபகரணங்களுக்கும் GST விலக்கு வழங்க வேண்டியும், மாற்றுத்திறனாளிகளை பணிக்கு அமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகளை மீண்டும் நடைமுறைப்படுத்திடவும் அமைச்சர் அவர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், மாநில UDID ஒருங்கிணைப்பாளர் ஊதிய நிலுவைத் தொகையான ₹9 இலட்சத்தினை விரைவில் விடுவித்திடவும், தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் (NDFDC) ஒதுக்கப்பட்ட 50 கோடி கடன் உதவி நிதியை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு விரைவில் விடுவித்திடவும். ஒன்றிய அரசின் Accessible India Campaign திட்டத்தின் தமிழ்நாட்டிற்கான இறுதி தவணைத் தொகையான 13.81 கோடி ரூபாயினை விரைவில் விடுவித்திடவும், மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தை வலுப்படுத்த ₹2.21 கோடி நிதி ஒதிக்கிடவும் மாண்புமிகு அமைச்சர் அவர்களால் நிதி ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், உதவி உபகரணங்களுக்கான ஒன்றிய அரசின் ARJUN இணையதளத்தை பயன்படுத்த தமிழ்நாடு அரசிற்கு இசைவு வழங்கிடவும், ஒன்றிய அரசின் UDID தரவுத்தளத்தில் தமிழ்நாட்டினை சேர்ந்த 45000-ற்கும் மேற்பட்ட இறந்தோரின் தரவுகளை கள ஆய்வுகளின் அடிப்படையில் நீக்குவதற்கான வசதியினை ஏற்படுத்திடவும், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (NSP) மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் தொடர்பில்லா மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதை முறைப்படுத்திடவும் அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்களால் கோரப்பட்டது.
இறுதியாக Rehabilitation Council of India Act, 1992 சட்டத்தின் கீழ் புகாரளிக்க மாற்றுத்திறனாளிகள் நல ஆணைய அதிகாரியினை தமிழ்நாட்டிற்கான அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியாக நியமித்திட கோரியும் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன் அவர்கள் ஒன்றிய அமைச்சர் அவர்களிடமும் ஒன்றிய அரசின் செயலாளர் அவர்களிடமும் கடிதங்களை வழங்கினார்.






