முரசொலி தலையங்கம்

இஸ்லாமியர்க்கு மத அடிப்படையிலும் - தமிழர்களுக்கு இன அடிப்படையிலும் வஞ்சனை.. மீண்டும் ‘CAA’ - முரசொலி !

குடியுரிமைச் சட்டத்தை மீண்டும் எடுத்து வருவதற்கான வேலைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து வருவதாகத் தெரிகிறது.

இஸ்லாமியர்க்கு மத அடிப்படையிலும் - தமிழர்களுக்கு   இன அடிப்படையிலும் வஞ்சனை.. மீண்டும் ‘CAA’ - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசாங்கத்தால் ‘குடியுரிமைச் சட்டம்' தள்ளி வைக்கப்பட்டது. அதனை மீண்டும் எடுத்து வருவதற்கான வேலைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து வருவதாகத் தெரிகிறது.

‘குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியர்களின் உரிமையைப் பறிக்காது' என்ற தலைப்பிட்ட ஒரு செய்தி அறிக்கையை ஒன்றிய அரசு சில நாட்களுக்கு முன்னால் வெளியிட்டு இருக்கிறது. இதனைச் சொல்வது யார் என்றால், ஒன்றிய உள்துறை அமைச்சகம்தான் சொல்கிறது. அதாவது பா.ஜ.க. அரசின் நிலைப்பாட்டுக்கு விரோதமாக உள்துறை அமைச்சகம் சொல்லுமா என்ன?

ஏதோ ஒரு பொதுவான அமைப்பு சொன்னதைப் போல இந்த அறிக்கையை கசிய விட்டுள்ளார்கள். இதன் மூலமாக மறுபடியும் இதனை எடுத்துவரும் நோக்கம் ஒன்றிய அரசுக்கு இருப்பதைப் போலத் தெரிகிறது.

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டமானது 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. நாடு முழுவதும் அதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் இருந்தது. அதனால் கொஞ்சம் அமுக்கி வைத்தார்கள். இப்போது பெட்ரோல், டீசல் விலையும், சிலிண்டர்களின் விலையும், விலைவாசி உயர்வும் மிகக் கடுமையாகப் போய்க் கொண்டு இருக்கும் நிலையில் இது போன்ற சட்டத்தை மீண்டும் எடுத்து வந்தால் - ஜனநாயக சக்திகள் இதைப் பற்றி பேசிக் கொண்டு இருப்பார்கள், மற்றதை மறந்து விடுவார்கள் என்ற தந்திரமும் இதற்குள் இருக்கிறது. எத்தகைய சூழ்நிலையிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டமானது எதிர்க்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு.

அதனை மனதில் வைத்துத்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார். குடியுரிமைத் திருத்தச் சட்டமானது, மக்கள் விரோதச் சட்டம் என்பதால் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தி.மு.க. எதிர்த்து வாக்களித்துள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை தி.மு.க. நடத்தியது.

குடியுரிமைச் சட்டம் என்பதே ஒரு உன்னதமான சட்டம். ஒரு நாட்டில் வாழ முடியாமல் அகதிகளாக வருகின்றவர்களுக்கு வாழ்வு தரக்கூடிய உன்னதமான சட்டம். ஆனால் ஒன்றிய பா.ஜ.க. அரசு அமல்படுத்த நினைக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டமானது ‘குறுகிய' நோக்கம் கொண்ட சட்டமாகும். அனைவருக்கும் குடியுரிமை என்று சொல்லி இருந்தால் அதனை நாம் எதிர்க்கப் போவது இல்லை. சிறுபான்மையினரான இசுலாமியரைப் புறக்கணிக்கும் வகையில் குடியுரிமைச் சட்டத்தையே ஓரவஞ்சனை கொண்ட சட்டமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிவிட்டது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினரான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள், சமணர்கள், பவுத்தர்கள் இந்தியாவுக்குள் வரலாமாம். ஆனால் இசுலாமியர்கள் வரக்கூடாதாம். இதுதான் இந்தத் திருத்தச் சட்டமாகும். ஏன் இசுலாமியர்களை மதரீதியாக பிரித்துப் பார்க்கிறீர்கள் என்பதுதான் தொடக்கத்தில் இருந்து நாம் கேட்கும் கேள்வி. இதனால்தான் பொதுவானதாக இருக்க வேண்டிய ஒரு சட்டம் ‘மதரீதியாக' மாறுகிறது. இப்படி மத உள் நோக்கம் கொண்டது எப்படி அனைவர்க்கும் பொதுவான சட்டமாக ஆகும்?

இந்திய அரசை மதச்சார்பற்ற அரசு என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதன்படி பார்க்கும்போது மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்தச் சட்டத்தையும் கொண்டு வர முடியாது. ஆனால் அதனைத்தான் இன்றைய பா.ஜ.க. அரசு செய்கிறது. இந்த சட்டத்தில் இன்னொரு முக்கியமான ஓட்டை என்ன என்றால்... பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பாதிக்கப்படும் மக்கள் இந்தியாவுக்குள் வரலாம் என்றால் இலங்கையில் இருந்து மக்கள் வர என்ன தடை? இந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை புறக்கணிக்கப்பட்டது ஏன்? இந்தப் பட்டியலில் இலங்கை நாடு அல்லவா முதலில் இருந்திருக்கவேண்டும்? மத ரீதியாகவும், இன ரீதியாகவும் அதிகமான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் நாடு இலங்கை அல்லவா?

தமிழர்கள் பச்சைப் படுகொலைகள் செய்யப்பட்டார்களே இலங்கையில். தமிழர்கள் கட்டிய கோவில்கள் இடிக்கப்பட்டதே? அவை ‘இந்துக்கோவில்கள்' தானே? அது ஏன் பா.ஜ.க.வின் கண்ணுக்குத் தெரியவில்லை? இது ஈழத் தமிழர்க்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் அல்லவா? நாம் எழுப்பிய மிகமுக்கியமான கேள்வி இதுவாகும்.

அதுவும் இன்றைய சூழலில் இக்கேள்வி மிக முக்கியமானது ஆகும். அங்கு வாழ முடியாமல் தமிழ் மக்கள், தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். அவர்களுக்கு நம்மால் எந்த உதவியும் செய்ய இயலாது. இங்கும் அவர்கள் ‘அகதிகளாகவே' வாழ்ந்தாக வேண்டும். அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறோம் என்றால் இலங்கை அண்டை நாடு அல்லவா?

இலங்கையைப் புறக்கணித்தது ஏன்? மற்ற அண்டை நாட்டைச் சேர்ந்த ‘இந்துக்கள்' வரலாம் என்றால் ஈழத்தில் இருக்கும் தமிழர்களை ‘இந்துக்களாக' இந்த பா.ஜ.க. அரசு நினைக்கவில்லையா? ஈழத்தில் இருப்பவர்கள் இனத்தால் தமிழர்களாக இருந்தாலும் அவர்களது சமய நம்பிக்கை இந்து - சைவம் சார்ந்ததுதானே! அவர்களை திட்டமிட்டு புறக்கணித்திருப்பது ‘இந்து தமிழர்கள்' வேண்டாம் என்ற நினைப்புத் தானே?

ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த சட்டத்தை கருணை மிக்க சட்டம் என்று வர்ணித்துள்ளது. கருணை என்பது பாதிக்கப்பட்ட அனைவரையும் அரவணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர இசுலாமியர்களை நீக்கிய கருணையாக - ஈழத்தமிழர்களை நீக்கிய கருணையாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது கருணை அல்ல. கயமை ஆகும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் அண்டை நாடுகள் என்று எடுத்துக்கொண்டால் அதில் இலங்கை என்பதும் சேர்க்கப்பட வேண்டும். எந்த மதத்தினர் உள்ளே வரலாம் என்று மதரீதியாக பட்டியல் போடுவீர்களே ஆனால், அதில் இசுலாமியர்களும் சேர்க்கப்பட வேண்டும். - இவை இரண்டும் தான் நமது நிலைப்பாடு ஆகும்.

இசுலாமியர்க்கு மத அடிப்படையிலும் - தமிழர்களுக்கு இன அடிப்படையிலும் வஞ்சனை செய்வதுதான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகும். எனவே அந்த விபரீதச் சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டாம். ‘பயனில்லாத சட்டங்களை நீக்கி வருகிறோம்' என்று அடிக்கடி பிரதமர் அவர்கள் சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் அவரே நீக்கிவிட்டால் நல்லது.

banner

Related Stories

Related Stories