முரசொலி தலையங்கம்

இந்தியாவும்.. தமிழ்நாடும்.. பணவீக்கம் குறைந்ததன் காரணம் என்ன? பட்டியலிட்ட முரசொலி தலையங்கம்!

பணவீக்கம் குறைந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்ததுள்ளது தொடர்பாக முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

இந்தியாவும்.. தமிழ்நாடும்.. பணவீக்கம் குறைந்ததன் காரணம் என்ன? பட்டியலிட்ட முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் அதிகமாகி உள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்துள்ளது. இதுதான் ‘திராவிட மாடலின்’ சாதனையாகும்!

இந்தச் சாதனை என்பது ஏதோ பொருளாதாரச் சாதனை அல்ல. சமூக- அரசியல் சாதனைதான் பொருளாதாரச் சாதனைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. அனைத்தையும் உள்ளடக்கியது திராவிட மாடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி வருவது இதனால்தான். ஒரு பொருளை வாங்குவதற்கு கடந்த ஆண்டு நீங்கள் செலவு செய்தது எவ்வளவோ - அதே பணத்தை வைத்து அதே பொருளை உங்களால் இப்போது வாங்க முடியாமல் போனால் அதுதான் பணவீக்கத்தின் அளவு ஆகும். கடந்த ஆண்டு 100 ரூபாய் வைத்து வாங்கப்பட்ட பொருள், இந்த ஆண்டு 110 ரூபாயானால் அதுதான் பணவீக்கம் ஆகும். இத்தகைய பணவீக்கமானது இந்தியா முழுமைக்குமாக சராசரி அடிப்படையில் பார்த்தால் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. அதாவது விலை வீக்கத்தின் அளவீடுதான் பணவீக்கம் ஆகும்.

ஏப்ரல் 2022க்கான தேசிய சராசரி பணவீக்கம் மார்ச் மாதத்தின் 6.2 சதவீதத்தில் இருந்து 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரம் வெளியாகி உள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம்தான் இதனை வெளியிட்டுள்ளது. இத்தகைய பணவீக்கமானது இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியானதாக இல்லை. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. ஏப்ரல் 2022 பணவீக்கம் மேற்கு வங்கம், தெலுங்கானா மற்றும் ஹரியானாவில் முறையே 9.12 சதவீதம், 9.02 சதவீதம் மற்றும் 8.98 சதவீதம்என உயர்ந்து உள்ளது. அது தமிழ்நாட்டிற்கு வெறும் 5.37 சதவீதமாகவும், கேரளாவில் 5.08 சதவீதமாகவும் உள்ளது. இதுதான் உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கது ஆகும். ஏப்ரல் மாதத்தில் மட்டும் நான்கு மாநிலங்களில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் பணவீக்கம் ஆனது கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தேசிய சராசரியை விட மிகக் கீழே குறைந்துள்ளது. தமிழகத்தில் பொதுமக்களின் உணவுப்பொருள் விலை குறைந்துள்ளதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம் என்று வர்த்தகச் செய்தி நிறுவனங்கள் எழுதுகின்றன.

இது குறித்து `பிசினஸ் லைன்’ எழுதிய கட்டுரையில், "தமிழகத்தில் முக்கிய உணவான அரிசியின் விலை கடந்த ஆண்டில் கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளது. மே 17, 2021 அன்று ஒரு கிலோ ரூ.52 ஆகவும், மே 17, 2021 அன்று ரூ.57 ஆகவும் இருந்தது. அதேபோல், தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ள உளுத்தம் பருப்பின் விலை கிலோவுக்கு ரூ.102 ஆக (கிலோ ரூ.128ல் இருந்து) குறைந்துள்ளது. துவரம் பருப்பு விலையும் 16.4 சதவீதம் சரிந்தது" என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடுத்ததாக அவர்கள் சுட்டிக்காட்டுவது தமிழக அரசால் பெண்களுக்கு வழங்கப்பட்ட இலவச பேருந்து பயணம் ஆகும். "எரி பொருளின் விலை உயர்வானது நாடு முழுவதும் எரியும் பிரச்சினையாக உள்ளது, தமிழகமும் வேறுபட்டதல்ல. இருப்பினும், சமீபத்திய தேசிய சுகாதாரம் மற்றும் குடும்பக் கணக்கெடுப்பின்படி (2019-21), மாநிலத்தின் மக்கள் தொகையில் 6.5 சதவீதம் பேர் மட்டுமே கார்களை வைத்துள்ளனர். 2021ஆம் ஆண்டின் மத்தியில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை அரசு அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து பேருந்து பயணத்தை தேர்வு செய்யும் பெண்களின் விகிதம் 40ல் இருந்து 61 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் - குறிப்பாக பெண்களின் போக்குவரத்துச் செலவு குறைந்துள்ளது" என்று அந்த இதழ் எழுதி இருக்கிறது.

அதாவது அவசியமான உணவுப் பொருள்களின் விலை குறைந்ததாலும்- பெரும்பான்மை பெண்களின் போக்குவரத்துச் செலவு முழுமையாக இல்லாமல் போனதாலும் - தமிழகத்தில் பணவீக்கமானது குறைந்துள்ளது. நாட்டின் பணவீக்கத்தை 6 சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்தி வைக்க ரிசர்வ் வங்கி இலக்கு வைத்துள்ளது. ஆனால் இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் அதிகமாகி வருகிறது. நாட்டில் உள்ள 26 மாநிலங்களில் சில்லரை பணவீக்கமானது 6 சதவிகிதத்துக்கும் மேல் அதிகமாகி உள்ளது. தமிழகத்தில், கேரளாவில் குறைந்து வருகிறது. "கல்வி, சுகாதாரம், சமூக நலத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பான குறியீடுகளை அடையும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் பணவீக்கம் குறைந்து வருகிறது" என்று வர்த்தக இதழ்கள் எழுதுகின்றன. தொழிலிலும், முதலீட்டிலும் வளர்ந்த மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களால் கூட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போவதற்கும்- தமிழ்நாடும் கேரளாவும் கட்டுப்படுத்தி வருவதற்குமான வேறுபாட்டை புரிந்து கொள்ளவேண்டும்.

‘அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்று திரும்பத் திரும்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்கிறார்கள். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்று முதலமைச்சர் அவர்கள் சொல்கிறார்கள். பல்லாயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டு - ஒற்றைத் தனிநபர் சம்பாதித்துப் போய்விடுவதால் மாநிலம் வளராது. அந்த முதலீட்டின் மூலமாக - அந்தப்பகுதி வளர வேண்டும். அந்த நிறுவனத்தின் மூலமாக பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கவேண்டும். அதன் மூலமாக பல லட்சம் குடும்பங்கள் பயனடைய வேண்டும். அதன் மூலமாகக் கிடைக்கும் பணம், சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். சமூகம் - கல்வி - பொருளாதாரம் - தொழில் - ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக ‘திராவிட மாடல்’ வளர்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வடிவமைத்து அதனை தனது ஆட்சியியல் தத்துவமாக முன்மொழிந்து வருகிறார். அது வெற்றியடையும் தத்துவம் என்பதற்கு உதாரணம்தான் பணவீக்கம் குறைவது ஆகும்!

banner

Related Stories

Related Stories