முரசொலி தலையங்கம்

விலையைக் குறைப்பதாகச் சொல்லி பம்மாத்து வேலையை காட்டிய பாஜக அரசு.. அம்பலப்படுத்திய முரசொலி தலையங்கம்!

ஒரே ஒரு மூட்டையை மட்டும் எடுத்து - அதன் கண்ணில் காட்டி விட்டு கீழே வைப்பார்களாம். பாரத்தைக் குறைத்து விட்டார்கள் என்று அது நினைத்துக் கொள்ளுமாம்! அதைப் போல நடிக்கிறது பா.ஜ.க. அரசு!

விலையைக் குறைப்பதாகச் சொல்லி பம்மாத்து வேலையை காட்டிய பாஜக அரசு.. அம்பலப்படுத்திய முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெட்ரோலில் சுடர் விடும் பொய்கள்! என்ற தலைப்பில் முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

பெட்ரோல் விலையை பிரதமர் குறைத்து விட்டார் என்று அனைத்து ஊடகங்களும் செய்திகள் வெளியிடுகின்றன. விலையை இவர்கள் குறைத்து விட்டார்கள் என்றால், இதுவரை கூட்டியவர்களும் அவர்கள்தானே!

பெட்ரோல் விலையை பிரதமர் கூட்டிவிட்டார் என்று இவர்கள் இது வரை செய்தி வெளியிட்டது உண்டா? பெட்ரோல் விலையைக் குறையுங்கள் என்று சொல்லும் போதெல்லாம், ‘அது எங்கள் கையில் இல்லை, எண்ணெய் நிறுவனங்களின் கையில்தான் இருக்கிறது’ என்று சொன்னார்கள். இப்போது மட்டும் இவர்களால் எப்படி குறைக்க முடிந்தது.

பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை, அதற்கான வரியைத் தான் குறைத்துள்ளோம் என்று சொல்வார்களே ஆனால், அந்த வரியை இந்தளவுக்கு அதிகப்படுத்தியது யார்? அதே ஒன்றிய பா.ஜ.க. அரசு தானே? அப்படியானால் இப்போது நடந்திருப்பதை பெட்ரோல் விலை குறைப்பு என்று கூடச் சொல்ல முடியாது. ‘ஏற்றிய வரியை ஒன்றிய அரசு ஓரளவு விலக்கிக் கொண்டு இருக்கிறது’ என்றுதான் சொல்ல வேண்டும். விலை குறைந்து விட்டது என்று சொல்ல முடியாது.

பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் எங்களுக்கும், அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல இருந்தவர்கள், இன்று வரியைக் குறைத்துவிட்டு - எங்களால்தான் இது சாத்தியமானது என்று சொல்வதன் மூலமாக 100 கோடி மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். மக்களுக்குத் தெரியும் (பா.ஜ.க. தொண்டர்கள் உட்பட!) இவை அனைத்தும் யாருக்காக, யாரால், எதற்காகச் செய்யப்பட்டவை என்பது!

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இவர்தான் நேற்றைக்கு முன்தினம் வரை இந்த விலை உயர்வை எல்லாம் நியாயப்படுத்திக் கொண்டு இருந்தவர்.

‘பெட்ரோல் விலையை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வரலாமா என்பதை தமிழ்நாடு நிதி அமைச்சர் முடிவு செய்ய வேண்டும்’ என்று ஒரு தனியார் விழாவில் நின்று கொண்டு கிண்டல் செய்து கொண்டு இருந்தவர். பெட்ரோல் விலையால் மக்களின் வயிறு (பா.ஜ.க. தொண்டர்கள் உட்பட!) எரிந்து கொண்டு இருந்தபோது சிரித்துக் கொண்டு இருந்தார். ஆனால் இப்போது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏதோ பெரிய சலுகை வழங்கிவிட்டதாக தனக்குத்தானே பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

இன்றைக்கு இவர்கள் செய்துள்ள சலுகை மூலமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என ஒன்றிய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்றிய வரிகள் எவ்வளவு? இப்போது இறக்கியது எவ்வளவு? ஒட்டகத்தின் முதுகில் பாரத்தை ஏற்றி வைத்து விட்டு, ஒரே ஒரு மூட்டையை மட்டும் எடுத்து - அதன் கண்ணில் காட்டி விட்டு கீழே வைப்பார்களாம். பாரத்தைக் குறைத்து விட்டார்கள் என்று அது நினைத்துக் கொள்ளுமாம்! அதைப் போல நடிக்கிறது பா.ஜ.க. அரசு!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து விற்பனையாகி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110ஐ கடந்துள்ளது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப் பட்டு வருகிறது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்தபோது இந்தளவு விலை உயரவில்லை. ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்ததும் விலையும் உயரத் தொடங்கி விட்டது. 137 நாட்களுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் இந்த விலைகள் அதிகமாக ஆகத் தொடங் கியது. அதுதான் இப்போது 110 ரூபாயில் வந்து நின்றது. அந்த வகையில் பார்த்தால் அவர்கள் அதிகரித்ததை அவர்கள் குறைத் துள்ளார்கள். அதுவும் முழுமையாக அல்ல. மிகமிகக் குறைவாகக் குறைத் துள்ளார்கள்.

2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ரூபாய்க்கும் குறைவாக இருந்த கலால் வரியை - 29 ரூபாய் வரைக்கும் உயர்த்தி விட்டு - அதில் 9 ரூபாய் அளவுக்கு குறைத்துள்ளார்கள். அதாவது அவர்கள் உயர்த்தியதைக் கூட முழுமையாக விலக்கிக் கொள்ளவில்லை.

"2014-ஆம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசு, எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல் விலையை 23 ரூபாய், அதாவது 250 சதவீதமும், டீசல் விலையை 29 ரூபாய், அதாவது 900 சதவீதமும் உயர்த்தியுள்ளது. ஆனால், உயர்த் தியதில் இருந்து தற்போது அதில் 50 சதவீதத்தை குறைத்து விட்டு, மாநிலங்களை குறைக்கச் சொல்லி கேட்கின்றனர், இதுதான் கூட்டாட்சியா?" என்று தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விலைக்குறைப்பு தந்திரத்தின் சூட்சுமத்தை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் வெளியிட்டுவிட்டார். செஸ் வரியைக் குறைத்தால்தான் உண்மையான விலைக் குறைப்பு என்றும் அவர் சொல்லி இருக்கிறார். "ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கலால் வரியைக் குறைத்தால் அதில் 41 பைசா மாநிலங் களுக்குச் சொந்தமானது. ஒன்றிய அரசு ஒரு ரூபாய்க்கு 59 பைசாவையும், மாநில அரசு 41 பைசாவையும் குறைப்பதாகவே அர்த்தம். ஒன்றிய அரசு செஸ் வரியைக் குறைப்பதுதான் உண்மையான பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பாகும்" என்று அவர் சொல்லி இருக்கிறார்.

அதாவது குறைக்கும் தந்திரத்திலும் மாநிலத்தின் மடியில் கை வைத்து - அந்தப் பணத்தையும் சேர்த்து எடுத்து குறைத்திருக் கிறார்கள். மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் கலால் வரியைக் குறைத்து விட்டு - தாங்கள் ஏதோ தியாகம் செய்து விட்டதாக ஒன்றிய பா.ஜ.க. நினைத்துக் கொள்கிறது.

2006 - 11 வரையிலான திராவிட முன் னேற்றக் கழக ஆட்சியில் - முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தார். இப்போது கழகம் ஆட்சி அமைந்ததும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதிப்புக்கூட்டு வரியில் 3 ரூபாய் குறைப்பு செய்தார். இவை அனைத்தும் உண்மையான அக்கறையுடன் செய்யப்பட்டவை ஆகும். இன்றைக்கு பா.ஜ.க. அரசு செய்திருக்கும் விலைக் குறைப்பு நாடகமானது நாடு முழுவதும் இந்த ஆட்சிக்கு எதிராக எழுந்துள்ள கொந்தளிப்பை அடக்குவதற்காகச் செய்யப்படும் பம்மாத்து ஆகும்.

banner

Related Stories

Related Stories