சினிமா

மீண்டும் வெடித்த ‘இந்தி சர்ச்சை’ : அஜய் தேவ்கன் - சுதீப் கருத்து மோதலால் பரபரப்பு!

இந்தி விவகாரம் தற்போது சமூக வலைதளங்களிலும், இந்திய திரையுலகிலும் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது.

மீண்டும் வெடித்த ‘இந்தி சர்ச்சை’ : அஜய் தேவ்கன் - சுதீப் கருத்து மோதலால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அஜய் தேவ்கன் - கிச்சா சுதீப் கருத்து மோதல் விவகாரம் தற்போது சமூக வலைதளங்களிலும், இந்திய திரையுலகிலும் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது.

KGF - 2 படத்தின் வெற்றி குறித்து பட விழா ஒன்றில் பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப், இனிமேலும் இந்தி மொழியை தேசிய மொழி எனச் சொல்ல வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

“ஒரு கன்னட படம் பான்-இந்தியா படமாக எடுக்கப்பட்டது என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் ஒரு சிறிய திருத்தம், இந்தி இனி தேசிய மொழி அல்ல. பாலிவுட்டும் பல பான்-இந்தியா திரைப்படங்களைத் தயாரிக்கிறது.

அவை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடப்படுகின்றன. ஆனால் வெற்றி பெற போராடுகின்றன. இன்று நாம் எங்கு வேண்டுமானாலும் ஓடக்கூடிய படங்களைத் தயாரித்து வருகிறோம்” எனப் பேசினார்.

அவருக்கு பதில் அளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், “உங்களை பொறுத்தவரை இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய்மொழிப் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? எப்போதும் இந்தி தான் நமது தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும்” என ட்வீட் செய்தார்.

அதற்கு பதிலளித்த சுதீப், "நீங்கள் இந்தியில் எழுதிய பதிவு எனக்கு புரிந்தது. நாங்கள் இந்தி மொழியை நேசித்து கற்றுக்கொண்டோம். ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலை என்னவாகும்? நாங்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்லவா” எனக் குறிப்பிட்டார்.

அஜய் தேவ்கன் பதிவுக்கு சுதீப் அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். இதையடுத்து இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜய் தேவ்கன் ட்வீட் செய்துள்ளார்.

அஜய் தேவ்கனின் ட்வீட்டில், “வணக்கம் சுதீப், நீங்கள் ஒரு நண்பர். தவறான புரிதலை சரி செய்தமைக்கு நன்றி. நான் எப்போதும் சினிமா துறையை ஒன்றாகத்தான் நினைக்கிறேன். நாங்களும் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம், எங்கள் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை, மொழிபெயர்ப்பில் ஏதோ குறை இருந்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களிலும், இந்திய திரையுலகிலும் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. “இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இல்லவே இல்லை, அலுவல் மொழியே உண்டு” என்று எத்தனை முறை விளக்கினாலும் அதுகுறித்த சர்ச்சை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories