முரசொலி தலையங்கம்

“பலிபீடத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம்..” : மோடி அரசின் மத வெறுப்பு அரசியலை தோலுரித்த ‘முரசொலி’ !

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு இந்த வெறுப்பு அரசியல் அதிகமாக ஆனது. ‘ஒரே' என்ற முழக்கத்தைக் கையில் எடுத்து அது ஏதோ உன்னதமான தத்துவம் போல கட்டமைத்தார்கள்.

“பலிபீடத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம்..” : மோடி அரசின் மத வெறுப்பு அரசியலை தோலுரித்த ‘முரசொலி’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது வெறுப்புதான். வெறுப்பு அரசியலை விதைப்பதன் மூலமாக நாட்டின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. இதனை அரசியலில் - தேர்தலில் அவர்களுக்கு எதிர்களத்தில் நிற்பவர்கள் மட்டும் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி இருந்தால் அதற்குத் தேர்தல் - அரசியல் உள்நோக்கம் கற்பிப்பார்கள்.

இப்படிச் சொல்பவர்கள் இந்திய நீதித்துறையில் நீதியரசர்களாக பணியாற்றியவர்கள் - இந்திய அரசின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள்தான் இப்படிச் சொல்லி இருக்கிறார்கள்.

‘நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே பலிபீடத்தில் வைக்கப்பட்டுள்ளது போல் உள்ளது. அதிகரித்து வரும் வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்' என்று பிரதமர் மோடி அவர்களுக்கு 108 பேர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். முன்னாள் நீதியரசர்கள், முன்னாள் துணை நிலை ஆளுநர்கள், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், முன்னாள் வெளியுறவுச் செயலாளர்கள் - இக்கடிதத்தில் கையெழுத்துப் போட்டுள்ளார்கள். எனவே இது அநாமதேயக் கடிதம் அல்ல.

அண்மை காலமாக நாட்டில் வெறுப்புகள் மட்டுமே நிறைந்த ஒரு வெறித்தனத்தை காண்பதாக குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் மட்டுமல்ல; நாட்டில் அரசியல் அமைப்பு சட்டமே பலிபீடத்தில் வைக்கப்பட்டது போல் உள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள், இந்த சமூக அச்சுறுத்தலுக்கு எதிரான உங்களது மவுனம் காது கேளாதது போல உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இந்த வெறுப்பு அரசியல் புதிய பரிமாணத்தைப் பெற்றிருப்பதாக கூறியுள்ள முன்னாள் நீதிபதிகளும், அதிகாரிகளும் அரசியல் அமைப்பின் தனித்துவம் சிதைக்கப்படாமல் காக்கும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடிதத்தில் கையெழுத்திட்டிருப்போர் தங்களை அக்கறை உள்ள குடிமக்கள் என்று குறிப்பிட்டு இருப்பதோடு அதன் பின்னணியில் எந்த வித உள்நோக்கமும் இல்லை என கூறியுள்ளனர்.

முன்னாள் அரசு ஊழியர்களான தாங்கள் வழக்கம் போல இத்தகைய கடின வார்த்தைகளை பயன்படுத்துவது இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், அரசியல் சாசனத்தின் தனித்துவம் சிதைக்கப்படும் போது கோபம் மற்றும் வேதனையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது ஏதோ முதல்தடவையாக இப்படி எழுதி இருக்கிறார்கள் என்று நினைக்கக்கூடாது. சில மாதங்களுக்கு முன்பும் இப்படி எழுதினார்கள். எந்தப் பதிலும் பிரதமரிடம் இருந்தோ, பா.ஜ.க. தலைமையிடம் இருந்தோ வரவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் - அமேதி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் அடித்தே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்.

உன்னா என்ற ஊரில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் புகார் சொன்ன ஒரு பெண் மீது கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. அதனை விபத்தாக மாற்றிவிட்டார்கள். ‘இதுதான் பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலின் அடையாளம்' என்று எழுதி இருக்கிறார் யெச்சூரி.

வெறுப்பு அரசியல் என்பது வெறும்பேச்சாக மட்டும் இருப்பதாக யாரும் நினைத்துவிடக் கூடாது. அது வன்முறையாக கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டு இருக்கிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு இந்த வெறுப்பு அரசியல் அதிகமாக ஆனது. ‘ஒரே' என்ற முழக்கத்தைக் கையில் எடுத்து அது ஏதோ உன்னதமான தத்துவம் போல கட்டமைத்தார்கள்.

வெறுப்பு அரசியலின் ஒரே அடையாளமே இந்த ‘ஒரே' முழக்கம்தான்! பசுவதையைத் தடுக்கிறோம் என்ற பெயரால் சிறுபான்மை மக்களும், தலித்துகளும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். மாமிசம் வைத்திருந்தால் தாக்குவது என்பது சட்டரீதியான தாக்குதலாக அங்கீகரிக்கப்பட்டது.

மாட்டு வியாபாரிகள் இருவர், பொதுமக்கள் முன்னால் தூக்கிலிடப்பட்டார்கள். காவல்துறைக்கு இதுபோன்ற சம்பவங்களில் வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வேலை இல்லை என்பதே வடமாநிலங்களின் நிலைமை. மாட்டிறைச்சி என்பதற்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள் இப்போது இறைச்சியே கூடாது என்றும் கிளப்பி வருகிறார்கள். டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் - மோதலுக்கு காரணம் அதுதான்.

ஒரே நாளில் காஷ்மீர் மக்களின் தனி உரிமைகள் பறிக்கப்பட்டன. அங்கிருந்த அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். இவை அனைத்தும் ஜனநாயக முறைப்படிதான் நடந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தலை 80 சதவிகிதத்துக்கும் 20 சதவிகிதத்துக்குமான தேர்தலாக யோகி ஆதித்யநாத் சொன்னார். ஒரு குறிப்பிட்ட சாதி மக்களை கூட்டி வைத்துக் கொண்டு, ‘நீங்கள்தான் ஒரு காலத்தில் மொகலாயர்களை வீழ்த்தியவர்கள், அதேபோல இப்போதும் வீழ்த்த வேண்டும்' என்று ஒன்றிய அமைச்சர் ஒருவர் சொன்னார். இந்த வெறுப்பு அரசியலின் விதையில்தான் உ.பி.யின் வெற்றி சாத்தியம் ஆனது. அதனால் வெறுப்பு அரசியல் என்பது வெற்றிச்சூத்திரமாக பா.ஜ.க.வினரால் பார்க்கப்படுகிறது. இதையே கர்நாடகாவிலும் கடைப்பிடித்து மீண்டும் வெல்லப் பார்க்கிறார்கள்.

பல லட்சம் மக்கள் கூடும் ஆன்மிக - கோவில் ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் அமைதியாக நடக்கின்றன. ஆனால் சில நூறு பேர் கூடினாலும் வட மாநிலங்கள் பலவற்றிலும் - பல நேரங்களிலும் அது வன்முறையாகவே முடிகிறது. இதுதான் அவர்களது உள்நோக்கம் ஆகும். ஆன்மிகம் அமைதியாக நடந்து விடக்கூடாது, அரசியல் லாபம் தரக்கூடியதாக மாற்றப்பட வேண்டும் என்பதே அதனுள் இருக்கும் உள்நோக்கம் ஆகும்.

அசாம், டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராக வெறுப்பு வன்முறைகள் அதிகமாக நடக்கத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பா.ஜ.க. ஆளும் இத்தகைய மாநிலங்கள் வெறுப்பு அரசியலின் மையமாக உள்ளது. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதில் உள்ள அக்கறையை விட சிறுபான்மை மக்களை அச்சத்தில் வைத்திருக்கவே பா.ஜ.க. அரசு நினைக்கிறது. இவர்களது வெறுப்பின் இலக்குகளாக சிறுபான்மையினர், தலித்துகள், ஏழைகள் இருக்கிறார்கள்.

“இங்கு பலிபீடத்தில் இருப்பது சிறுபான்மையினர் மட்டுமல்ல; இந்திய அரசியலமைப்புச் சட்டமும்தான்'' என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஜஹாங்கீர்புரியில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி கட்டடங்கள் இடிக்கப்படுகிறது என்றால் பா.ஜ.க. தலைமையின் நீதி என்பது அவர்கள் கையில் இருப்பதாகத் தானே பொருள்?

‘அனைவர்க்குமான வளர்ச்சி, அனைவருடனும்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டார் பிரதமர் மோடி. அவர் சொன்ன அனைவர்க்கும் என்பதில் சிறுபான்மையினர் இல்லையா? தலித்துகள் இல்லையா? ஏழைகள் இல்லையா? மக்களே இல்லையா? ஒரு சிலர் வளர்வதுதான் பா.ஜ.க.வின் கனவு இந்தியாவா?

banner

Related Stories

Related Stories