முரசொலி தலையங்கம்

“முத்தமிழின் அரசர் கலைஞருக்கு வரலாற்றுக் கடமையைச் செய்ய நினைக்கும் தமிழ்நாடு அரசு” : ‘முரசொலி’ பாராட்டு!

முத்தமிழின் அரசருக்கு தமிழ்நாடு அரசரின் மரியாதை என்பது, இருவரின் உயரத்தையும் எங்கோ தூக்கி நிறுத்தி இருக்கிறது.

“முத்தமிழின் அரசர் கலைஞருக்கு  வரலாற்றுக் கடமையைச் செய்ய நினைக்கும் தமிழ்நாடு அரசு” : ‘முரசொலி’ பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தினமும் 100 மதிப்பெண் வாங்குவது சிரமம். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தினமும் 100 மதிப்பெண் வாங்கி வருகிறார்கள். அரசியலில் அப்படி வாங்குவது மிகச்சிரமம். அதுவும் ஆட்சியில் இருக்கும் போது வாங்குவது மிகமிகச் சிரமம். ஆட்சியில் - முதலமைச்சராக இருக்கும் போது பெற்று வருகிறார். அதுவும் பன்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்று வருகிறார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறார். தகுதிசால் தலைவர் கையில் தமிழ்நாட்டரசு இருக்கிறது என்பதை நித்தமும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

‘தமிழர்களுக்குக் கிடைத்த பொக்கிஷம் தான் கலைஞர் கருணாநிதி’ என்று சொன்னவர் தந்தை பெரியார். யாரைப் பாராட்டினாலும் அவரால் தமிழ்ச் சமுதாயத்துக்கு என்ன பயன் என்ற ஒற்றை அளவுகோல் வைத்து அளந்து பாராட்டுவார் பெரியார். அத்தகைய பெரியார், ‘பொக்கிஷம்’ என்று சொன்னது தலைவர் கலைஞர் அவர்களைத்தான்!

பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு எத்தனையோ தம்பிமார்கள் உண்டு. ஆனால், ‘தமிழ்நாட்டின் பாதிச்சரித்திரத்தை நான் எழுதி விட்டேன், மீதியை என் தம்பி கருணாநிதி எழுதுவான்’ என்று கலைஞரைத்தான் தனக்கு அடுத்ததாக எடுத்து நிறுத்தினார் பேரறிஞர் அண்ணா அவர்கள். ‘ஒரு நாளைக்கு கலைஞர் கருணாநிதி எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்பதை மறைந்து நின்று பார்த்தால்தான் இந்த உயர்வுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு தெரியும்’ என்று கண்டு பிடித்துச் சொன்னவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

அத்தகைய தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்த நாளான சூன் - 3ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடுவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். அப்படி அறிவிப்பதற்கான காரணங்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்கள் அடுக்கடுக்காக வரிசைப்படுத்தி வரும் போது - தலைவர் கலைஞரின் 95 ஆண்டுகால வரலாறே கண்ணுக்கு முன்னால் விரிகிறது.

60 ஆண்டு சட்டமன்றம் அவரில்லாமல் இல்லை. ஓரிரு முறையல்ல, ஐந்து முறை இந்த நாட்டின் முதலமைச்சராக இருந்துள்ளார். இந்த ஐந்து முறையும் அவரால் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட ஒருசில திட்டங்களை தலைப்புச் செய்திகளாக முதலமைச்சர் அவர்கள் விவரித்தார்கள். தமிழகத் தலைவர்களோடு, அகில இந்தியத் தலைவர்களோடு, குடியரசுத் தலைவர்களோடு, இந்தியாவின் தலைமை அமைச்சர்களோடு என கலைஞர் அவர்களோடு பயணித்த ஆளுமைகள் அனைவர் பெயரையும் முதலமைச்சர் குறிப்பிட்ட போது - நம் மனக்கண் முன்னால் பரந்து விரிந்த இந்தியாவே விரிகிறது. அதாவது எல்லையற்றவராக இருக்கிறார் கலைஞர் அவர்கள்.

இதனைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு - அரசியல் ஆகிய இரண்டுமாக இருந்தார் என்று குறிப்பிட்டார்கள். “என்னிடம் இருந்து செங்கோலைப் பறிக்கலாம் - எழுதுகோலைப் பறிக்க முடியாது’’ என்று அவர் சொல்லிக் கொண்டார். செங்கோல் பறிக்கப்பட்டாலும் செங்கோலை வழிநடத்தும் எழுதுகோலை அவர்தான் வைத்திருந்தார்.

அரசு என்பது பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டாலும் - ஏற்றுக்கொள்ள முடியாமல் போனாலும் அவரிடம்தான் இருந்தது. அரசும் அரசியலும் அவரை இயக்கியது. அரசையும் அரசியலையும் அவரே இயக்கினார். இத்தகைய அரசு இயலின் - அரசியலின் மாபெரும் தலைவருக்கு இந்த அரசு தனது வரலாற்றுக் கடமையைச் செய்ய நினைக்கிறது.

“திருவாரூரில் முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் அவர்கள் பிறந்துதித்த பிறந்தநாளாம் சூன் 3 ஆம் நாளை அரசு விழாவாக இனிக் கொண்டாடும் என்பதை இம்மாமன்றத்தில் நெஞ்சில் விம்மும் மகிழ்ச்சியால் - இதயத்தில் துடிக்கும் எழுச்சியால் - சிந்தை அணுக்களில் வெளிப்படும் நன்றி உணர்வால் - அறிவிக்கிறேன்” என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்தபோது அவர் குரல் தழுதழுத்தது.

அவையில் பலரது கண்களிலும் நீர் கோர்த்தது. இது ஆனந்தக் கண்ணீர். கோடிக்கணக்கான குடும்பங்களின் தலைவர்தான் கலைஞர் அவர்கள். அவரால் படித்தவர்கள், அவரால் உயந்த நிலையை அடைந்தவர்கள், அவரால் வேலை வாய்ப்பைப் பெற்றவர்கள், அவரது திட்டங்களின் மூலமாக பயனடைந்தவர்கள், அவர் போட்ட அரசாணைகளின் மூலமாக பலனடைந்தவர்கள் - என வாழும் தமிழ்மக்கள் அனைவரின் சார்பாக இந்த மகத்தான செயலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் செய்துள்ளார்கள்.

அதனால்தான் ‘நன்றியின் அடையாளமாக’ என்ற சொல்லை - வரலாற்றுக் கடமையாக என்ற சொல்லை முதலமைச்சர் அவர்கள் பயன்படுத்தினார்கள். ‘நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்ட வேண்டியதே’ என்றார் பெரியார். அதனைத்தான் கோடிக்கணக்கான குடும்பங்களின் தலைவராக இப்போது இருக்கும் முதலமைச்சர் அவர்கள் செய்து காட்டி இருக்கிறார்கள்.

முத்தமிழின் அரசருக்கு தமிழ்நாடு அரசரின் மரியாதை என்பது, இருவரின் உயரத்தையும் எங்கோ தூக்கி நிறுத்தி இருக்கிறது.

banner

Related Stories

Related Stories